இந்திய ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய மூன்றிலும் பணியாற்றிய ப்ரித்தி பால் சிங் கில்லின் 100வது பிறந்தநாள்

பட மூலாதாரம், Ani
இந்திய ராணுவம் இந்திய கடற்படை இந்திய விமானப்படை ஆகிய மூன்றிலுமே பணியாற்றிய ஒரே நபராக இருக்கக்கூடிய கர்னல் ப்ரித்தி பால் சிங் கில் கடந்த வெள்ளியன்று 100 வயதை எட்டினார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 11) அவர் தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
இந்திய விடுதலைக்கு முன்பு ராயல் இந்தியன் ஏர் ஃபோர்சில் பணியாற்றிய அவர் பின்னர் கடற்படை அதிகாரியாக பணியாற்றினார். இறுதியாக இந்திய ராணுவத்தில் கன்னர் ஆஃபீஸராகவும் (Gunner Officer) இருந்தார்.
ப்ரித்தி பால் சிங் கில் 1965-ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரிலும் பங்கெடுத்துள்ளார்.
அவர் பணி ஓய்வு பெற்றபோது மணிப்பூரில் உள்ள இந்திய ராணுவத்தின் அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் கமாண்டராக பணியாற்றினார்.
பிரிக்கப்படாத இந்தியாவில் ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்-இல் முதலில் பணியில் சேர்ந்தார் கர்னல் கில்.
கராச்சியில் பணியாற்றிய அவர் ஹோவார்டு ரக விமானத்தின் விமானியாக இருந்தார். ஆனால் விமானங்களை இயக்குவது பாதுகாப்பற்றது என்று அவரது குடும்பம் கருதியது.
அவர் விமானியாகப் பணியாற்ற வேண்டாமென்று வலியுறுத்தவும் செய்தனர் அவரது குடும்பத்தினர்.
அவரது குடும்பத்தினருக்கு அறிமுகமான பிரிட்டிஷ் ஜெனரல் சாவோய் என்பவர் ப்ரித்தி சிங்கை விமானப்படையில் இருந்து கப்பற்படைக்கு பணி மாற்ற உதவி செய்தார்.
முதலில் கடலுக்கு அடியில் வைக்கப்படும் குண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் கப்பல் ஒன்றில் பணியாற்றிய அவர் பின்னர் ஐஎன்எஸ் தீர் எனும் கப்பலில் பணியாற்றினார்.
இரண்டாம் உலகப் போர் நடந்த காலகட்டத்தில் சரக்கு கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடற்படை கப்பலாக ஐஎன்எஸ் தீர் இருந்தது.
கடற்படையில் சப் லெஃப்டினன்டாகப் பணியாற்றிய கில் தேவலாலியில் உள்ள ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டிலெரியில் 'இன்ஸ்ட்ரக்டர் இன் கன்னரி' ஆக பின்னர் தகுதி பெற்றார்.
துப்பாக்கி உள்ளிட்ட கனரக ஆயுதங்களை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் இயக்குதல் கன்னெரி (gunnery) எனப்படும்.
1965ஆம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போது ப்ரித்தி பால் சிங் கில் பணியாற்றிய ரெஜிமென்ட்டின் நான்கு துப்பாக்கிகள் பாகிஸ்தான் படையினரால் கைப்பற்றப்பட்டன. அவற்றை மீட்கும் பணியை வெற்றிகரமாக செய்து முடித்தார் ப்ரித்தி பால் சிங் கில்.
இந்திய ராணுவம், விமானப்படை, கப்பல் படை ஆகிய அனைத்திலும் பணியாற்றிவிட்டு ஓய்வுபெற்ற கர்னல் கில் பஞ்சாபின் பரீத்கோட் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான பாகியில் விவசாயம் செய்து வந்தார். ப்ரித்தி பால் சிங் கில் தற்போது சண்டிகரில் வசிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












