You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலக சுகாதார நிறுவனத்துக்கு உதவியை நிறுத்திய அமெரிக்கா: உங்களுக்கு என்ன பாதிப்பு?
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்கா அளித்து வரும் நிதியை நிறுத்தப் போவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய்த் பரவல் விவகாரத்தில் அந்த நிறுவனம் "தன் அடிப்படைக் கடமையைச் செய்யத் தவறிவிட்டதால்'' இந்த நிதி உதவியை நிறுத்துவதாக அவர் கூறியுள்ளார்.
உலக சுகாதார நிறுவனம் என்பது என்ன, அதன் பணிகள் என்ன?
சுகாதாரம் மற்றும் மருத்துவ விவகாரங்களில் அதுதான் உலகின் தலையாய அமைப்பு.
ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைகக் கட்டடத்துக்குள் நுழையும் போது வண்ணங்களின் கலவையை தலைக்கு மேலே பார்க்கலாம்.
அதன் 194 உறுப்பு நாடுகளின் கொடிகளும் அங்கு இருப்பதால், நல்ல வெளிச்சமான நாட்களில் அந்த இடமே வண்ணங்களின் கலவையாக இருக்கும்.
இரண்டாம் உலகப் போர் காலத்தில் இருந்து இதுதான் உலகின் மருத்துவ தலைமை அலுவலகமாக வர்ணிக்கப்படுகிறது.
ஐ.நா.வின் இந்த அமைப்பு 1948ல் உருவாக்கப்பட்டது. "உலகப் பொது சுகாதாரத்தின் காவலன்'' என்று இது வர்ணிக்கப்படுகிறது.
"அனைத்து மக்களுக்கும் அதிகபட்ச அளவில் எட்டக் கூடிய மருத்துவ வசதிகளைப் பெற்று தருவதை" உறுதி செய்வது இதன் லட்சிய நோக்கமாகக் கருதப்படுகிறது. அது பெரிய பணி.
கடந்த 11 ஆண்டுகளில் ஆறு சர்வதேச சுகாதார அவசர நிலைகளை இந்த அமைப்பு சந்தித்துள்ளது. 2014ல் மேற்கு ஆஃப்ரிக்காவில் இபோலா, 2016ல் ஜிகா வைரஸ் பரவல், இப்போது கோவிட்-19 நோய்த் தொற்று உள்ளிட்டவை இவற்றில் அடங்கும்.
பின்வரும் பணிகளையும் இந்த அமைப்பு செய்கிறது:
· நோய்த் தொற்றுகள் ஏற்படும்போது "உலக அளவில் எச்சரிக்கையை'' எப்போது தருவது என முடிவு செய்தல்
· புதிய சிகிச்சைகள், தடுப்பூசி மற்றும் மருந்துகளை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்குதல
· நோய் உருவான பகுதிக்கு நிபுணர்களை அனுப்பி, இந்த சிகிச்சையில் எந்த அணுகுமுறை சரியாக வரும், எது சரிப்பட்டு வராது என்பதைக் கண்டறிதல்
பின்வருவன உள்ளிட்ட பல்வேறு சுகாதார விவகாரங்களுக்கும் உலக சுகாதார நிறுவனம் பொறுப்பாக உள்ளது:
· உலக அளவில் உடல்பருமன் மற்றும் நீரிழிவு நோய் பிரச்சனைகளைக் கையாளுதல்
· சாலை விபத்துகளில் மரணங்களைக் குறைத்தல்
· போலியோ போன்ற தடுப்பூசிகளால் ஒழிக்கக் கூடிய நோய்களை ஒழிப்பது
· பிரசவத்தின் போது தாய், சேய் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்கப் பணியாற்றுதல்.
அதிகாரம் இல்லை; ஆலோசனை மட்டும்
உலக சுகாதார நிறுவனம் ஆலோசனை கூறும் அமைப்பு மட்டுமே. தங்கள் குடிமக்களின் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தலாம், நோய்த் தொற்றை எப்படி தடுக்கலாம் என்று நாடுகளுக்கு இந்த அமைப்பு பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். அந்தப் பரிந்துரைகளை இந்த அமைப்பு அமல் செய்ய முடியாது. முடிவெடுத்து அமலாக்கும் அதிகாரம் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு மட்டுமே உண்டு.
அந்த ஆலோசனைகளை அமலாக்கும்போது அந்தந்த நாட்டு அரசுகள் உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பங்காற்றலாம் அல்லது ஆலோசனை கூற மட்டுமே பயன்படுத்தலாம்.
கோவிட்-19 நோய்த் தொற்றை உலக சுகாதார நிறுவனம் தவறாகக் கையாண்டுவிட்டதா?
யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள் என்பதைப் பொருத்து இதற்கான பதில் அமையும்.
டொனால்ட் டிரம்ப்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், அழுத்தமாக ஆமாம் என்றுதான் பதில் வரும்.
ஆனால் அமெரிக்காவில் இந்த நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதில் எப்படி கையாண்டார் என்பது குறித்து டிரம்ப் மீதே விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அங்கு இப்போது 600,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
கோவிட்-19க்கு முன்னதாகவே அவருக்கு சீனாவுடன் அரசியல் ரீதியில் பெரிய மோதல் இருந்து வந்தது.
இருந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பைத் தடுப்பது தொடர்பாக ஆரம்பத்தில் தாங்கள் கூறிய கருத்துகள் எப்படி மௌனமாக்கப்பட்டன என்று அந்த நாட்டில் உள்ள மருத்துவர்களும், மற்ற நாடுகளும் சீனாவின் மீது வருத்தங்கள் கொண்டிருந்த நிலையிலும், இந்த விஷயத்தில் சீனாவின் செயல்பாடுகளைப் பாராட்டி உலக சுகாதார நிறுவனம் கருத்து கூறியதை, விமர்சிக்கும் முதலாவது நபராக அமெரிக்க அதிபர் இல்லை.
சீனாவைப் பாராட்டிய கருத்தில் தாம் உறுதியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் கூறியுள்ளார்.
சீனாவின் செயல்பாடுகளால் சர்வதேச அளவில் இந்த வைரஸ் பரவும் வேகம் குறைந்தது என்றும், வரக் கூடிய சூழ்நிலையை எதிர்கொள்ள மற்ற நாடுகள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள அவகாசம் கிடைத்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த வைரஸ் குறித்த மரபணுக் குறியீடுகளை சீனா தானாகவே முன்வந்து பகிர்ந்த காரணத்தால், மருத்துவப் பரிசோதனை முறைகளை மற்ற நாடுகள் உருவாக்கத் தொடங்கின என்றும், தடுப்பூசி மருந்துகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் இறங்கின என்றும் அவரும், பல அறிவியலாளர்களும் கூறியுள்ளனர்.
இருந்தபோதிலும், சீனாவின் செயல்பாடு குறித்து பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.
"நோய்த் தொற்றின் ஆரம்ப நிலைகள் பற்றி உலகிற்கு சீனா சொன்னது பெரிய விஷயமல்ல, அதில் தாமதங்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது'' என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உலக பொது சுகாதாரத் துறை பேராசிரியராக இருக்கும் தேவி ஸ்ரீதர் கூறியுள்ளார்.
"ஆரம்பகட்டத்தில், இந்த விஷயத்தை மறைத்துவிட முயற்சித்தார்கள்,'' என்கிறார் அவர்.
மேற்கு ஆஃப்ரிக்காவில் இபோலா நோய் பரவியபோது உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் ஸ்ரீதர், தாமும்கூட உலக சுகாதார நிறுவனத்தின் "கடும் விமர்சகர்தான்'' என்று கூறினார்.
``எல்லா நாடுகளையும் உள்ளடக்கி, நோய்த் தொற்று பாதிப்பு உள்ள நாடுகளில் தீவிர நடவடிக்கை எடுக்கச் செய்யும் சமநிலையான முயற்சிகளை எடுப்பதில் உலக சுகாதார நிறுவனத்தின் முயற்சிகளில் நிறைய குறைபாடுகள் உள்ளன'' என்று அவர் கூறுகிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் பெரும்பகுதி பணி, அரசாங்க உறவுமுறை ரீதியிலானது. ஏனெனில், நோய்த் தொற்று குறித்து தகவல்களைப் பகிர வேண்டும் என்று நாடுகளை அது கட்டாயப்படுத்த முடியாது. அந்த நாடுகளாகவே முன்வந்து தரும் தகவல்களைத் தான் நம்ப வேண்டியுள்ளது.
சீனாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதாக டாக்டர் டெட்ரோஸ் கூறியிருந்தால் அந்த அமைப்புக்கு ``ஐந்து நிமிட நேர புகழ்'' கிடைத்திருக்கும். ஆனால், கோவிட்-19க்கு எதிரான உலக நாடுகளின் முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டிருக்கும்.
"எதை சாதித்திருக்க முடியும், ஒரு வாரம் கழித்து அவர் சீனாவை அணுகி, தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கேட்க வேண்டியிருக்கும்.''
நோய்த் தொற்றின் ஆரம்ப நாட்களில் தகவல்களைத் தெரிவிக்குமாறு சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் நிறைய அழுத்தம் கொடுத்தது என்று ஸ்ரீதர் நம்புகிறார். ஆனால் அவை திரைமறைவில் நடந்த விஷயங்கள்.
``ஊடகங்களுக்குத் தெரியும் நிலையில் வெளிப்படையாக இதுபோன்ற விஷயங்களைச் செய்வதில் அரசாங்க முறையிலான உறவுகளில் பெரிய வித்தியாசம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். ஓர் அமைப்பாக தனிப்பட்ட முறையில் செயலாற்றுவது, நடவடிக்கைகளை முன்னெடுப்பது மற்றும் காரியங்களை நடக்கச் செய்வதில் வித்தியாசம் உள்ளது'' என்கிறார் அவர்.
முந்தைய நோய்த் தொற்றுக் காலங்களில் என்ன நடந்தது?
உலக சுகாதார நிறுவனம் விமர்சனத்துக்கு ஆளாவது இது முதல்முறையல்ல.
2014-ல் இபோலா நோய்த் தொற்று பரவியபோது, ஐ.நா.வின் இந்த அமைப்பு மெதுவாகத்தான் செயல்பட்டது என்று கூறப்பட்டது. கினியில் முதலில் அந்த நோய் கண்டறியப்பட்டு ஐந்து மாதங்கள் கழித்துதான் சர்வதேச அவசரநிலையை இந்த அமைப்பு அறிவித்தது.
ஆனால் 2009ஆம் ஆண்டில், பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டபோது, சீக்கிரமாகவே செயலாற்றியது, தேவையில்லாமல் உலக அளவிலான நோய்த் தொற்றாக அறிவித்தது.
"இந்த வைரஸை அரசியலாக்க வேண்டாம்'' என்று முனைவர் டெட்ரோஸ் உலக நாடுகளை கேட்டுக் கொண்டதை அடுத்து, உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதி உதவியை நிறுத்திவைக்கப் போவதாக கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
- வைரஸுக்கு ஏற்ற சூழ்நிலையும், அதை எளிதில் கட்டுப்படுத்தும் வழிகளும்
- கோடைக் காலம் வந்தால் கொரோனா வைரஸ் சாகுமா?
இந்த நோய்த் தொற்று விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பற்றி மறு ஆய்வு நடத்த வேண்டும் என்ற யோசனையை அவர் வரவேற்றார். ஏனெனில் ``நமது தவறுகளில் இருந்து கற்றுக் கொண்டு, நமது பலங்களுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்'' என்று அவர் கூறினார்.
ஆனால் இப்போது நமது கவனம் ``இந்த வைரஸை எதிர்த்துப் போரிடுவதில்தான்'' இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கையால் என்ன தாக்கம் ஏற்படும்?
நாடுகளின் வளம் மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப உறுப்பினர் கட்டணங்கள் மற்றும் உலக நாடுகள் தாமாக முன்வந்து வழங்கும் பங்களிப்புகளை நம்பி செயல்படும் உலக சுகாதார நிறுவனத்துக்கு, அதிக நிதி கொடுக்கும் தனியொரு நாடாக அமெரிக்கா உள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் வருடாந்திர பட்ஜெட் 220 கோடி அமெரிக்க டாலர்களில் பெரும் பகுதி அந்த தன்னார்வ அடிப்படையிலான நன்கொடைகள் மூலம் கிடைக்கிறது.
கடந்த ஆண்டு அமெரிக்கா 40 கோடி டாலருக்கும் அதிகமாகக் கொடுத்துள்ளது.
இந்த நோய்த் தொற்றை சமாளிக்க உலக சுகாதார நிறுவனத்திற்கு ``அதிக நிதி தேவைப்படுகிறது, குறைவாக அல்ல'' என்று பிரிட்டனின் வெல்கம் அறக்கட்டளையின் டைரக்டர் டாக்டர் ஜெரெமி பர்ரர் கூறியுள்ளார்.
``நமது வாழ்நாளில் மிகப் பெரிய சவாலை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பு செய்யும் பணியை வேறு எந்த அமைப்பும் செய்ய முடியாது."'
``இது நமது ஒற்றுமையை வெளிக்காட்ட வேண்டிய நேரமே தவிர, பிரிவினையைக் காட்டும் நேரம் அல்ல. தேவையில்லாமல் சிக்கலை உண்டாக்கும் செயலில் அமெரிக்கா ஈடுபடுகிறது," என்று பேராசிரியர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
``இதனால் உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டால், கோவிட்-19 தடுப்பு திறன் மட்டும் பாதிக்காது, மலேரியா, காசநோய், போலியோ தடுப்பு நடவடிக்கைகளும் பாதிக்கும். கடந்த காலத்தில் ஒழிந்துவிட்டதாக நாம் நினைத்திருக்கும் எல்லா வகையான நோய்களும் மீண்டும் தாக்கும்'' என்று அவர் எச்சரிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: