You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியா: முதல் கொரோனா தொற்று என அரசு அறிவிப்பு- என்ன நிலவரம்?
வட கொரியாவில் முதல் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற ஒரு நபர், இருநாட்டு எல்லை வழியாகக் கடந்த வாரம் வட கொரியா திரும்பியதாகவும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்திய வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன், எல்லை நகரான கேசாங்கில் பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.
தங்கள் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பே இல்லை என முன்பு வட கொரியா கூறியிருந்தது. ஆனால், இதற்கு வாய்ப்பே இல்லை என நிபுணர்கள் கூறினர்.
''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தென் கொரியாவுக்குத் தப்பித்துச் சென்ற நபர், கடந்த ஜூலை 19-ம் தேதி சட்டவிரோதமாக எல்லையைக் கடந்து வந்துள்ளார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது'' என கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் வைரசைக் கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை உடனே செய்யுமாறு சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் கிம் வலியுறுத்தினார்.
அத்துடன், கடும் பாதுகாப்புகள் நிறைந்த எல்லையை அந்த நபர் எப்படிக் கடந்துவந்தார் என்பது குறித்த விசாரணைக்கு கிம் உத்தரவிட்டுள்ளார் என்றும், இதற்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார் என்றும் கேசிஎன்ஏ கூறுகிறது.
அதே சமயம், ராணுவம் விலக்கப்பட்ட இரு நாட்டு எல்லையை சமீபத்திய நாட்களில் யாரும் சட்டவிரோதமாகக் கடக்கவில்லை என தென் கொரியா தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவலைத் தடுக்க, ஆறு மாதங்களுக்கு முன்பு தங்கள் நாட்டு எல்லையை மூடிய தென் கொரியா ஆயிரக்கணக்கான மக்களைத் தனிமைப்படுத்தியது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் வட கொரியா வெற்றி பெற்றுள்ளது என கிம் ஜோங் உன் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
பிற செய்திகள்:
- அமெரிக்காவை தாக்கும் மற்றொரு அபாயம்: 32 பகுதிகளுக்கு ஆபத்து - விரிவான தகவல்கள்
- புதுச்சேரி எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு; திறந்தவெளியில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடர்
- முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு இழப்பீடாக 68 கோடி ரூபாய் நிர்ணயம்
- கொரோனா தாக்கிய கர்ப்பிணி பெண்களுக்கு தனிக்கவனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :