தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது - போலி சித்த மருத்துவர் மீது நடவடிக்கை

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமலர்: போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக வதந்தி பரப்பிய, போலி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார் என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக, காணொளிகளை திருத்தணிகாசலம் வெளியிட்டு வந்தார்.

இதுகுறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குநர் அளித்த புகாரின் அடிப்படையில், திருத்தணிகாசலம் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இந்து தமிழ் திசை: கொரோனாவால் பாதுகாப்புத் துறைக்கு பாதிப்பு

இந்தியப் பாதுகாப்பு சாதனத் தயாரிப்பாளர்கள் சங்கம், இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு உடன் காணொளி மூலம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார் என இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

அப்போது,''பொது முடக்கம் மற்றும் ஏற்கெனவே இருக்கும் விநியோக சங்கிலிகளுக்கு ஏற்பட்ட இடையூறு ஆகிய காரணங்களால் உற்பத்தித் துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது, இதற்கு பாதுகாப்பு சாதனங்கள் துறை விதிவிலக்கல்ல. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ராணுவத் தளவாடங்களை வாங்கும் ஒரே வாடிக்கையாளராக அரசாங்கம் மட்டுமே இருப்பதால், இதரத் துறைகளைவிட பாதுகாப்பு சாதனங்கள் துறை அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறது'' என கூறியுள்ளார்.

தி டைம்ஸ் ஆப் இந்தியா: காங்கிரஸ் அழைப்பை நிராகரித்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி

காங்கிஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் பங்கேற்கவில்லை என தி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா பிரச்சனை குறித்து, அதை அரசு சமாளிக்கும் விதம் குறித்தும் விவாதிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. மற்ற பெரும்பாலான எதிர்கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கும் என கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: