You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே சிதறி விழுந்த விமானத்தின் பாகங்கள்
அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தின் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடுவானில் இன்ஜின் செயலிழந்ததால், கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வருக்கு அருகில், குடியிருப்புப் பகுதியில் அந்த விமானத்தின் இன்ஜின் பாகங்கள் சிதறி விழுந்தன.
எனினும், போயிங் 777 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில் இருந்த 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறங்கினர். யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ப்ரூம்ஃபீல்ட் நகர காவலர்கள், விமான இன்ஜினின் முன் பக்கத்தில் இருக்கும் வளையம் போன்ற ஒரு பாகம், ஒரு வீட்டின் முன் தோட்டத்தில் விழுந்து கிடந்ததைப் படம் பிடித்திருக்கிறார்கள்.
விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒரு பெரிய வெடிச் சத்தம் கேட்டது என விமானப் பயணிகள் இன்ஜின் செயலிழப்பை விளக்கினர்.
நேற்று (பிப்ரவரி 20, சனிக்கிழமை) உள்ளூர் நேரப்படி, மதியம் 1.00 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்தது.
யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த விமானம், டென்வர் விமான நிலையத்தில் இருந்து, ஹவாய் மாகாணத்தில் இருக்கும் ஹோனுலுலு தீவை நோக்கி புறப்பட்டது.
விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் வலதுபுறத்தில் உள்ள இன்ஜின் செயலிழந்துவிட்டது என எஃப்.ஏ.ஏ என்றழைக்கப்படும் அமெரிக்க விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கூறியுள்ளது.
விமானத்தில் பெரு வெடிப்பு ஏற்பட்டபோது, விமானி ஏதோ அறிவித்துக் கொண்டிருந்தார் என விபத்து நடந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஏ.பி செய்தி முகமையிடம் கூறினார்.
"விமானம் மிக அதிகமாக அதிர தொடங்கியது, விமானம் சட்டென கீழே இறங்கத் தொடங்கியது" என டேவிட் டெலுசியா என்பவர் கூறினார்.
ஒருவேளை விமானம் தரையில் விழுந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டால், தானும் தன் மனைவியும் அடையாளம் காணப்பட வேண்டும் என, அவரவர்களின் பணப் பைகளை தங்கள் பாக்கெட்டில் வைத்ததாகக் கூறினார் டேவிட்.
இந்த விமானம் விபத்துக்குள்ளாகி புகையோடு பறந்த படங்கள் இணையத்தில் வைரலாகி இருக்கின்றன. விமானத்துக்குள் எடுக்கப்பட்ட ஒரு காணொளி, விமானத்தின் இன்ஜின் தீ பிடித்து எரிந்ததை காட்டுகிறது.
விமானத்தின் இன்ஜினின் பாகங்கள் விழுந்ததை, மக்கள் அப்புறப்படுத்த வேண்டாமென ப்ரூம்ஃபீல்ட் காவலர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். எஃப்.ஏ.ஏ மற்றும் நேஷனல் டிரான்ஸ்போர்டேஷன் சேஃப்டி போர்ட் ஆகிய அமைப்புகள் இந்த விபத்து குறித்த விசாரணையை மேற்கொள்வார்கள்.
வானிலிருந்து விமானத்தின் பாகங்கள் கீழே விழும் போது பார்த்ததாகவும், தன் குழந்தைகளோடு பாதுகாப்பான இடத்துக்குச் சென்றதாகவும், ப்ரூம்ஃபீல்டைச் சேர்ந்த ஒருவர் சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
"திடீரென ஒரு பெருஞ்சத்தம், மேலே பார்த்தால் வானத்தில் ஒரே கரும்புகை. விமானத்தின் பாகங்கள் கீழே விழுவதைப் பார்த்தேன். அப்போது அது மிதந்து கொண்டே கீழே வருவது போலத் தெரிந்தது. அதிக கனமில்லாதது போலத் தெரிந்தது. ஆனால் கீழே விழுந்த பின் இப்போது அதைப் பார்த்தும் போது மிகப் பெரிய இரும்புத் துண்டுகளாக இருக்கின்றன" எனக் கூறினார் கெய்ரன் கெய்ன்.
கடந்த ஜனவரி மாதம் இந்தோனீசியாவின் ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்தின் போயிங் விமானம் விபத்துக்கு உள்ளாகி சுமார் 60 பேருக்கு மேல் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: