You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் விமான விபத்தில் இறந்ததாக கருதப்படும் பெண் மீது இணைய வசவுகள் ஏன்?
- எழுதியவர், சாய்ரா ஆஷர்
- பதவி, பிபிசி
பாகிஸ்தானில் மே 22ஆம் தேதி நடந்த விமான விபத்தில் இறந்ததாகக் கருதப்படும்சாரா அபீத் என்ற ஒரு முன்னணி மாடல், ஒரு 'ஒழுக்கக்கேடான வாழ்க்கையை' வாழ்ந்ததாக இணையத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
சாராவின் உடை மற்றும் வாழ்க்கை முறையை விமர்சித்து கடுமையான விமர்சனங்கள் வந்ததால், அவரது சமூக ஊடக கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
28 வயதான சாரா, கராச்சியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்துள்ளார் என்று பயணிகள் பட்டியல் மற்றும் சாராவின் நண்பர்கள் மூலம் தெரியவருகிறது.
உயிரிழந்தவர்களின் பெயர்கள் அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. ஆனால், அதில் பயணித்தவர்களில் இரண்டு ஆண்கள் மட்டுமே உயிர்பிழைத்ததாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
ஆனால், தனது சகோதரி உயிர்பிழைத்துள்ளார் என்றும், போலிச் செய்திகளை பரப்புவதை நிறுத்துமாறும் அவரது சகோதரர் கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
அவரது இன்ஸ்டாகிராம். ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளைக் காண முடியவில்லை. இதனை அவரது குடும்பத்தினர் நீக்கினார்களா அல்லது அந்த நிறுவனங்கள் நீக்கினவா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பழமைவாத சிந்தனைகள் வேரூன்றியுள்ள பாகிஸ்தானில் பெண்களின் ஆடை மற்றும் வாழ்க்கை சுதந்திரத்திற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
பாகிஸ்தானில் மிகப்பெரிய ஆடை நிறுவனங்களுக்குப் பணியாற்றியுள்ள சாரா, கடந்த ஜனவரி மாதம் ஹம் ஸ்டைல் விருது நிகழ்வில் சிறந்த பெண் மாடல் என்ற விருதை பெற்றார்.
சாரா விமான விபத்தில் இறந்ததாகச் செய்தி பரவிய பிறகு, அவரது மத நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கி சமூக ஊடக கணக்கில் நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் பதியப்பட்டன.
அவரது வாழ்க்கை தேர்வுக்கு ஏற்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளது என பலர் கமெண்ட் செய்தனர்.
அவர் நவநாகரிகமான ஆடைகள் அணிந்திருக்கும் படங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு, பாவம் செய்ததற்கான எடுத்துக்காட்டு என கூறப்பட்டுள்ளது.
அனைவருக்கும் தங்கள் உடல் பாகங்களைக் காண்பிக்கும் பெண்களை இறைவன் விரும்ப மாட்டான் என ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
பாகிஸ்தானில் பேஷன் துறையில் இருக்கும் பெண்கள் மதத்தின் பெயரால் கொலை மற்றும் பாலியல் வல்லுறவு மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுவது வழக்கம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: