You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சே குவேரா: கம்யூனிச புரட்சியாளர் பிறந்த வீடு விற்பனைக்கு - விரிவான தகவல்கள்
தென் அமெரிக்காவில் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்யூனிச புரட்சியாளர் எர்னஸ்டோ சே குவேராவின் பிறந்த வீடு விற்பனைக்கு வந்துள்ளது. இந்த இடம் அர்ஜெண்டினாவின் ரோசரியோ நகரத்தில் உள்ளது.
அங்கே இருக்கும் தொன்மையும் புதுமையும் கலந்த அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில், 2,580சதுர அடி கொண்ட சே குவேராவின் குடும்பம் வாழ்ந்த பகுதியை 2002ல் தற்போதைய உரிமையாளர் ஃப்ரான்ஸிஸ் ஃபரூக்கியா வாங்கியதாக கூறியுள்ளார்.
அந்த வீட்டை கலை மற்றும் கலாசாரக் கூடமாக மாற்ற வேண்டும் என அவர் நினைத்ததாகவும், ஆனால் அந்த திட்டம் நிறைவேறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த வீட்டை விற்பதற்கான ஏலத்தின் ஆரம்ப விலை என்ன என்பதை அந்த அர்ஜென்டீனியத் தொழில் அதிபர் கூறவில்லை.
உர்க்விஸா மற்றும் எண்டெர் ரியோஸ் எனப் பெயரிடப்பட்ட தெருக்களுக்கு இடையே அமைந்திருக்கும் அந்தக் கட்டடம் பல ஆண்டுகளாக எண்ணற்ற பார்வையாளர்களை ஈர்த்தது.
அவ்வாறு வந்த பார்வையாளர்களில் உருகுவே நாட்டின் முன்னாள் அதிபர் ஜோஸ் பெப்பே முஜிகா மற்றும் கியூப முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவின் குழந்தைகளும் அடங்குவர்.
ஆனாலும் 1950களில் தென் அமெரிக்க கண்டம் முழுவதும் சே குவேராவோடு மோட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்ட அல்பெர்ட்டோ கிரேனடோஸ் அங்கு வந்த மிகவும் பிரபலமான பார்வையாளர் ஆவார்.
இவர்கள் மேற்கொண்ட பயணம் குறித்து பின்னாளில் 'மோட்டர் சைக்கிள் டைரீஸ்' எனும் பெயரில் புத்தகமாக எழுதினார் அல்பெர்ட்டோ. இதைத் தழுவி ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.
சே குவேரா 1928ல் ஒரு வசதியான உயர் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். ஆனால், தென் அமெரிக்காவில் இருந்த ஏழ்மையும் பசியும் அவரைக் கம்யூனிசப் போராளியாக மாற்றின.
1953 முதல் 1959ல் கியூபப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்தார். அந்தப் புரட்சி ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா என்னும் சர்வதிகாரியின் ஆட்சியை கவிழ்த்தது.
இத்தகைய புரட்சியை தென் அமெரிக்கா முழுவதும் பரப்ப நினைத்தார் சே குவேரா.
கியூபாவில் மத்திய அமைச்சராகவும், மத்திய வங்கி ஆளுநராகவும் இருந்த சே குவேரா, அந்தப் பதவிகளை விட்டுவிட்டு, பொலிவியா அரசுக்கு எதிராக புரட்சி செய்யும் புரட்சி படைகளை வழிநடத்த பொலிவியா சென்றார்.
ஆனால், அமெரிக்கப் படையின் உதவியோடு பொலிவிய ராணுவம் சே குவேராவையும் அவரது போராளிகளையும் பிடித்தது.
1967, அக்டோபர் 9 அன்று லா ஹிகேரா என்னும் கிராமத்தில், அமெரிக்க அரசின் ஆதரவு பெற்ற பொலிவிய அரசுப் படைகளால் சே குவேரா கொல்லப்பட்டார். பின்னர் ரகசியமாக ஓர் இடத்தில் அவரது உடல் புதைக்கப்பட்டது.
1997ல் அவருடைய மற்றும் அவரது சக போராளிகளின் எலும்புகள் கண்டறியப்பட்டு கியூபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அரசு மரியாதையுடன் அவர்களது, கியூபாவில் அவர்களது உடல் எச்சங்கள் மீண்டும் புதைக்கப்பட்டன.
அவருடைய ஆதரவாளர்கள் அர்பணிப்பு மற்றும் தியாகத்திற்கு முன்னுதாரணமாக அவரைப் பார்த்தனர். அவரை விமர்சிப்பவர்கள் சே குவேராவை மிகவும் கொடூரமான மனிதாகப் பார்த்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: