நாஜி ஜெர்மனியில் கருப்பினத்தவரின் வாழ்வு எப்படி இருந்தது?

    • எழுதியவர், தமியான் சானி
    • பதவி, பிபிசி நியூஸ்

நாஜி ஜெர்மனியில் கருப்பின பள்ளி மாணவி ஒருவரின் பழைய புகைப்படம் ஒன்றை திரைப்பட இயக்குநர் அம்ம அசன்டே தற்செயலாகப் பார்த்தார்.

வெள்ளையர் இனத்தைச் சேர்ந்த வகுப்புத் தோழர்கள் நேராக காமிராவை பார்த்தபடி நின்றிருக்க, அவர்களுடன் நின்றிருக்கும் கருப்பின மாணவி, குழப்பத்துடன் பக்கவாட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அந்தப் புகைப்படம் பற்றிய ஆர்வம் - அந்த மாணவி யார், ஜெர்மனியில் என்ன செய்து கொண்டிருந்தார் என்ற ஆர்வம் - விருது வென்ற திரைப்படத் தயாரிப்பாளரை, வேர் ஹேண்ட்ஸ் டச்( Where Hands Touch) என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கச் செய்தது. அமண்ட்லா ஸ்டென்பெர்க், ஜார்ஜ் மேக்கே ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

இளம் ஹிட்லர் அமைப்பின் உறுப்பினருடன் ரகசியமாக தொடர்பு வைத்திருந்த கலப்பின டீன் ஏஜ் பெண்ணின் கதை இது; கற்பனையே என்றாலும் வரலாற்று ஆவணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில விஷயங்கள் சிலருக்கு மன உளைச்சலைத் தருவதாக இருக்கலாம்.

1933 முதல் 1945 வரையில், நாஜி காலத்தில், ஆப்பிரிக்க - ஜெர்மானியர்கள் சில ஆயிரம் பேர் இருந்தனர்.

ஒரே மாதிரியான அனுபவம் இல்லை என்றாலும், காலப்போக்கில், வெள்ளை இன மக்களுடன் உறவு வைத்துக் கொள்ள அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இருந்து தள்ளி வைக்கப்பட்டனர். சிலருக்கு கருத்தடை சிகிச்சைகள் செய்யப்பட்டன, மற்றவர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

`நம்பிக்கையின்மை மற்றும் தள்ளிவைக்கப்படுதல்'

ஆனால் அவர்களுடைய கதைகள் பெரிதும் சொல்லப்படவில்லை - அசன்டே அந்தக் காலக்கட்டத்தை பெரிய திரைக்குக் கொண்டு வர 12 ஆண்டு காலத்தை எடுத்துக் கொண்டார்.

திரைப்படத்துக்காக தகவல்கள் சேகரிக்க சிலரிடம் பேசியபோது அவர்கள், ``நம்பிக்கையின்மையால் கேள்விகளை எழுப்பினர், சில நேரங்களில் இந்த மக்களின் கடினமான வாழ்க்கையை கண்டுகொள்ளாமல் புறந்தள்ளினர்'' என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அந்த நாட்டில் குறுகிய காலம் நடந்த அந்த ஆட்சிக் காலத்தில், ஆப்பிரிக்க - ஜெர்மானியர்கள் சமூகத்தினர் பூர்விகக் குடிகளாக இருந்தனர். கடலோடிகள், பணியாளர்கள், மாணவர்கள், பொழுபோக்கு கலைஞர்கள் ஆகியோர் இன்றைய கேமரூன், டோகோ, தான்சானியா, ருவாண்டா, புருண்டி, நமீபியா நாடுகளில் இருந்து ஜெர்மனிக்கு வந்திருக்கின்றனர்.

1914ல் முதலாவது உலகப் போர் வெடித்த போது, நிலையான வசிப்பிடம் இல்லாத இந்த மக்கள், தங்கி வாழத் தொடங்கினர் என்று வரலாற்றாளர் ரோப்பி அய்ட்கென் தெரிவிக்கிறார். ஜெர்மனிக்காகப் போரிட்ட சில ஆப்பிரிக்கர்களும் கூட அங்கேயே தங்கிவிட்டனர்.

ஆனால் இனக் கலப்பு குறித்த நாஜிகளின் அச்சத்தை வலுப்படுத்துவதாக இரண்டாவது குழுவினரின் வாழ்விட செயல்பாடுகள் அமைந்திருந்தன.

முதலாவது உலகப் போரில் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட பிறகு கையெழுத்தான முதலாவது ஒப்பந்தத்தின்படி, மேற்கு ஜெர்மனியில் ரினெலேண்ட் பகுதியை பிரெஞ்ச் படைகள் வசப்படுத்திக் கொண்டன.

அந்தப் பகுதியில் காவல் பணிகளைக் கவனிக்க வடக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஏராளமானோர் அடங்கிய, ஆப்பிரிக்க பேரரசின் 20 ஆயிரம் வீரர்களை பிரான்ஸ் பயன்படுத்திக் கொண்டது. அவர்களில் சிலர் ஜெர்மானிய பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டனர்.

இனவாத கேலிச் சித்திரங்கள்

இந்த உறவுகள் மூலம் பிறந்த 600 - 800 கலப்பின குழந்தைகளைக் குறிப்பிடுவதற்காக 1920களில் ``ரினெலேண்ட் வேசிப் பிள்ளைகள்'' என்ற அவதூறான வார்த்தைகள் உருவாக்கப்பட்டன.

தூய்மையற்ற இனத்தவர் என்ற சிலருடைய கற்பனையான அச்சத்தைக் குறிப்பதாக இது இருந்தது. பிரச்சினைக்கு தூபம் போடுவதைப் போல, ஆப்பிரிக்க வீரர்களை பாலியல் ரீதியாக அவமானப்படுத்தும் வகையில் இனவாத கேலிச் சித்திரங்கள் அந்த காலக்கட்டத்தில் வெளியிடப் பட்டிருக்கின்றன.

யூதர்களுக்கு எதிரான பாரபட்சமான செயல்கள் நாஜி சித்தாந்தத்தின் மையமாக இருந்த நிலையில், 1925ல் வெளியிடப்பட்ட Mein Kampf என்ற புத்தகத்தில் உள்ள ஒரு வரி, அடால்ப் ஹிட்லரின் அரசியல் நம்பிக்கையுடன் யூதர்கள் மற்றும் கருப்பின மக்களுக்கு தொடர்பு இருந்தது கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளது.

``யூதர்கள் தான் ரினெலேண்ட் பகுதிக்கு நீக்ரோக்களை அழைத்து வந்தனர்'' என்று ஹிட்லர் எழுதியுள்ளார். ``வெறுக்கப்படும் வெள்ளை இனத்தை அழிக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன், வேசித்தனத்தில் முடியும் வகையில் ரகசியமான சிந்தனையுடன் இது எப்போதும் நடந்திருக்கிறது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரம் கையில் இருந்தபோது, யூதர்கள் மீதான நாஜிகளின் வெறுப்பு, இனவாத எதிர்ப்பு ஆகியவை பேரழிவு நிலைகளுக்கு இட்டுச் சென்றன. இரண்டாவது உலகப் போரின் போது ஆறு மில்லியன் யூதர்கள் தொழில்முறையில் கொல்லப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் சில ஸ்லேவிய மக்களை ஒட்டு மொத்தமாக கொலை செய்யப்பட்டது போன்ற நிகழ்வுகள் நடந்தன.

அதே வகையில் இல்லாவிட்டாலும், தாங்களும் குறிவைக்கப் பட்டதாக ஜெர்மானிய கருப்பர்களின் வாழ்வு பற்றி ஆராய்ச்சி நடத்தும் அஜ்டிகென் கூறியுள்ளார்.

``அதிகரிக்கும் இனவாத கொள்கையை தீவிரமாக்குதல்” என்ற நிலைக்கு நாஜிகள் மாறினர் என்று அவர் விவரித்துள்ளார்.

``வெளியில் இருந்து வந்த மற்ற இனத்தவர்களை அழித்துவிடுவது'' என்ற அவர்களுடைய கொள்கைகளைக் காட்டுவதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

`பாதி அளவுக்குதான் மனிதனாக உணர்ந்தேன்'

1935-ல் யூதர்களுக்கும் பிற ஜெர்மானியர்களுக்கும் இடையிலான திருமணங்கள் செல்லாது என்று நியூரெம்பர்க் சட்டம் உருவாக்கப்பட்டது. யூதர்கள் என்ற அதே பிரிவில் கருப்பர் இனத்தவர்கள் மற்றும் ரோமா மக்களையும் இணைக்கும் வகையில் பின்னர் சட்ட திருத்தம் செய்யப்பட்டது.

ஆனால் இன கலப்பு என்ற அச்சம் தொடர்ந்து நீடித்தது. 1937ல் ரினெலேண்ட் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் குறிவைக்கப்பட்டனர், அவர்கள் மலடாக்கப்பட்டனர்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குறைந்தபட்சம் 385 பேரில் ஒருவர் ஹான்ஸ் ஹாவ்க். அல்ஜீரிய ராணுவ வீரருக்கும், வெள்ளை ஜெர்மானிய பெண்ணுக்கும் பிறந்த ஹாவ்க், 1997ல் வெளியான ஹிட்லரின் மறக்கப்பட்ட பலியாட்கள் என்ற ஆவணப்படத்தில் முகம் காட்டினார்.

எப்படி தம்மை ரகசியமாக கொண்டு சென்று வாசெக்டமி அறுவை சிகிச்சை செய்தார்கள் என்பது பற்றி அதில் அவர் பேசியுள்ளார். மலடாக்கப்பட்டதற்கான சான்றிதழ் அவருக்குத் தரப்பட்டு, பணி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ``ஜெர்மானிய ரத்தம்'' உள்ளவர்களை திருமணம் செய்ய மாட்டேன் அல்லது அவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள மாட்டேன் என்ற ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட வேண்டியிருந்தது.

``மன அழுத்தம் தருவதாக, அடக்குமுறையான விஷயமாக அது இருந்தது'' என்று ஆவணப் படத்தில் அவர் கூறியிருந்தார். ``பாதி அளவுக்கு தான் மனிதனாக நான் உணர்கிறேன்'' என்றும் கூறியுள்ளார்.

இந்தக் கொடுமைகளுக்குப் பலியான மற்றொருவர் தாமஸ் ஹோல்ஜாவ்சர், ``எனக்குப் பிள்ளைகள் இல்லை என்பதில் சில நேரம் நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். குறைந்தபட்சம் எனக்கு ஏற்பட்ட அவமானங்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது'' என்று ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளார்.

தாங்கள் வாழ்ந்த காலத்தில் வெகு சிலர் மட்டுமே தங்களுடைய அனுபவங்கள் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ``அவர்களில் பெரும்பான்மையினருக்கு கடைசியில் என்ன நடந்தது என்பதை வெளிக் கொண்டு வருவதற்கு நிறைய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை'' என்று இதுகுறித்து ஆய்வு செய்து வரும் சில வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான திரு. அஜ்டிகென் பிபிசியிடம் கூறினார்.

``முகாம்கள் மற்றும் மலடாக்குதல் குறித்த பல ஆவணங்களை நாஜிகள் வேண்டுமென்றே அழித்துவிட்டனர் என்பதை நினைவுகூர வேண்டியது அவசியமானது. குழுக்கள் மற்றும் தனிநபர்கள் என்னவானார்கள் என்பது பற்றிய தகவல்களை சேகரிப்பது இதனால் கஷ்டமாகியுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

பெல்லி அண்ட் எ யுனைடெட் கிங்டெம் (Belle and A United Kingdom) என்ற திரைப்படத்தை எழுதி, இயக்கிய அசன்டே என்ற பெண்மணி, இந்த மக்களில் பலருக்கு அடையாளமே இல்லை என்று கூறியுள்ளார். அவர்களுடைய பெற்றோரில் ஒருவர் ஜெர்மானியர் என்பதால், ஜெர்மானியராக கருதிக் கொண்டனர். ஆனாலும் தனிமைபடுத்தப்பட்டனர், முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

``குழந்தைகள் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் உள்ளூர்வாசிகளாகவும், வெளியூர்வாசிகளாகவும் கருதப்பட்டனர்'' என்று 49 வயதான அந்தப் பெண்மணி தெரிவிக்கிறார்.

அவர்களுடைய அனுபவங்கள் மாறுபட்டவையாக இருந்தாலும், அனைத்து கருப்பு ஜெர்மானியர்களும் நாஜி ஆட்சியில் துன்புறுத்தப்பட்டனர்.

ஜெர்மனியின் காலனி ஆதிக்க காலத்தில், குறிப்பாக நமீபியாவில் ஹெரேரோ மற்றும் நாமா மக்களைக் கூட்டமாகக் கொலை செய்ய நடந்த முயற்சிகள், ஆப்பிரிக்கர்களைப் பற்றி எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தியிருந்தது.

ஹிட்லர் ஆட்சிக்கு வந்த பிறகு, பொதுவெளியில் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர், அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். பணிகள் மற்றும் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. குறிப்பாக சொந்த தேசமற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.

இதற்கு சிறிது எதிர்ப்பு இருந்தது. கலப்பினத்தவரான ஹிலாரியஸ் ஜில்ஜெஸ் என்பவர் கம்யூனிஸ்ட்டாக, நாஜி எதிர்ப்புப் போராளியாக இருந்தார். 1933ல் அவர் கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.

1939ல் போர் ஏற்பட்டபோது, அவர்களுடைய நிலைமை மேலும் மோசமானது. கலப்பின உறவுகளில் பிறந்த குழந்தைகள் குறி வைக்கப்பட்டு மலடாக்கப்பட்டனர், சிறை வைக்கப் பட்டனர் அல்லது கொலை செய்யப்பட்டனர்.

கண்ணில் படாமல் இருக்க முயற்சி

1925 ஆம் ஆண்டு பெர்லினில் பிறந்த தியோடர் வோன்சா மைக்கேலின் அச்சமும் அதுவே தான் - அவர் கேமரூன் ஆணுக்கும், ஜெர்மானிய பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்.

வளரும் போது தாம் ``மனித காட்சி வளாகத்தில்'' (மிருகக் காட்சி சாலை போல) அல்லது இன மக்களை பிரித்துள்ள பகுதிகளில் இருந்ததாக 2017ல் ஜெர்மானிய ஒளிபரப்பான DW-க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

``பெரிய ஸ்கர்ட்கள், முரசுகள், நடனம் மற்றும் பாடல்கள் - காட்சிபடுத்தப்படும் மக்கள் வெளிநாட்டவர்கள், தாயகம் சாராதவர்கள் என்று காட்டுவதாக, தங்களுடைய தாயகம் எப்படி இருக்கும் என்று பார்வையாளர்களுக்குக் காட்டுவதாக இருக்கும்'' என்று அவர் கூறினார். ``அடிப்படையில் அது பிரமாண்டமான நிகழ்ச்சியாக இருக்கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நாஜிகள் அதிகாரத்துக்கு வந்த பிறகு, முடிந்தவரை கண்ணில் படாமல் தப்பித்திருக்க வேண்டும் என்று அவர் அறிந்திருந்தார். குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் அப்படி இருக்க வேண்டும் என அறிந்திருந்தார்.

``ஆனாலும், இதுபோன்ற முகத்துடன் நான் முழுமையாக மறைந்திருக்க முடியாது, ஆனால் நான் முயற்சி செய்தேன்'' என அவர் தெரிவித்துள்ளார்.

``வெள்ளை இன பெண்களுடனான அனைத்து தொடர்புகளையும் நான் தவிர்த்தேன். அது கொடூரமானதாக இருந்திருக்கும். நான் மலடாக்கப் பட்டிருப்பேன். தூய்மையான இனத்தைச் சாராதவன் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பேன்'' என்று DW Afro-Germani படத்தில் அவர் கூறியுள்ளார்.

கூட்டமாகக் கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஹெயின்ரிச் ஹிம்லர் என்பவர், ஜெர்மனியில் வாழும் கருப்பர் இனத்தவர்களின் விவரங்களை சேகரிக்குமாறு 1942ல் உத்தரவிட்டுள்ளார். மொத்தமாக கொலைகள் செய்யும் திட்டத்தின் தொடக்கமாக இது கருதப்படலாம். ஆனால் அது மாதிரியான திட்டமாக தெரிவிக்கப்படவில்லை.

அதற்கு மாறாக, குறைந்தபட்சம் இரண்டு டஜன் கருப்பு ஜெர்மானியர்கள், ஜெர்மனியில் பாதுகாப்பு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.

``மக்கள் திடீரென காணாமல் போவார்கள். அவர்களுக்கு என்னவானது என்று உங்களுக்குத் தெரியாது'' என்று எலிசபெத் மோர்ட்டன் என்பவர் ஹிட்லரின் மறக்கப்பட்ட பலியாட்கள் என்ற ஆவணப்படத்தில் கூறியுள்ளார். அவரது பெற்றோர் ஆப்பிரிக்க பொழுதுபோக்கு குழுவை நடத்தி வந்துள்ளனர்.

இந்தக் கதைகள் பற்றி Where Hands Touch என்ற படத்தின் மூலம் புதிய விஷயங்களை வெளிப்படுத்த அசன்டே முயற்சி செய்துள்ளார்.

பிரிட்டனில் வாழும் கானாவைச் சேர்ந்த அவர், ஐரோப்பிய வரலாற்றில் ஆப்பிரிக்க தேசத்தவர்களின் பங்கு மற்றும் செயல்பாடுகள் விடுபட்டுப் போயிருப்பதாகக் கருதுகிறார். நாஜிகளால் கருப்பின மக்கள் துன்புறுத்தப்பட்டனர் என்பதை மறுக்கும் முயற்சிகளை கஷ்டமானதாக ஆக்கும் வகையில் தன்னுடைய படம் இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

``நிறைய அறியாமை இருப்பதாக நான் நினைக்கிறேன். இப்போது இந்த மக்கள் அனுபவித்த இன்னல்கள் நிறைய புறந்தள்ளப் பட்டுள்ளன என்றும் கருதுகிறேன்'' என்று அவர் கூறுகிறார்.

Where Hands Touch- இப்போது பிரிட்டனில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் ஏராளமான ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :