You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மலேசிய தைப்பூசம் திருவிழா: பக்தர்கள் தவிர்க்க எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர் சங்கம்
கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் தைப்பூச கொண்டாட்டங்களைத் தவிர்ப்பது நல்லது என மலேசிய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
தைப்பூசத்தின்போது லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடுவதால் வைரஸ் தொற்று பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் சுப்ரமணியம் முனியாண்டி சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவது கடினம் என்றும் அவர் கூறுகிறார்.
மலேசிய பக்தர்கள் தைப்பூசத்தின் போது தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கான ஆயத்தப் பணிகளை சற்று ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடுவர் என்று குறிப்பிட்டுள்ள டாக்டர் சுப்ரமணியம், அடுத்த ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசாங்கம் முன்கூட்டியே சில அறிவிப்புகளை வெளியிடுவது நல்லது என அறிவுறுத்தி உள்ளார்.
நான்கு இடங்களில் கொண்டாடப்படும் தைப்பூசம்
மலேசியாவில் நான்கு இடங்களில் தைப்பூச விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோலாலம்பூரில் உள்ள பத்துமலை, பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜார்ஜ்டவுன், பேரா மாநிலத்தில் உள்ள ஈப்போ, கெடா மாநிலத்தில் உள்ள சுங்கைப்பட்டாணி ஆகிய நான்கு பகுதிகளில் நடக்கும் தைப்பூச விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
"பத்துமலை பகுதியில் தைப்பூசத்தின் போது பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள். கூட்டத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். அதே சமயம் பெருங்கூட்டம் என்பது மக்களின் உடல்நலத்துக்கு ஆபத்தாக அமைந்துவிடக் கூடும்.
"சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது, வருகைப் பதிவேடுகளில் விவரங்களைப் பதிவிடுவது என்பதெல்லாம் பெருங்கூட்டத்தில் சாத்தியமற்றுப் போகும்.
"காவடிகளைத் தயாரிப்பது, விரதம் இருப்பது போன்ற நடவடிக்கைகளை ஏராளமான பக்தர்கள் தைப்பூசத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடுவார்கள். எனவே பத்துமலை கோவில் நிர்வாகமும் அரசாங்கமும் தைப்பூசம் தொடர்பான அறிவிப்பை விரைவாக வெளியிட வேண்டும்" என மருத்துவர் சுப்பிரமணியம் முனியாண்டி
மலேசிய இந்து சங்கம்: அரசாங்கத்தின் முடிவை மதிக்க வேண்டும்
இதற்கிடையே மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் ஜனவரி மாதத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்தே தைப்பூச விழா குறித்து முடிவெடுக்க இயலும் என மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.
சூழ்நிலையைப் பொறுத்து அரசாங்கம் தைப்பூச விழா வேண்டாம் என முடிவெடுத்தால் இந்து பக்தர்கள் அதை மதித்துச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
"ஏராளமானோரின் உடல்நலம் மற்றும் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இது. எனவே பொறுப்புணர்வுடனும் அறிவுப்பூர்வமாகவும் முடிவெடுக்க வேண்டியது அவசியம்.
"பக்தர்கள் தைப்பூசத்தின் போது தங்கள் வீட்டில் இருந்தபடியே பூஜைகளைச் செய்யலாம். மேலும் அடுத்து வரும் ஆண்டுகளில் நேர்த்திக்கடன்களைச் செலுத்தலாம்," என்று மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணியா?: பொன். ராதாகிருஷ்ணன் கருத்தால் சலசலப்பு
- கடலூரில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால் 3 காவலர்கள் இடமாற்றமா? என்ன நடந்தது?
- அர்மீனியா - அஜர்பைஜான் மோதலால் இந்தியர்களுக்கு ஆபத்தா?
- கமலா ஹாரிஸ் Vs மைக் பென்ஸ்: துணை அதிபர் வேட்பாளர் விவாதத்தில் வெற்றி பெற்றது யார்?
- கமலா ஹாரிஸ்: அதிபர் பதவி போட்டியில் இருந்து விலகியவரால் துணை அதிபராக முடியுமா?
- அதிமுக எம்எல்ஏ மனைவியை நாளை ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: