You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உக்ரைனில் பெண் ராணுவ வீரர்கள் ஹீல்ஸ் ஷூ அணிந்து அணிவகுப்பு நடத்த யோசனை - வெடித்த சர்ச்சை
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம், ராணுவ பூட்ஸ்களை அணிந்து அணி வகுப்பு நடத்துவதற்கு பதிலாக, பெண் ராணுவ வீரர்கள் ஹீல்ஸ் ஷூ அணிந்து ராணுவ அணி வகுப்பு நடத்தலாம் என யோசனையை முன் வைத்திருக்கிறது.
இந்த திட்டத்துக்கு பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இது ஒரு விதமான பாலின பாகுபாடு, இது சமத்துவம் அல்ல எனக் கூறியுள்ளார் எதிர்க் கட்சியைச் சேர்ந்த இரியானா கெரஸ்சென்கோ.
உக்ரைன் வரும் ஆக்ஸ்ட் 24ஆம் தேதி, சுதந்திரமடைந்து 30 ஆண்டுகள் நிறைவு செய்வதை முன்னிட்டு ஒரு ராணுவ அணிவகுப்புக்கு தயார் செய்து கொண்டிருக்கிறது. அந்த அணிவகுப்பில்தான் பெண் ராணுவ வீரர்கள் ராணுவ பூட்ஸை அணிவதற்கு பதிலாக ஹீல்ஸ் ஷூ அணிந்து அணிவகுப்பில் நடக்கும் யோசனை முன் வைக்கப்பட்டது.
ராணுவ பூட்ஸ் என்பது, ராணுவ சீருடையில் ஓர் அங்கம் என உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகமே கூறுகிறது.
இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பலரும் தங்கள் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்ட்ரே தாரா, இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் எதிர்ப்புக் குரல் எழுப்பியுள்ளனர்.
"பெண்கள் ஹீல்ஸ் அணிந்து கொண்டு அணிவகுப்பு நடத்துவது என்பது உண்மையிலேயே அவர்களை இழிவுபடுத்தும் ஒரு விஷயம்" என வர்ணனையாளர் விடலே பொர்ட்னிகோவ் தன் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். மேலும், சில அதிகாரிகள் மத்திய கால மனநிலையில் இருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
பெண்கள் ராணுவ உடையில், ஹீல்ஸ் அணிந்து கொண்டு அணிவகுப்பு பயிற்சி மேற்கொள்வது போலியானது எனக் கருதினேன் என்கிறார் இரியானா கெரஸ்சென்கோ.
இது பாலின பாகுபாட்டையும், சமத்துவமற்ற சூழலையும் காட்டுகிறது. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம், பெண்களுக்கென்றே பிரத்யேகமாக பாதுகாப்பு கவச உடையை வடிவமைப்பதற்கு பதிலாக, ஹீல்ஸ் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதுவது ஏன் என தான் வியப்பதாகவும் கூறியுள்ளார் இரியானா கெரஸ்சென்கோ.
ராணுவ அணிவகுப்பு என்பது அந்நாட்டு ராணுவத்தின் வலிமையைக் காட்டுவதாக இருக்க வேண்டும். ஆனால் ஹீல்ஸ் அணிந்து அணிவகுப்பு நடத்துவது என்பது அவர்களை கவர்ச்சியாக காட்டுவது போல் அமைகிறது என பெண் ராணுவ வீரர் மரியா பெர்லின்ஸ்கா கூறுகிறார்.
13,500 பெண்கள் கிழக்கு உக்ரைன் பகுதியில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளோடு போராடினார்கள்.
31,000 பெண்கள் தற்போது உக்ரைனின் பாதுகாப்புப் படைகளில் சேவை செய்து வருகிறார்கள். இதில் 4,000 பெண் அதிகாரிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- பிலிப்பைன்ஸ் ராணுவ விமானம் நொறுங்கி 17 பேர் பலி - பலர் தப்பினர்
- இளம் வயதினர் தலைமுடியை பிடுங்குவது, நகம் கடிப்பது மனநல பிரச்னையா? தீர்வு என்ன?
- இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?
- இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக பிரேசிலில் போராட்டம் ஏன்?
- இருப்பது 2 வெள்ளை காண்டாமிருகம், இரண்டுமே பெண்: இந்த இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்