You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
லெபனான்: ரஃபீக் ஹரிரி படுகொலை வழக்கில் ஒருவர் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு
லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி, 2005ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா தீவிரவாத குழுவைச் சேர்ந்த நால்வரில் ஒருவர் குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல், இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக ஹெஸ்போலா குழுவைச் சேர்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் மேலும் மூவருக்கு எதிரான வழக்கு, சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இன்று தீர்ப்பு அளித்த சர்வதேச நீதிமன்ற நீதிபதி, ரஃபீக் ஹரிரி உட்பட 22 பேர் கொல்லப்பட்டது மற்றும் 226 காயம் அடைந்த கார் தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அய்யாஷ் குற்றவாளி என்றும் அவர் தீவிரவாத செயல் புரிந்தார் என்பதும் நிரூபணமாவதாக தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட மூவர், வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவதாக சர்வதேச நீதிமன்றம் கூறியது.
அதே சமயம், ஹெஸ்போலா குழுவின் தலைமை அல்லது அதை ஆதரிக்கும் சிரியாவுக்கு நடந்த தாக்குதலில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பில் கூறியது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் யார்?
கடந்த 2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, பெய்ரூட்டில் நடத்தப்பட்ட கார் தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்தில் லெபான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரி மற்றும் 21 பேர் கொல்லப்பட்டார்கள்.
அந்த சம்பவத்தில் ஹெஸ்போலா தீவிரவாத குழுவுக்கு தொடர்பு இருப்பதாக தொடக்கம் முதலே சந்தேகம் எழுப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில், சலீம் அய்யாஷ் (56), ஹுஸ்ஸேன் ஹஸ்ஸன் ஒனீஸ்ஸி(46), அஸ்ஸாத் ஹஸ்ஸன் சாப்ரா(43), ஹஸ்ஸன் ஹபீப் மெர்ஹி(54) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் ஹெஸ்போலா குழுவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் மேலும் குற்றம்சாட்டப்பட்டிருந்த முஸ்தஃபா பத்ருதீன் என்ற ஹெஸ்போலா இயக்க ஆயுதப்பிரிவு தளபதி 2016இல் சிரியாவில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது பெயர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளி என்று சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அய்யாஷ் மீது வெடிபொருட்களை பயன்படுத்தி தீவிரவாத செயல் புரிந்தது உள்ளிட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தன. பத்ருதீனுடன் இணைந்து செயல்பட்டு லெபனான் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரிரியை படுகொலை செய்ய ஒருங்கிணைந்து செயல்பட்டதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- "மண்ணின் மக்களுக்கே அரசு வேலை": மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் அறிவிப்பு
- டிரம்ப் Vs பைடன்: மிஷெல் ஒபாமா வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வ காணொளி
- தூத்துக்குடி: காவலரை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொன்ற சந்தேக நபர் பலி
- ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுங்கள்: தலைவர்கள், சூழலியல் அமைப்பு கோரிக்கை
- சிறப்புக் குழந்தைகள்: ஊரடங்கு காலத்தில் பெற்றோர் செய்வது என்ன?
- அமித் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி; பிரணாப் தொடர்ந்து கவலைக்கிடம்
- கொரோனா வைரஸ்: தமிழகத்தில் உண்மையில் எத்தனை மருத்துவர்கள் பலியானார்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: