You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்லாமியவாத குழுக்களைக் குறி வைக்கும் சட்டத்துக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல்
பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளை காப்பாற்றவும், வெறுப்புரைகளை கட்டுப்படுத்தவும், வீட்டுமுறைப் பள்ளிகள் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் அதிபர் இமானுவேல் மக்ரோங் நீண்டகாலமாக வைத்திருந்த திட்டங்களில் ஒன்று இது.
இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைப்பதாக, பிரான்ஸிலும் வெளிநாட்டில் இருந்தும், விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனால், இதனை 'பாதுகாக்கும் சட்டம்' என்று கூறும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இது தீவிர முஸ்லிம் குழுக்களின் பிடியில் இருந்து முஸ்லிம்களை விடுவிக்கும் என்கிறார்.
புதிய சட்டத்தில் என்ன இருக்கிறது?
பிரான்ஸின் குடியரசு மதிப்பீடுகளை ஆதரிக்கும் சட்டம், இணையத்தில் வெறுப்புரைகளை கட்டுப்படுத்தும், இஸ்லாமிய கோட்பாடுகளை போதிக்கும் ரகசிய பள்ளிகளுக்கு தடை விதிக்கும், வீட்டு முறைப் பள்ளிகளின் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கும். தீய நோக்கத்தோடு இணையத்தைப் பயன்படுத்தி அடுத்தவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதை இந்த சட்டம் தடுக்கும்.
சாமுவேல் பேட்டி என்ற ஆசிரியர் தலைவெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்துக்கான எதிர்வினையாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மாணவர்களுக்கு முகமது நபியின் கார்டூனைக் காட்டியதற்காக ஒரு நபர் அவரை கொலை செய்தார்.
பலதார மணத்தின் மீதான தடையை இந்த சட்டம் மேலும் இறுக்கமாக்கும். பலதார மணம் புரிந்தவர்களின் குடியிருப்பு உரிமை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மருத்துவர்கள் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்வதற்குத் தடை விதிக்கப்படும். மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்.
இஸ்லாமிய அமைப்புகளின் நிதி விவகாரங்களில் வெளிப்படத்தன்மையைக் கோரும் புதிய விதிகள் இந்த சட்டத்தில் இருக்கின்றன.
பிரான்ஸ் அதிகாரிகள், பணியிடங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணியக் கூடாது எனும் விதிமுறை போக்குவரத்துப் பணியாளர்கள் , சந்தை ஊழியர்கள் போன்றவர்களுக்கும் இந்த சட்டம் வழியாக விரிவுபடுத்தப்படுகிறது.
இஸ்லாம் சிக்கலில் இருக்கிற ஒரு மதம் என்று முன்பு ஒரு முறை குறிப்பிட்ட அதிபர் மக்ரோங், முகமது நபியின் கார்டூனை ஷார்லீ எப்டோ பத்திரிகை வெளியிட்ட விவகாரத்தில் அந்தப் பத்திரிகையின் உரிமையை ஆதரித்தவர் அவர்.
பிரான்சில் ஐம்பது லட்சம் முஸ்லிம் மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலேயே அதிக முஸ்லிம் சிறுபான்மையினரை கொண்ட நாடு இது.
பல முஸ்லிம் நாடுகளில் இந்த சட்டத்துக்காக மக்ரோங் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். துருக்கியோடு ஏற்கெனவே கெட்டுப்போன பிரான்சின் உறவு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்ரோங் மனநோய் பீடித்தவர் என்று துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் விமர்சித்துள்ளார்.
இந்த சட்டம் முஸ்லிம்கள் மீதான ஒவ்வாமையை அதிகரிக்கும் என்று உள்நாட்டிலும்கூட இடதுசாரி அரசியல் வாதிகள் எச்சரித்துள்ளனர்.
கடுமையான நடவடிக்கை எடுக்கும்போது நிலைமை இன்னும் மோசமாகலாம் என்று கூறியுள்ளார் மத சுதந்திரத்துக்கான அமெரிக்கத் தூதுவர் சாம் பிரௌன்பேக்.
இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு மக்ரோங் மீது கடும் அழுத்தம் இருந்தது என்கிறார் பாரிசில் இருக்கும் பிபிசியின் லூசி வில்லியம்சன்.
பிரெஞ்ச் மதச்சார்பின்மை என்ற பெயரில் இஸ்லாமியவாத செல்வாக்கை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டில் வரவேற்பு இருக்கலாம். ஆனால், அரசுக்கு இது ஒரு சங்கடமான நடவடிக்கைதான் என்கிறார் அவர்.
பிற செய்திகள்:
- செளதி அரேபியாவில் இருந்து வரவிருக்கும் புதிய வகை எரிபொருள் - பாதுகாப்பா, ஆபத்தா?
- ஜியோ சிம், அம்பானி, அதானி கம்பெனி பொருள்களை புறக்கணிப்போம்: விவசாயிகள் போராட்ட குழு
- புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று அடிக்கல்: அதீத செலவு, வசதிகள் - முக்கிய தகவல்கள்
- 46 ஆயிரம் ஆண்டு பழமையான பழங்குடி குகை: சீரமைத்துத் தர சுரங்க நிறுவனத்துக்கு உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: