ரஜினி காந்த் – கமல் ஹாசன் திடீர் சந்திப்பு: காரணம் என்ன?

தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான முக்கிய செய்திகளை நேயர்கள் இந்த பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மக்கள் நீதி கட்சி மய்யக் கட்சி தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் ரஜினியை சந்தித்து ஆதரவு கோரவிருப்பதாக முன்னர் கமல் ஹாசன் தெரிவித்திருந்ததால் இன்றைய ரஜினி-கமல் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினியின் இல்லத்தில் நடந்த சந்திப்பு கட்சி ரீதியிலான சந்திப்பு இல்லை என்பதால், அவரது கட்சியின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர்கள் யாருக்கும் இந்த சந்திப்பு பற்றிய தகவல்கள் தெரியவில்லை என கூறுகின்றனர்.

சமீபத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரஜினியின் நலம் விசாரிப்புக்கான சந்திப்பாக இந்த சந்திப்பு இருந்திருக்கலாம் என மநீம கட்சியினர் கூறுகின்றனர். ''ரஜினியை ஒரு நெருங்கிய நண்பர் என்ற முறையில் கமல் சந்தித்திருப்பார். கட்சியினர் யாருக்கும் இந்த சந்திப்பு பற்றி தெரிவிக்கப்படவில்லை. அதிகாரபூர்வமான படங்களும் வெளியிடப்படவில்லை என்பதால், நட்பு ரீதியிலான சந்திப்பு என்றுதான் இதை பார்க்கவேண்டும். நண்பனாக தனது ஆதரவை எப்போதும் கமலுக்கு ரஜினி அளித்திருக்கிறார். தற்போது ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பதால், அவரது ரசிகர்கள் கமலுக்கு வாக்களிக்க ரஜினி முன்வந்தால் எங்கள் கட்சிக்கு பலம் கூடும்,''என பெயர் வெளியிட விரும்பாத மநீம கட்சியின் உறுப்பினர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ரஜினியின் அறிவுப்பு

கட்சி ஒன்றை தொடங்கி தமிழக அரசியலில் தான் களமிறங்கப்போவதாக ரஜினி காந்த் முதலில் தெரிவித்திருந்தார். பின் வருடக் கணக்கில் அதுகுறித்த அறிவிப்பு ஏதும் வராத நிலையில், மீண்டும் தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என ரஜினி கடந்த வருடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நிலையை காரணம் காட்டி தான் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என ரஜினி உறுதியாக தெரிவித்திருந்தார்.

அதன்பின்னர் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள், ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்து செயல்பட விரும்பினால் மக்கள் மன்றத்திலிருந்து ராஜிநாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்து செயல்படலாம் என்ற அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற தலைப்பில் கோவையில் திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டாம் நாளாக பொதுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இன்று காலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புகார் மனுக்களை பெற்றுக் கொண்டு அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.பொள்ளாச்சி என ஊர் பெயரை சொல்வதற்கே வெட்கப்பட வேண்டிய நிலை அதிமுகவினரால் உருவாக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கு குறித்து பேசுவதற்காக என் மீது வழக்கு தொடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

பொள்ளாச்சி வழக்கு குறித்த ஆவணங்களோடு தான் நான் பேசுகிறேன்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஈடுபட்ட அதிமுகவினரை காப்பாற்ற முயற்சி நடக்கிறது," என ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும், திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஆட்சியில் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அமல்படுத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: