You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
துப்பாக்கி ஏந்திய இளம்பெண் 2 தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார் - கொண்டாடும் ஆப்கானிஸ்தான் சமூக ஊடகம்
ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பதின் வயது பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறார்.
தமது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தமது குடும்பத்தின் ஏகே 47 துப்பாக்கியை கையில் ஏந்திய இந்தப் பெண், இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் காயமடைந்ததாக கோர் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பெண்ணின் தந்தை அரசாங்க ஆதரவாளர் என்பதால், தீவிரவாதிகள் அவர்கள் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
துப்பாக்கி ஏந்தியபடி இருக்கும் அந்தப் பெண்ணின் புகைப்படம் மிகவும் வைரலானது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு க்ரிவா கிராமத்தில் இருக்கும் அவரது வீட்டைத் தாக்க மேலும் அதிக தீவிரவாதிகள் வந்துள்ளனர். ஆனால், அக்கிராம மக்களும் அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களும் அவர்களை அடித்து விரட்டியதாகத் தெரிகிறது.
தாலிபன்களை சுட்ட அந்தப் பெண்ணுக்கு 14ல் இருந்து 16 வயதுக்குள் இருக்கும் என்று கூறிய அதிகாரிகள், அவரும், அவரது தம்பியும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
N-95 முகக்கவசம்: இந்திய அரசு புதிய எச்சரிக்கை
வால்வுகள் பொருத்தப்பட்ட என்-95 முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவதைத் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு இந்திய சுகாதாரத் துறையின் சுகாதார சேவை பொது இயக்குநர் ராஜீவ் கார்க் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், இந்த முகக் கவசங்கள் தொற்றுப் பரவலைத் தடுப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
காற்று வெளியே வந்து செல்ல வசதியாக முகக்கவசத்தில் அமைக்கப்படும் வால்வுகள் பிரத்தியேகமாக மருத்துவத் துறையினருக்காக தயாரிக்கப்படுவை என்றும், அந்த முகக்கவசங்களை பொதுமக்கள் தவறான முறைகளில் பயன்படுத்துவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #
கந்த சஷ்டி கவசம்: அதிமுகவை விமர்சிக்கும் பாஜக
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிமுக அரசை கடுமையாக எச்சரித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் பக்கத்தில் கந்த சஷ்டி கவசம் பாடலை விமர்சித்து வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக இந்து மத அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
"கோவையில் கடந்த காலத்தில் நடந்த கொடூரம் மீண்டும் நடைபெறுவதை சமீபத்தில் நடந்த அறிகுறிகள் காட்டுகின்றது. கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது இது கண்டனத்திற்குரியது. கோவில் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினரை சுதந்திரமாக இந்த அரசு செயல்பட விடவில்லை" என சி.பி.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
குவைத் புதிய சட்டம்: பறிபோகும் வேலைவாய்ப்பு, தவிக்கும் இந்தியர்கள்
வெளிநாட்டுப் பணியாளர்களைக் குறைக்க வழிவகை செய்யும் மசோதா குவைத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. இது சட்டமாக வடிவம் பெற அரசின் அனுமதி தேவை.
அரசு மட்டும் அனுமதித்துவிட்டால், பிரதிக் தேசாயுடன் சேர்த்து குவைத்தில் வசிக்கும் 8 லட்சம் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். குவைத்தின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள். இதனை 30 சதவீதமாக குறைக்கத் திட்டமிடுகிறது குவைத்.
இப்போது குவைத்தில் வசிக்கும் 70 சதவீத வெளிநாட்டவர்களில் கணிசமானவர்கள் இந்தியர்கள்.
இந்த மசோதா சட்ட வடிவம் பெற்று நிறைவேறும்பட்சத்தில் இந்தியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுவார்கள்.
விரவாகப் படிக்க:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனை தொடங்கியது
கொரோனா வைரஸ் தடுப்புக்காக இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவாக்சின் மருந்தை, மனிதர்கள் மீது செலுத்தும் சோதனை, ஜூலை 21 அன்று சென்னையில் எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.
இந்திய அளவில் நான்கு இடங்களில் மனிதர்கள் மீதான கொரோனா தடுப்பு மருந்து சோதனை நடைபெறும் இடங்களில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்து சோதனை , ஏற்கனவே மற்ற மூன்று இடங்களில் தொடங்கிவிட்டது.
விரவாகப் படிக்க:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :