You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிட்லரின் நாஜி படை திருடிய புராதன கிறிஸ்துவ தேவாலய மணி தாய் நாடு செல்கிறது
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜி படையினரால் திருடிச் செல்லப்பட்ட புராதன தேவாலய மணி ஒன்று முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகு தாய் நாடு திரும்புகிறது.
1555ம் ஆண்டு செய்யப்பட்ட இந்த மணியை போலந்து நாட்டில் இருந்து 77 ஆண்டுகளுக்கு முன்பு நாஜி படை திருடிச் சென்றது.
தெற்கு போலந்தின் ஸ்லாவெய்சி என்ற இடத்தில் உள்ள தேவாலாயத்தினர் இந்த மணியை இரண்டு ஆண்டுகளாகத் தேடிவந்தனர். அவர்களுக்கு இந்த மணி கிடைத்திருப்பது அதிருஷ்டம்தான்.
ஏனென்றால் ஆயுதங்கள் மற்றும் குண்டுகள் செய்வதற்கு ஹிட்லரின் நாஜி படையினர் சுமார் 80 ஆயிரம் தேவாலய மணிகளை உருக்கியதாக ஜெர்மனியின் மன்ஸ்டர் மறைமாவட்டத்தில் உள்ளவர்கள் அவர்களிடம் தெரிவித்தனர்.
ஆனால், முயற்சிகளுக்குப் பிறகு கடைசியாக அந்த மணி ஜெர்மனியில் உள்ள மன்ஸ்டரில் இருப்பதாக ஒரு தேவாலய மத போதகர் கண்டுபிடித்தார்.
400 கிலோ எடையுள்ள அந்த மணி அந்த பதிவேடு ஒன்றில் பட்டியலிடப்பட்டிருப்பதை மரியன் பெட்நாரெக் என்ற அந்த போதகர் கண்டுபிடித்ததாக அந்த மறைமாவட்டம் தெரிவிக்கிறது.
மன்ஸ்டர் நகரில் உள்ள கத்தோலிக்க கல்லறைத் தோட்டம் ஒன்றில் வேறு இரண்டு மணிகளுடன், இந்த மணியும் கவனிக்கப்படாமல் போடப்பட்டிருந்தது.
போருக்குப் பிறகு, உலோகத்துக்காக உருக்கப்படாத பல மணிகள் திருப்பி அனுப்பப்பட்டன. ஆனால், போலந்து போன்ற கிழக்கு நாடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,300 மணிகள் ஹேம்பர்கில் உள்ள ஒரு கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் படங்கள் நூரெம்பெர்க் என்ற இடத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
அந்த மணிகளை திருப்பி அனுப்பக் கூடாது என்று பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகள் உத்தரவிட்டதாகவும், அதற்குப் பதிலாக பழைய மேற்கு ஜெர்மனியில் உள்ள தேவாலயங்களுக்கு அவை இரவலாக அளிக்கப்பட்டதாகவும் மறை மாவட்டத்தினர் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் உலகத் தொற்று காரணமாக இந்த மணி இப்போது தாய் நாட்டுக்கு, திரும்புவது தாமதமாகியுள்ளது.
ஆனால், இந்த மணி கடைசியாக தூய கேத்தரின் தேவாலயத்துக்கு திரும்பினாலும், அது சொந்த தேவாலயத்திலேயே இரவலாகத்தான் இருக்கும். அது நிரந்தர இரவல் என்று அழைக்கப்படும். ஏனெனில், அதிகாரபூர்வமாக அந்த மணி தற்போது ஜெர்மனி அரசாங்கத்தின் சொத்து.
"77 ஆண்டுகள் காத்திருந்த பிறகு, ஒரு மாதம் போல காத்திருப்பது ஒரு பிரச்சனையில்லை" என்று மன்ஸ்டர் தேவாலயத்திடம் தெரிவித்துள்ளார் ஹன்ஸ் மானெக் என்பவர். இவர் ஸ்லாவெய்சி நகரில் முன்பு வசித்தவர்.
பிற செய்திகள்:
- ரஜினியின் எழுச்சி பெறாத "25 ஆண்டுகால அரசியல்" - யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்?
- அதிமுக - பாஜக கூட்டணி கட்டாயத்தால் நீடிக்கிறதா?
- அழுத்தம் கொடுத்தாரா அமித் ஷா? அவசரப்பட்டு விட்டதா அதிமுக?
- தமிழகத்தில் ஒருவர் உள்பட இந்தியாவில் 6 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று
- IND vs AUS 2வது டெஸ்ட்: அபார வெற்றிபெற்ற இந்தியா; சாதனை படைத்த அஸ்வின்
- 'அர்னாப் கோஸ்வாமி கொடுத்த லஞ்சத்தில் வாங்கிய 3 கிலோ வெள்ளி' - மும்பை காவல்துறை
- இந்தியாவில் 16 லட்சம் உயிர்களை பலி வாங்கிய காற்று மாசு - நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்