You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தான் விமான விபத்து: 97 பேர் பலி, ஐவரின் உடல்களை தேடும் பணி தீவிரம்
பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரம் என அழைக்கப்படும் கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 92 பேர் உயிரிழந்துள்ளது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் ஐவரின் உடல்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் சிந்து மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 91 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களும் இருந்துள்ளனர். இந்தத் 99 பேரில் இருவர் உயிர் பிழைத்துள்ளனர்.
இறந்தவர்களில் 60 பேரின் உடல்கள் ஜே.பி.எம்.சி மருத்துவமனையிலும், 32 பேரின் உடல்கள் சி.எச்.கே மருத்துவமனையிலும் வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம்
இந்த விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு சென்று கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் இந்த விமானம் விபத்துள்ளாகியுள்ளது. எனவே பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.
பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமா இந்த விமானம் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. தரையிறங்கும் சிறிது நேரத்திற்குள்ளாக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோக்களிலிருந்து, விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து கரும்புகை சூழ்ந்துள்ளது தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
விபத்து குறித்த தகவல் வந்தவுடன் மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன; எனவே மீட்புப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து விலகியிருக்குமாறு மக்களை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாகிஸ்தானில் ரம்ஜான் விடுமுறையின் முதல் நாளான நேற்று, வெள்ளிக்கிழமை, பலர் தங்கள் குடும்பங்களை காண பயணம் மேற்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து எந்த ஒரு தகவலையும் பாகிஸ்தான் அரசு வழங்கவில்லை.
பாகிஸ்தானில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைந்து இரண்டு மாதங்களுக்கு பிறகு விமான சேவை மீண்டும் துவங்கியிருந்தது.
விபத்தை நேரில் பார்த்த மருத்துவர் கன்வால் நசிம், மதியம் சுமார் 3 மணியளவில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், வெளியே வந்த பார்த்தபோது மசூதிக்கு பின்னாலும், பக்கத்து வீடுகளிலிருந்தும் கரும்புகை வந்திருந்ததாகவும் பிபிசியிடம் தெரிவித்தார்.
விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் கன்வால், சிலர் அலறும் சத்தத்தையும் கேட்டுள்ளார்.
"சில நிமிடங்களுக்கு பிறகு போலீஸார் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்." என்றும் அவர் கூறுகிறார்.
இந்த விபத்துக்காக இரங்கல் தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் இதற்கு முன்பு நடந்த விமான விபத்துகள்
பாகிஸ்தான் வரலாற்றில் பயணிகள் விமானம் மற்றும் ராணுவ விமானம் என இதுவரை பல விமான விபத்துகள் நடைபெற்றுள்ளன.
சர்வதேச விமான விபத்துகளை கண்காணிக்கும் விமான விபத்து பதிவு அலுவலக தகவல்படி, பாகிஸ்தானில் இதுவரை 80க்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் நடந்துள்ளன என்றும், அதில் 1000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம், ராவல்பிண்டியில் உள்ள மோஹ்ரா காலோ என்ற பகுதியில் வழக்கமான பயிற்சியின்போது சிறிய ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐந்து ராணுவத்தினர் உட்பட 19 பேர் உயிரிழந்தனர்.
2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10ஆம் தேதி பாகிஸ்தானின் சர்வதேச விமானசேவையின் விமானம் ஒன்று முல்தான் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சற்று நேரத்தில் விபத்துக்குள்ளானதில், இரு உயர் நீதிமன்ற நீதிபதிகள், ராணுவ பிரிகேடியர்கள் இருவர், பாஹாவுதின் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட 45 பேர் உயிரிழந்துள்ளனர்.
2010ஆம் ஆண்டு தனியார் விமான சேவை நிறுவனமான ஏர்ப்ளூவின் விமானம் இஸ்லாமாபாத்தில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 152 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தான் வரலாற்றில் நடந்த மிக மோசமான விபத்து அதுவாகும்.
2012ஆம் ஆண்டு பாகிஸ்தானின் போஜா ஏர் விமான சேவை நிறுவனத்தின் போயிங் 737 -200 விமானம் ராவல்பிண்டியில் தரையிறங்கும் சமயத்தில் விபத்துக்குள்ளானதில் 121 பயணிகளும், ஆறு குழு உறுப்பினர்களும் உயிரிழந்தனர்.
2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையின் விமான ஒன்று, வடக்கு பகுதியிலிருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானதில் 47 பேர் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: