மியான்மர் கொலைகள்: அவளது பெயர் மெல்லிய பூ; தாயின் கண்ணெதிரே கொல்லப்பட்ட சிறுமி

மியான்மரில் கொல்லப்பட்டவர்கள்
படக்குறிப்பு, மியான்மரில் கொல்லப்பட்டவர்கள்

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு 700-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக அரசியல் கைதிகளுக்கு உதவும் தன்னார்வ அமைப்பு கூறுகிறது. கொல்லப்பட்டவர்களின் அன்புக்குரியவர்களிடம் பிபிசி பேசியதில் உருக்கமான தகவல்கள் கிடைத்தன.

மியான்மரில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்து கொண்டிருப்பது போலவே, கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் ராணுவத்துக்கு எதிரான போராட்டங்களின் பங்கேற்றவர்கள். பலர் குழந்தைகள். ஏதும் அறியாமல் வீடுகளில் இருந்தவர்கள். இதோ... 3 குடும்பத்தினர் கூறும் கதைகள்.

டிக்டாக்கில் ஜனநாயக பாடலைப் பாடிய சிறுமி

பான் இ பியூவுக்கு 14 வயது. ஜனநாயகத்துக்கு ஆதரவானவர். டிக் டாக்கில் ஜனநாயகத்தை ஆதரித்துப் பாடுவார். தாய் திண்டா சானுக்கு அவரை நினைத்துக் கவலை. தெருவில் நடக்கும் போராட்டங்கள் எதற்கும் போவதில்லை. ஆனால் அந்த முன்னெச்சரிக்கை மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை.

தனது வீட்டில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பான் இ பியூ

பட மூலாதாரம், COURTESY OF FAMILIES

படக்குறிப்பு, தனது வீட்டில் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட பான் இ பியூ

கடந்த மார்ச் 27 ஆம் தேதி இரவு தப்பியோடும் போராட்டக்காரர்களை வீடு வீடாகத் தேடிக் கொண்டிருந்தது ராணுவம். தப்பி வந்தவர்களுக்கு கதவைத் திறந்தபோது வீட்டுக்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார். அது சமீபத்திய அடக்குமுறைகளில் மோசமான நாள். அன்று மட்டும் 11 குழந்தைகள் உள்பட 114 பேர் கொல்லப்பட்டனர்.

பான் இ பியூவின் தாய் திண்டா சான் இந்தத் திடீர் இழப்பை எதிர்பார்க்கவில்லை. "திடீரென அவள் கீழே விழுந்தாள். நான் வழுக்கி விழுகிறாள் என்று நினைத்துக் கொண்டேன். பிறகுதான் அவளது முதுகுப்புறத்தில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருப்பதை உணர்ந்தேன்" என்று பிபிசியிடம் அவர் கூறும்போது கண்களில் நீர் ததும்பி இருந்தது.

பர்மிய மொழியில் "பான்" என்றால் பூ என்று பொருள். "இ" என்றால் மென்மை. பியூ என்பது வெண்மையைக் குறிக்கும்.

"பிறக்கும்போது எனது மகள் அழகாக, ஒரு மெல்லிய பூவைப் போல இருந்தாள். அதனால்தான் இந்தப் பெயரை வைத்தேன்" எனக் கூறிக் கரைந்தார் திண்டா.

வளர்ந்து வயதாகும்போது ஆதரவற்றோருக்கான இல்லம் திறக்க வேண்டும் என்ற கனவை பானுக்கு இருந்ததாகவும் அவர் கூறினார்.

"எனது மகள் இல்லாமல் நான் வாழ்வது வீண். அவளுக்குப் பதில் நான் இறந்திருக்க வேண்டும்" என்ற அவரது குரலில் வலி தெரிந்தது.

பான் கொல்லப்பட்டது அவரது 10 வயது சகோதரனையும் பாதித்திருக்கிறது. அன்று இரவு முழுவதும் அவரது டிக்டாக் வீடியோக்களை பார்த்தபடியே தூங்காமல் விழித்திருந்ததாக திண்டா கூறினார்.

"இனி எங்கள் வாழ்வுக்குப் பாதுகாப்பு இல்லை" என்று கூறிய திண்டா, வேறொரு வீட்டுக்கு மாறிவிட்டார்.

"என் மகனின் உடல் முழுவதும் ரத்தம்"

ஸின் மின் டெட்

பட மூலாதாரம், COURTESY OF FAMILIES

படக்குறிப்பு, ஸின் மின் டெட் அவரது குடும்பத்தில் மிகவும் இளையவர். ஒரே மகன்.

தனது நண்பர்களுக்காக எதையும் செய்வார் ஸின் மின் டெட்.

"அவருக்கு நல்ல மனம். எவ்வளவு பணச் சிக்கல் இருந்தாலும், நண்பர்களுக்கு கொடுத்து உதவுவார். சிரித்த முகத்துடன் இருப்பார்." என்று நினைவுகூர்கிறார் அவரது நண்பர் கோ சாய்.

ஸின் மின் இப்போது இல்லை. மார்ச் 8-ஆம் தேதி ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் முன் வரிசையில் நின்ற அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஸின் மின் சுடப்பட்டது தெரிந்ததும் அவரது தாய் டாவ் ஓன் மா மருத்துவமனைக்கு விரைந்தார்.

"அவன் என்னைக் கடைசியாக ஒருமுறை அம்மா என்று அழைப்பதைக் கேட்க ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை. உடல் எங்கும் ரத்தம். அவனைப் பார்க்கவே எனக்குத் துணிவில்லை. உடலை வீட்டுக்கு எடுத்த வருவதைத் தவிர வேறு ஒன்றும் எனக்குத் தோன்றவில்லை" என்றார் மா.

தனது மகன் பணம் சம்பாதித்து வீடு வாங்கப் போவதாக உறுதியளித்ததையும் கண்ணீருடன் நினைவுகூர்கிறார் அந்தத் தாய்.

"என் மகனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவன் நாட்டுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று விரும்பினார்" என்றார் அவர்.

மனைவி முன்னே கொல்லப்பட்ட டாக்சி டிரைவர்

ஹெய்ன் துத் ஆங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மக்கள்

பட மூலாதாரம், COURTESY OF FAMILIES

படக்குறிப்பு, ஹெய்ன் துத் ஆங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் மக்கள்

ஹெய்ன் துத் ஆங் மற்றும் அவரது மனைவி மா ஸின் மார் ஆகிய இருவரும் ராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பது வழக்கம்.

பிப்ரவரி 8-ஆம் தேதியும் அப்படியொரு போராட்டத்துக்குத்தான் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் வீடு திரும்பியது மனைவி மான் ஸின் மார் மட்டும்தான்.

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் இருவரும் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தது. அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினார்கள்.

"சாலையைக் கடக்கும்போது அவர் மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது" என்று பிபிசியிடம் தெரிவித்தார் மா ஸின் மார்.

"மார்பு முழுவதும் ரத்தம். அவர் வலியால் கதறினார். துளையில் கைவைத்து ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த முயன்றேன்"

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது ஆங் உயிருடன் இல்லை.

ஹெய்ன் துத் ஆங் மோட்டார் சைக்கிள் டாக்சி டிரைவர். அதனால் உள்ளூர்க்காரர்கள் அனைவருக்கும் அவரைத் தெரியும்.

"அவர் மிகவும் எளிமையானவர். அடுத்தவர்களிடம் அதிகம் பேசமாட்டார். கிடைக்கும் வருவாயில் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வார்"

இருவருக்கும் ஆன்லைனில் சந்தித்து காதல் கொண்டார்கள். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன.

கணவரைப் பறிகொடுத்த பிறகும் மா ஸின் மார் அமைதியாக இருக்க விரும்பவில்லை. ராணுவத்துக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து பங்கெடுக்கப் போவதாகக் கூறுகிறார்.

"நாங்கள் நிறுத்தப் போவதில்லை. பின்வாங்கவும் மாட்டோம். அப்படிச் செய்தால் இன்னும் அதிகம் பேரைப் பறிகொடுக்க வேண்டியிருக்கும்"

(பிபிசி பர்மிய சேவை மற்றும் கிரேஸ் ட்ஸோயிடம் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி இந்த செய்தி வழங்கப்படுகிறது)

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: