You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் கொரோனா வைரஸ்- பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டல விவரங்கள்
தமிழகத்தில் புதிதாக 203 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தாக்கத்தால் சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த 98 வயதான நபர் ஒருவர் இறந்துவிட்டார் என்பதால் தமிழகத்தில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் சென்னை முதல் இடத்தில் உள்ளது. சென்னை நகரத்தில் இன்று(ஏப்ரல் மே1) ஒரே நாளில் 3,200 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டு, 176 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையான 2,526 நபர்களில், 1,082 நபர்கள் சென்னையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
''சென்னையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை குறைக்க தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 703 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு கவனம் கொடுத்து வருகிறோம். தன்னார்வலர்களின் உதவியோடு அவர்களுக்கான மருத்துவ வசதிகள் அளிக்கிறோம்.பிற மாநிலங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையில் மாதிரிகளை சோதனை செய்கிறோம். இதுவரை தமிழகத்தில் 1,29,363 மாதிரிகளை சோதனை செய்துள்ளோம்,'' என்றார் அவர்.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்து பேசியபோது, 33,184 நபர்கள் அவரவர் வீடுகளில் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 40 நபர்கள் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்கள்
தமிழகத்தில் 12 மாவட்டங்கள்சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
சிவப்பு நிற மண்டலங்கள்: 1. சென்னை 2. மதுரை 3. நாமக்கல் 4. தஞ்சாவூர் 5. செங்கல்பட்டு 6. திருவள்ளூர் 7. திருப்பூர் 8. ராணிப்பேட்டை 9. விருதுநகர் 10. திருவாரூர் 11. வேலூர் 12.காஞ்சிபுரம் .
ஆரஞ்சு நிற மண்டலங்கள்: 1. தேனி 2. தென்காசி 3. நாகப்பட்டினம் 4. திண்டுக்கல் 5. விழுப்புரம் 6. கோவை 7. கடலூர் 8. சேலம் 9. கரூர் 10.தூத்துக்குடி 11. திருச்சிராப்பள்ளி 12. திருப்பத்தூர் 13. கன்னியாகுமரி 14. திருவண்ணாமலை 15. ராமநாதபுரம் 16. திருநெல்வேலி 17. நீலகிரி 18. சிவகங்கை 19. பெரம்பலூர் 20. கள்ளக்குறிச்சி 21. அரியலூர் 22. ஈரோடு 23. புதுக்கோட்டை 24. தருமபுரி
பச்சை நிற மண்டலங்கள்: 1. கிருஷ்ணகிரி
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: