You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிம் ஜாங் உன்: மீண்டும் வந்தார் வட கொரியா தலைவர் - அரசு ஊடகம் சொல்வது என்ன?
வட கொரியா அரசு ஊடகம் தரும் தகவலின் படி, கடந்த இருபது நாட்களில் முதல் முறையாக பொது வெளியில் தோன்றி இருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.
உர தொழிற்சாலை ஒன்றினை கிம் ஜோங் உன் தொடங்கி வைத்தார் என்கிறது வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.
கிம் ஜோங் உன் வந்த போது விண்ணை பிளக்கும் அளவில் உற்சாகம் ததும்பியது என்கிறது கே.சி.என்.ஏ.
கடந்த இருபது நாட்களாக கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றாமல் இருந்தார். இதன் காரணமாக அவர் உடல்நிலை குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. இப்படியான சூழலில் அவர் பொதுவெளியில் தோன்றினார் என்று செய்தி அளிக்கிறது கே.சி.என்.ஏ..
கே.சி.என்.ஏ கூறும் செய்தியை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை.
கே.சி.என்.ஏ பின்னர் வெளியிட்ட புகைப்படத்தில் கிம் ஒரு தொழிற்சாலையினை தொடங்கி வைக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பிய போது, இது தொடர்பாக எந்த கருத்தையும் இதுவரை கூற விரும்பவில்லை என்றார்.
கே.சி.என்.ஏ கூறுவது என்ன?
வட கொரியா மூத்த அதிகாரிகள் மற்றும் அவர் தங்கையான கிம் யோ ஜாங் ஆகியோருடன் இந்த நிகழ்வில் கிம் கலந்து கொண்டார் என்கிறது கே.சி.என்.ஏ.
தொழிற்சாலையில் உற்பத்தி அமைப்பில் தமக்கு முழு திருப்தி என்று கூறிய கிம், வட கொரியாவின் ரசாயன தொழிலுக்கும், உணவு உற்பத்திக்கும் முக்கியமான பங்களிப்பை இந்த நிறுவனம் அளிப்பதாக கூறினார் என்கிறது கே.சி.என்.ஏ.
கிம் உடல்நிலை குறித்து சந்தேகம் வர காரணம் என்ன?
கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி கிம் ஜாங்-உன்னின் தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனத் தலைவருமான கிம் இல் சங்க்கின் பிறந்த தின கொண்டாட்டம் நடந்தது. இதில் கிம் ஜாங்-உன் கலந்து கொள்ளவில்லை.
இதுவரை இந்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது பலருக்குச் சந்தேகத்தை எழுப்பியது.
ஏப்ரல் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நடந்த இருவேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். அதன்பின் பொது இடங்களில் கிம் தோன்றவில்லை.
கடந்த வாரம் ஏவுகணை சோதனையை வட கொரியா நடத்தியது. அதில் அவர் கலந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படியான தகவல்களையும் வட கொரிய அரசு ஊடகம் வெளியிடவில்லை.
இப்படியான சூழலில் வட கொரியாவிலிருந்து வெளியேறிய சிலர் நடத்தும் இணையதளத்தில்தான் கிம் ஜாங்-உன் உடல்நிலை கவலைக்கிடம் என்ற செய்தி வெளியானது.
கிம் ஜாங்-உன் இதய நோயால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அவதியுறுவதாகவும், அடிக்கடி பாக்து மலைக்கு சென்றபின் இந்த நோய் அதிகரித்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் என்.கே டெய்லி நாளிதழுக்குத் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பல்வேறு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டன. அமெரிக்க ஊடகங்களில் இது தலைப்பு செய்தியானது.
ஆனால், தென் கொரிய அரசாங்கமும், சீன உளவுத்துறை அதிகாரிகளும் கிம் உடல்நிலை குறித்து வரும் அனைத்து தகவல்களையும் மறுத்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: