அர்மீனியா - அஜர்பைஜான் மோதலால் இந்தியர்களுக்கு ஆபத்தா?

அர்மீனியா - அஜர்பைஜான் மோதலால் இந்தியர்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், SERGEI BOBYLEV

    • எழுதியவர், தாரேந்திர கிஷோர்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக

அர்மீனியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையிலான நாகோர்னோ - காராபாக் எல்லை பிரச்னை கடும் மோதலாகி மீண்டும் தீவிரமாகியிருக்கிறது. இரு தரப்பும், பரஸ்பரம் துப்பாக்கி சூடு, வெடிகுண்டுகள் வீச்சு என மோசமான வகையில் தாக்குதல்களைத் தொடங்கியிருக்கின்றன.

அந்க நாடுகளுக்கு இடையிலான மோதலுக்கு உலக அளவில் எதிர்வினையாற்றப்பட்டு வருகிறது. பாகிஸ்தான், இரான், துருக்கி ஆகிய நாடுகள் அவற்றின் ஆதரவை அஜர்பைஜானுக்கு வழங்கியுள்ளன. ஆனால், அங்குள்ள நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும், எல்லை பிரச்னைக்கு அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இந்தியா பதில் அளித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், நாகோர்னோ, காராபாக் இடையே கடந்த செப்டம்பர் 27ஆம்தேதி முதல் தொடங்கிய பிராந்திய பதற்றங்களை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறினார்.

இரு தரப்பிலிருந்தும் உயிர் மற்றும் சொத்துகள் இழப்பு பற்றிய செய்திகள் வருகின்றன என்று கூறிய அவர், "அந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. இந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. எல்லையில் அமைதியை மீட்டெடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்தியாவுடனான ஆஜர்பைஜான் உறவு எப்படி உள்ளது?

அஜர்பைஜானில் உள்ள இந்திய தூதரகம் அளித்துள்ள தகவலின்படி அந்நாட்டில் சுமார் 1,300 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அதேவேளை, அர்மீனியா குடியுரிமைத்துறை அளித்துள்ள தகவலின்படி அந்நாட்டில் சுமார் 3,000 இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

முன்னாள் அர்மீனிய அதிபர் ராபர்ட் கொசரினுடன், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி

பட மூலாதாரம், STR

படக்குறிப்பு, முன்னாள் அர்மீனிய அதிபர் ராபர்ட் கொசரினுடன், இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி

இந்த இரு நாடுகளுடனும் இந்தியா சமமான அளவிலேயே உறவைப் பேணி வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவுடனான தனது உறவை அஜர்பைஜான் பெரிதாக வரவேற்காதது போலவே உள்ளது.

1991இல் சோவியத் யூனியன் பிளவுபடும்வரை அதன் அங்கமாக அர்மீனியா விளங்கியது. அதன் பிந்தைய கட்டத்தில் இந்தியாவுடனான உறவை அர்மீனியா புதுப்பித்துக் கொண்டது. அதன் அடையாளமாக, 1991ஆம் ஆண்டுக்கு பிந்தைய வருடங்களில் அர்மீனியா அதிபர் மூன்று முறை இந்தியாவுக்கு வருகை தந்தார். கடைசியாக அந்நாட்டு அதிபர் இந்தியாவுக்கு 2017ஆம் ஆண்டில் வருகை தந்தார்.

இதே சமயம், அஜர்பைஜான் ஒரு சில விவகாரங்களில் பாகிஸ்தானுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுத்தது. இந்தியாவுடன் நல்லுறவை பாராட்டி வரும் அதே சமயம், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை துருக்கி கொண்டிருப்பதைப் போல, அஜர்பைஜானும் துருக்கி வழியில், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு சாதகமாக கருத்து வெளியிட்டு வருகிறது.

இதனால், இது இந்தியா, அஜர்பைஜான் ராஜீய உறவில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று சில வெளியுறவு ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேற்காசிய நாடுகள் ஆய்வு மையத்தின் தலைவர் பேராசிரியர் அஷ்வினி குமார் மொஹாபாத்ரா கூறும்போது, அஜர்பைஜான், அர்மீனியா மோதலில் இந்தியா எதனுடனும் அணிசேராத நிலையையே கொண்டிருக்கும். அதே சமயம், துருக்கி வழியை அஜர்பைஜான் பின்பற்றுவதால் அந்நாட்டுடனான உறவை இந்தியா கைவிடும் என்று கூற முடியாது என்று தெளிவுபடுத்துகிறார்.

"துருக்கியர்களும் அஜர்பைஜானியர்களும் பரஸ்பரம் சகோதரத்துவத்தை பேணி வருகிறார்கள். அஜேரிகள் எனப்படும் அஜர்பைஜானியர்கள், அடிப்படையில் தங்களை துருக்கி வழி வந்தவர்களாகவே கருதுகிறார்கள். இன, மொழியியல் ரீதியில் அவர்கள் அந்த நம்பிக்கையை அதிகமாகவே கொண்டிருக்கிறார்கள். எனவே, நட்பார்ந்த உறவை விட இரு நாட்டவர்களின் உறவு, சகோதரத்துவத்துவம் தொடர்புடையது" என்று பேராசிரியர் அஷ்வினி குமார் மொஹாபாத்ரா தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

அஜர்பைஜானில் வாழும் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்களா?

பேராசிரியர் மொஹாபாத்ராவை பொருத்தவரை, இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை என்கிறார்.

"அப்படியெல்லாம் நடக்காது. ஏனென்றால், அஜர்பைஜான், அர்மீனியா விவகாரத்தில் இந்தியாவுக்கு நேரடி தொடர்போ தலையீடோ கிடையாது. பொதுவாக இரு நாடுகளுடனுமே இந்தியா இணக்கமான உறவையே கொண்டிருக்கிறது. இந்தியாவில் தயராரிக்கப்பட்டு வெளிவரும் திரைப்படங்கள், அஜர்பைஜானில் வெகுவாக வரவேற்கப்படுகின்றன. அதைப்போலவே இந்தியர்கள் மீதான அவர்களின் பார்வையும் மென்மயானதாக உள்ளது," என்கிறார் மொஹாபாத்ரா.

இந்தியர்களின் தற்போதைய நிலை எப்படி உள்ளது?

அஜர்பைஜானில் வாழும் இந்தியர்கள் பெரும்பாலும் பக்கூவல் வாழ்கிறார்கள். அங்குள்ள மருத்துவர்கள், ஆசிரியர்கள், எண்ணெய் உற்பத்தி பணிகளில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர்.

இந்தியர்களின் தற்போதைய நிலை எப்படி உள்ளது?

பட மூலாதாரம், EMBASSY OF THE REPUBLIC OF ARMENIA TO THE UK

தலைநகர் பாக்கூவில் சொந்தமாக மருத்துவ நிலையம் நடத்தி வரும் டாக்டர் ரஞ்சினி சந்திர டிமிலோ, இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தின் விஜயவாடா நகரைச் சேர்ந்தவர். பிபிசியிடம் அஜர்பைஜான் கள நிலவரத்தை விவரித்த அவர், "இந்தியர்கள் பற்றி கவலைப்படும் அளவுக்கு இங்கு பிரச்னை கிடையாது. தலைநகர் பாக்கூவில் இருந்து 400 கி.மீ தூரத்தில்தான் மோதல்கள் நடக்கின்றன. பெரும்பாலான இந்தியர்கல் பாக்கூவில்தான் உள்ளனர். ஆனால், இரு தினங்களுக்கு முன்பு இங்கிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள அர்மீனியாவின் சிவில் பகுதியில் ஒரு தாக்குல் நடந்திருக்கிறது" என்று கூறினார்.

டாக்டர் ரஜினியின் கூற்றுப்படி அர்மீனியா சிவில் பகுதியில் தாக்குதல் நடக்கிறதே தவிர, அஜர்பைஜானில் சிவில் பகுதிகளில் எந்த தாக்குதல்களும் இல்லை.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி நாகோர்னோ, காராபாக் பிராந்தியம் அஜர்பைஜான் வரம்புக்குள் உள்ளது. அதனாலேயே தங்களுடைய சொந்த பிராந்தியத்தை மீட்டெடுக்க அஜர்பைனியர்கள் மோதி வருகிறார்கள் என்கிறார் டாக்டர் ரஜினி.

மேலும் அவர், அஜர்பைஜானில் ஒவ்வொருவரும் 18 வயதை நிறைவு செய்த பிறகு அந்நாட்டு ராணுவத்தில் கட்டாயம் இரண்டு ஆண்டுகளுக்கு பணியாற்ற வேண்டும். போர் காலத்தில் ஒவ்வொரு சாதாரண குடிமகனும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

அத்தகைய ஓர் மோதலில் தமது வசிப்பிடத்துக்கு அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த சிறுவன் உயிரிழந்ததையும் டாக்டர் ரஜினி நினைவுகூர்ந்தார்.

பிரச்னை என்ன?

நாகோர்னோ, காராபாக் இடையிலான பரப்பளவு 4,400 சதுர கிலோ மீட்டர்களுக்கு அப்பால் விரிவடைந்துள்ளது. அங்கு அர்மீனிய கிறிஸ்துவர்களும், துருக்கிய முஸ்லிம்களும் வாழ்கிறார்கள். சோவியத் யூனியன் காலத்தில், அஜர்பைஜானுடன் இணைந்த சுயாதீன பிராந்தியமாக அவை விளங்கின. சர்வதேச அளவில், அவை அஜர்பைஜானின் பகுதியாகவே கருதப்படுகிறது. ஆனால், அங்கு வாழும் பெரும்பாலானவர்கள் அர்மீனியர்கள்.

பிரச்னை என்ன?

பட மூலாதாரம், EPA / AZERBAIJAN DEFENCE MINISTRY

1980களிலும் 1990களிலும் போர் மூண்டபோது, 30 ஆயிரத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டனர். சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர்.

அந்த நேரத்தில் நாகோர்னோ, காராபாக் பிராந்தியத்தின் சில பகுதிகளை பிரிவினைவாத சக்திகள் கைப்பற்றின. பிறகு 1994ஆம் ஆண்டில் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு அமைதிப்பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்தாலும் அந்த பிராந்தியத்தில் அடிக்கடி பதற்றம் தொடர்கிறது.

அதுபோலவே, சமீபத்திய பதற்றத்தின்போதும் மோதல் தீவிரமாகி இரு நாடுகளும் பரஸ்பரம் மோதிக்கொள்ளும் நிலை உருவானது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: