You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய சுமார் 500 திமிங்கிலங்கள் - காரணம் என்ன?
ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் சிக்கியிருந்த 108 திமிங்கிலங்கள் மீண்டும் கடலுக்குள் பத்திரமாக விடப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கின. அதில் பிழைத்திருந்த 108 திமிங்கிலங்கள்தான் தற்போது மீண்டும் கடலுக்குள்ள பத்திரமாக விடப்பட்டுள்ளன.
மீட்புப் பணியாளர்கள் முதலில் 270 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருப்பதைக் கண்டனர். ஆனால் அதன்பின் மீண்டும் ஒரு 200 திமிங்கிலங்கள் வந்து சேர்ந்தன. இதுவரை இல்லாத அளவிற்கு திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருப்பது முதல்முறையாகும்.
மீட்புப் பணியாளர் ஐந்து நாட்கள் கடுமையாக உழைத்து உயிருள்ள திமிங்கிலங்களை கடலுக்குள் விட்டுள்ளனர்.
ஆனால் தற்போது இறந்துபோன மீதமுள்ள திமிங்கிலங்களை எப்படி அகற்றுவது என்ற மிகப்பெரிய குழப்பம் எழுந்துள்ளது.
`பைல்ட திமிங்கிலங்கள்` என்று சொல்லக்கூடிய இவை ஏன் கரை ஒதுங்குகின்றன என்ற காரணம் தெரியவில்லை. இருப்பினும் சில நிபுணர்கள், அவை தாங்கள் வேட்டையாடும் மீன்களைத் தொடர்ந்து கொண்டுவந்து இவ்வாறு கடலில் சிக்கிக் கொள்கின்றன என்கின்றனர்.
சில நிபுணர்கள், திமிங்கில கூட்டத்தில் ஒன்று தவறாக வழிநடத்தி மொத்த கூட்டத்தையும் கடலில் சிக்க வைத்துவிடுகிறது என்கின்றனர்.
நரேந்திர மோதி ஐ.நாவில் உரை - முக்கிய அம்சங்கள்
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் உரை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச்சபைக் கூட்டத்தில் ஒளிபரப்பானது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐநாவின் பொதுச்சபை கூட்டத்தில் தலைவர்கள் யாரும் நேரடியாக கலந்து கொள்ளவில்லை.
உலக நாடுகளின் தலைவர்களின் உரைகள் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு நரேந்திர மோதியின் உரையின் ஒளிபரப்பு தொடங்கியது.
விரிவாக படிக்க:நரேந்திர மோதி ஐ.நாவில் உரை - 15 முக்கிய அம்சங்கள்
உக்ரைன் ராணுவ விமான விபத்து: 26 பேர் பலி
உக்ரைனில் ராணுவ விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வான் பாதுகாப்பு படையில் சேர்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் கார்கீவ் நகரில் உள்ள ஏர்போர்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வந்த 20 பயிற்சி மாணவர்கள் மற்றும் ஏழு அதிகாரிகள், ஆண்டனோவ்- 26 எனும் இந்த பயிற்சி விமானத்தில் இருந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளான போது அதில் இருந்த 27 பேரில், 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
ஹெச். ராஜா பெயர் இல்லாது பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைமை இன்று அறிவித்துள்ள தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த ஹெச். ராஜாவின் பெயர் இடம்பெறாமல் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜே.பி. நட்டா தலைமை பொறுப்புக்கு வந்தபின்பு அவரது தலையின்கீழ் இயங்கும் புதிய நிர்வாகிகள் பட்டியல் இது என்றும், ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் மாற்றப்பட்டு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் வட்டாரங்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தன.
இதன்மூலம் ஹெச். ராஜா தேசிய செயலாளர் பதவியில் நீடிக்கவில்லை என்பது உறுதியாகிறது.
2014ஆம் ஆண்டு முதல் ஹெச். ராஜா பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவராக இருந்து வந்தார்.
விரிவாக படிக்க:ஹெச். ராஜா பெயர் இல்லாத பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்
தமிழில் ட்வீட் செய்த நரேந்திர மோதி - 'எனது நண்பர் மகிந்த ராஜபக்ஷ'
இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இடையே காணொலி வாயிலாக இன்று இருதரப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த சந்திப்பின் தொடக்கத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை ஆளும் கட்சியின் சமீபத்திய தேர்தல் வெற்றியும் ராஜபக்ஷ அரசின் கொள்கைகளும் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உதவும் என்று கூறியுள்ளார்.
"உங்கள் கட்சியின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்திய - இலங்கை உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது," என்று மோதி குறிப்பிட்டிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: