You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பக்ரீத் விழா சண்டைநிறுத்தம்: ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் குறைந்தது 17 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் லோகர் மாகாணத்தில் நடந்த சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈத் திருவிழாவுக்காக பொதுமக்கள் பலரும் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் மாகாண ஆளுநரின் அலுவலகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
ஈத் திருவிழாவை முன்னிட்டு தாலிபன் அமைப்பினர் மூன்று நாள் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.
இந்த சண்டை நிறுத்தம் இன்று, வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது. சண்டை நிறுத்தம் அமலவாதற்கு முந்தைய நாள் (வியாழக்கிழமை) இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று தாலிபன் கூறியுள்ளது. எனினும் இஸ்லாமிய அரசு அமைப்பு இதுகுறித்து கருத்து எதையும் வெளியிடவில்லை.
இந்தத் தாக்குதல் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று லோகர் மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் தேவார் லவாங் தெரிவித்துள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
"ஈத் அல்-அதா இரவின்போது பயங்கரவாதிகள் மீண்டும் தாக்கியுள்ளனர். நம் மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்," என்று ஆப்கானிஸ்தான் உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாரிக் அரியன் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கும் தங்கள் அமைப்புக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று தாலிபன் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபீஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
தாலிபான் - ஆஃப்கன் அரசு சண்டை நிறுத்தம்
அரசு மற்றும் தாலிபன் அமைப்பினர் இடையே நிரந்தரமான சண்டை நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கைகள் உள்ளன.
ஆனால் தங்கள் வசம் உள்ள கைதிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பான சிக்கல்களால் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
4,400க்கும் அதிகமான தாலிபன் கைதிகளை தாங்கள் விடுவித்துள்ளதாக ஆஃப்கன் அரசு தெரிவித்துள்ளது.
தங்கள் வசம் உள்ள அரசு தரப்பை சேர்ந்த 1,005 கைதிகள் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று தாலிபன் அமைப்பு தெரிவிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: