You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: மகாராஷ்டிராவில் கோவிட்-19 நோயாளிகள் பெருக 7 காரணங்கள்
- எழுதியவர், மயாங் பகவத்
- பதவி, பிபிசி மராத்தி
கடந்த சில நாட்களாக, மகாராஷ்டிராவின் மும்பை, புனே, விதர்பா ஆகிய பகுதிகளில் உள்ள சில மாவட்டங்களில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. கிராமப்புறங்களில் இந்த நோய் வேகமாக பரவி வருவது அந்த மாநிலத்தவரை மிகவும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
மாநிலத்தின் துணை முதல்வரான அஜித் பவார், அமராவதி, அகோல, யவத்மால் உள்ளிட்ட பகுதிகளுக்கு மீண்டும் பொது முடக்கம் போட அரசு யோசித்து வருவதாக கூறுகிறார்.
வஷிம், வர்தா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 12ஆம் தேதி முதல், மும்பையில் மட்டும் 4891 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
ஆனால், இவ்வாறு கொரோனா வேகமாக பரவ என்ன காரணம்? இது குறித்த வல்லுநர்களிடம் நாங்கள் பேசினோம்.
1. அரசு இயந்திரம் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரிப்பதில் தாமதம்
கோவிட் - 19 ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவும் குணமுடைய நோய். அதனால், கொரோனாவால் பாதிகப்பட்ட நோயாளியுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டுபிடிப்பது என்பது அத்தியாவசியமாகிறது.
கொரோனா தொற்று ஆரம்பித்திருந்த காலத்தில், இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் குறித்து மிகவும் துரிதமாக சுகாதாரத்துறை கவனித்தது.
"கொரோனா பாதித்தவர்களுடன் பழகிய மக்களில், இந்த நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளவர்களை கண்டறிவது மிகவும் முக்கியம். ஆனால், அமராவதி பகுதியில் அரசு மிகவும் பொறுமையாக தனது பணியை செய்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்ல இதுவும் ஒரு காரணம்" என்று, இந்திய மருத்துவ அமைப்பின் முன்னாள் இயக்குநரான மருத்துவர் டி.சி.ரத்தோட் பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த 12ஆம் தேதி முதல், அமராவதி பகுதியில் மட்டும் 3,000 புதிய நோயாளிகள் கண்டறிப்பட்டுள்ளனர். கடந்த 18ஆம் தேதி மட்டும் 542பேர் கண்டறிப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தின் சில பகுதிகள், அதிக நோயாளிகள் கொண்ட தீவிர பகுதியாக மாறி வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அங்கு ஊரடங்கு உத்தரவும் அரசால் போடப்பட்டுள்ளது; சனிக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை காலை வரை ஊரடங்கு போடப்படுகிறது.
"முன்பு மக்கள் மிகவும் கவனமாக இருந்தனர், சட்டங்களை மதித்தனர். தற்போது மக்கள் சட்டங்களை மீறுகிறார்கள்" என்றும், இதுவும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க உதவுகிறது என்கிறார் மருத்துவர் ரத்தோட்.
2. முழு வீச்சில் நடக்கும் திருமணங்கள்
நாட்டின் பொது முடக்கத்தில் தளர்வுகள் கொண்டு வரப்பட்ட பின்பு, ஊருக்குள் முழு வீச்சில் திருமண நிகழ்வுகள் நடக்கின்றன. திருமணங்களில் பங்கேற்க 50 பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டாலும், பெரும்பான்மையான நேரங்களில் அந்த எண்ணிக்கை மீறப்படுகிறது. இதுவும் கொரோனா அதிகரிக்க ஒரு காரணம்.
"மராட்வாடா மற்றும் விதர்பா பகுதிகளில் திருமண நிகழ்வுகள் முழுவீச்சில் நடக்கின்றன. கொரோனாவிற்கு முன்பு நாம் வாழ்ந்தது போல, பெரிய கூட்டமே திருமணத்தில் பங்கேற்கிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும்." என்கிறார், மகாரஷ்டிராவின் கோவி தாக்குதல் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மருத்துவ குழுவின் தலைவரான மருத்துவர் பிரதிப் அவதே.
மும்பை மற்றும் பிற மாவட்டங்களில் திருமண நிகழ்வுகளுக்கான சில தடைகள் போடப்பட்டுள்ளன.
மும்பை நகராட்சியின் கூடுதல் ஆணையரான சுரேஷ் ககனி கூறுகையில்," நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 50 பேருக்கு மட்டுமே அனுமதி. அதற்கு மேல் எங்காவது கூட்டத்தை பார்த்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்."
"என் அண்டை வீட்டுக்காரரின் வீட்டில் திருமணம் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த சில நாட்களிலேயே புது மணப்பெண்ணிற்கும், வீட்டில் இருந்த சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது" என்று நம்மிடம் கூறினார், பெயர் வெளியிட விரும்பாத ஒரு மருத்துவர்.
திருமண நிகழ்ச்சிகளுக்கு தகவல் அளிக்காமல் ஆய்வு செய்ய போகுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள மாநகராட்சி, சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளது.
3. கிராமப்பஞ்சாயத்து தேர்தல்கள் ஒரு காரணமா?
கடந்த ஜனவரி மாதம், 14,000 -த்திற்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல்ந் நடைபெற்றது. கிராமப்புறங்கள் முழுவதும் பிரசாரங்கள் நடைபெற்றன. மக்கள் அதில் கலந்துகொண்டதோடு, ஓட்டு போடவும் பெருமளவில் சென்றார்கள்.
இந்த தேர்தல் கூட ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார் மருத்துவர் பிரதீப் அவதே.
"நகரத்தில் இருந்தவர்கள், வாக்களிப்பதற்காக தங்களின் கிராமங்களுக்கு சென்றார்கள். பிரசாரங்கள் முழு வீச்சில் நடந்தன. மக்கள் ஒன்று சேர்ந்து சமூகத்தில் பழகினர். அமராவதி மற்றும் சதாரா ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் கொரோனா நோய் அதிகரித்து வருகிறது."
இந்த இடங்களிலெல்லாம்தான் சமீபத்தில் தேர்தல் நடந்தன என்பது கவனிக்க வேண்டிய ஒன்று என்கிறார் அவர்.
இதுகுறித்து பேசிய இந்திய மருத்துவ அமைப்பின் துணைத்தலைவர் மருத்துவர் அனில் பஞ்சனேக்கர், "உள்ளூர் ரயில் சேவையை மட்டும், கொரோனா அதிகரிக்க காரணம் என்று சொல்லிவிட முடியாது. அரசியல் தலைவர்கள், பெரிய பேரணிகளையும், நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கிறார்கள். மக்களுக்கு இதற்கு மேலும் கோவிட் மீது பயமில்லை. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் நகராட்சி தவறுகிறது." இப்படி பல காரணங்கள் உள்ளன.
4. முக கவசம் அணியாமல் இருப்பது
பொது இடங்களுக்கு வரும்போது, மக்கள் முகக்கவசத்தை முகத்திற்கு கீழேயோ, கழுத்தில் மாட்டியபடியோ, கையில் வைத்துக்கொண்டோதான் வருகிறார்கள். பலர் முகக்கவசம் இல்லாமல் இருப்பதையும் பார்க்க முடிகிறது.
இது குறித்து பேசிய மூத்த மருத்துவரான, மருத்துவர் பதமகர் சோவஷினி, "தனிநபர் மற்றும் சமூகத்தின் பாதுகாப்பிற்கு முகக்கவசம் மிகவும் முக்கியம். ஆனால், இதை மக்கள் மறந்துவிட்டதைப் போல தெரிகிறது. காவல்துறையின் நடவடிக்கைகளை தடுப்பதற்கு மட்டுமே மக்கள் முகக்கவசம் அணிகின்றனர். முகக்கவசம் அவர்களின் பாதுகாப்பிற்கானது என்பதை, அவர்கள் புரிந்துகொண்டதாக தெரியவில்லை."
மக்கள் முகக்கவசம் அணிய மறுப்பதும், கொரோனா பரவலுக்கான ஒரு காரணமாக நிபுணர்கள் பார்க்கின்றனர். அமராவதி பகுதியில் கல்லூரிகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் அதிகமாகி உள்ளதால், அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உள்ளூர் ரயில்களில் முக கவசம் இல்லாமல் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 300 அதிகாரிகளை மும்பை மாநகராட்சி நியமித்துள்ளது.
5. பருவநிலை மாற்றம்
கடந்த சில தினங்களாக மீண்டும் மகாராஷ்ட்ராவில் குளிர் அதிகமாக உள்ளது. வட இந்தியாவில் ஏற்பட்ட குளிர் காரணமாக, மகாரஷ்ட்ராவில் பல மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்தது.
"நமது பனிக்காலத்தில் எதிர்கொண்ட குளிரைவிட இப்போது அதிக குளிரை நாங்கள் சந்திக்கிறோம். இதுவும் நோய்த்தொற்றுக்கு காரணியாக அமியும்." என்கிறார் மருத்துவர் அவதே.
பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
6. நோயின் தீவிரம் மக்களுக்கு புரியவில்லை
கடந்த சில நாட்களில் மட்டும் யவத்மால் மாவட்டத்தில் 692 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். 465பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 131 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
யவத்மால் பகுதியை சேர்ந்த மருத்துவரான ஸ்வப்னில் மன்கர், "மக்களுக்கு பயம் இல்லை. சமூக இடைவேளி உள்ளிட்ட சட்டங்களை அவர்கள் மதிப்பதில்லை." என்கிறார்.
"முன்பு மக்கள் கவனமாக இருந்தனர். சட்டங்களை கடைபிடித்தனர். ஆனால் இப்போது மக்கள் சட்டங்களை மதிப்பதில்லை." என்கிறார் மருத்துவர் ரத்தோட்.
7. கொரோனா போய்விட்டது என்ற தவறான நம்பிக்கை
கொரோனா குறித்து மக்களுக்கு இப்போது நிறைய தவறான கருத்துகள் உள்ளன. இதில் முக்கியமான என்னவென்றால், கொரோனா போய்விட்டது என்பதே. "கொரோனா என்ற ஒன்று இல்லை என்ற பிரசாரத்தை மக்கள் சிலர் நம்புகிறார்கள். இது மேலும் பல தவறான நம்பிக்கைக்கு அவர்களை இட்டுச்செல்கிறது. படிக்காத மக்கள் இத்தகைய அவநம்பிக்கையில் விழுகின்றனர்."
மக்கள், அரசு கூறும் சட்டங்களை கடைபிடிக்கவில்லை என்றால், இந்த முழு தொற்றையும் கட்டுப்படுத்த வேறு வழியே இல்லை என்றும், முழு பொது முடக்கம் மட்டும்தான் ஒரே வழி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சட்டங்கள் சரியாக கடைபிடிக்கப்படாவிட்டால், கடுமையான விதிகள் போடப்படும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவின் முதல்வர் உத்தவ் தாக்ரே எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: