You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உக்ரைன் ராணுவ விமான விபத்து: 26 பேர் பலி, உயிர் தப்பிய ஒருவர்
உக்ரைனில் ராணுவ விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வான் பாதுகாப்பு படையில் சேர்வதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனின் கார்கீவ் நகரில் உள்ள ஏர்போர்ஸ் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்று வந்த 20 பயிற்சி மாணவர்கள் மற்றும் ஏழு அதிகாரிகள், ஆண்டனோவ்- 26 எனும் இந்த பயிற்சி விமானத்தில் இருந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளான போது அதில் இருந்த 27 பேரில், 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார்.
விமான விபத்திலிருந்து இருவர் தப்பியதாக ஆரம்பகட்ட செய்திகள் வெளியாகின. எனினும் அந்த இருவரில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூழலில் உயிரிழந்துள்ளார்.
முதல்கட்ட விசாரணையில் விமானம் விபத்துக்குள்ளான போது அதன் கேப்டன்தான் அதை இயக்கினார் என்றும் பயிற்சி மாணவர்கள் யாரும் அதை இயக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விமானம் விபத்துக்குள்ளான போது அங்கு பெரும் தீ ஏற்பட்டது; அது பின்னர் அணைக்கப்பட்டது.
சூஹுய்வ் எனும் நகரில் இருக்கும் ராணுவ விமான தளத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்ததாக உக்ரைன் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிதிலமடைந்த விமானத்தின் பாகங்களுக்குள் இருந்து உடலில் தீப்பற்றியபடி ஒருவர் வெளியே ஓடி வந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
இந்த விபத்தின் காரணமாக ஒருநாள் தேசிய தூக்கம் அறிவித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, விமானத்தை இயக்கியவர்கள் தவறாக இயக்கியது, தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் செய்த தவறு அல்லது விமானத்தின் மோசமான பராமரிப்பு ஆகிய நான்கில் ஒன்றுதான் இந்த விபத்துக்கு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று விசாரணையாளர்கள் கருதுகிறார்கள்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உக்ரைன் அரசுடன் போராடி வருகிறார்கள்.
ஆனால் அவர்களுக்கும் இந்த விபத்துக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை.
அரசுப் படையினருக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சண்டை நடக்கும் இடத்திலிருந்து சூஹுய்வ் நகரம் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: