You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிலிப்பைன்ஸ் ராணுவ விமான விபத்தில் உயிரிழப்பு 50 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் ராணுவத்தின் போக்குவரத்து விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையை கடந்து சென்று ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
டஜன் கணக்கானவர்கள் இந்த விபத்தில் உயிர் தப்பியுள்ளனர்.
நாட்டின் தென் பகுதியில் உள்ள ஜோலோ தீவில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு (கிரீன்விச் சராசரி நேரப்படி காலை 3.30) இந்த விபத்து நடந்துள்ளது.
ஜோலோ தீவில் உள்ள விமான ஓடு பாதையின் எல்லையைக் கடந்து இந்த விமானம் ஓடியபோது இந்த விபத்து நேரிட்டது. அப்போது விமானத்தில் 92 பேர் இருந்தனர்.
விபத்து நடந்த இடத்தில் உடனடியாக 17 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உயிர் பிழைத்தவர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறைந்தது 50 என்று பிறகு தெரியவந்தது.
C130 ஹெர்குலஸ் என்ற இந்த விமானம் விபத்தில் சிக்கிய இடத்துக்கு மேலே பெரிய அளவுக்கு கரும்புகை சூழ்ந்தது.
பல கட்டுமானங்கள் உள்ள பகுதிக்கு அருகே, மரங்களுக்கு மத்தியில் விமான பாகங்கள் எரிந்துகொண்டிருப்பதைக் காட்டும் படங்களை அரசு செய்தி முகமை பகிர்ந்துள்ளது.
விபத்து நடந்த இடம் ஜோலோ நகரத்துக்கு சில கிலோ மீட்டர் அருகே அமைந்துள்ளது. நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மின்டானோ தீவில் உள்ள ககயான் டீ ஓரோ என்ற இடத்தில் இருந்து ராணுவத் துருப்புகளை ஏற்றிக்கொண்டு இந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டுள்ளது.
"விமானம் ஓடுபாதையை விட்டு விலகிவிட்டது. அதை சரி செய்ய முயன்றது. ஆனால் முடியவில்லை," என ஆயுதப்படைகளின் தலைவர் ஜெனரல் சோபஜனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
விமானத்தில் இருந்தவர்கள் யார்?
தெற்கு பிலிப்பைன்சில் அபு சய்யாஃப் போன்ற இஸ்லாமியவாத தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக ராணுவம் தனது துருப்புகளை அங்கே அதிகரித்துள்ளது. அப்படி அதிகரிக்கப்பட்ட துருப்புகளின் ஒரு பகுதியே விபத்தை சந்தித்த சிப்பாய்கள்.
விமானம் தாக்கப்பட்டதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப் பணிகள் முடிந்தவுடன் புலன்விசாரணை தொடங்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
விமானத்தில் இருந்த அனைவரும் மிக சமீபத்தில்தான் அடிப்படை ராணுவப் பயிற்சியை முடித்தவர்கள் என்கிறது ஏ.எஃப்.பி. செய்தி முகமை.
பிற செய்திகள்:
- இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?
- இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக பிரேசிலில் போராட்டம் ஏன்?
- தமிழ்நாடு மாற்றுத் திறனாளியின் 'அமால் டுமால்' ஆட்டோ: ஒரு நம்பிக்கை கதை
- ஆமிர் கான் - கிரண் ராவ்: 15 ஆண்டு கால திருமண உறவு முறிகிறது
- இருப்பது 2 வெள்ளை காண்டாமிருகம், இரண்டுமே பெண்: இந்த இனத்தைக் காப்பாற்ற வினோத முயற்சி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்