கொரோனா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள மாநிலங்கள் தாங்களாக உபகரணங்களை வாங்கக்கூடாதா?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா தொற்று தீவிரமாக பரவிவரும் நிலையில், மாநில அரசுகள் தாங்களாக முக்கியமான மருத்துவக் கருவிகள், உபகரணங்களை வாங்கக்கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் தாங்களாக உபகரணங்களையும் கருவிகளையும் வாங்கிவருகின்றனர்.

கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக பல மாநில அரசுகள் முகக் கவசம், என் 95 முகக் கவசம், வென்டிலேட்டர்கள், ரேபிட் டெஸ்ட் கிட்கள், பிபிஇ உள்ளிட்டவற்றை வாங்க முயற்சித்துவரும் நிலையில், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி மத்திய அரசின் சார்பில் எல்லா மாநில அரசுகளுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

எல்லா மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், எல்லா மாநிலங்களுக்கும் முகக் கவசம், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட கருவிகளும் உபகரணங்களும் கிடைக்கச் செய்வது குறித்து ஏப்ரல் 1ஆம் தேதி அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டம் நடைபெற்றதாகவும் அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.

அதன்படி, கொரோனாவை எதிர்கொள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கு எந்த அளவுக்கு முகக் கவசம், என் - 95 முகக் கவசம், வென்டிலேட்டர்கள் போன்றவை எந்த அளவுக்குத் தேவைப்படும் என்பதை கணிக்க வேண்டும் என்றும் மாநில அரசுகளோ, யூனியன் பிரதேசங்களோ தாங்களாகவே முகக் கவசம், என் - 95 முகக் கவசம், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு ஆடைகள் ஆகியவற்றை வாங்கக்கூடாது என்றும் மத்திய சுகாதாரத் துறையே வாங்கி மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய சுகாதாரத்துறையின் செயலர் ஜி.கே. பிள்ளை இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார்.

சமூகவலைதளங்களில் இந்தக் கடிதம் வெளியானதும் பரபரப்பு ஏற்பட்டது. சுகாதாரம் என்பது மத்திய - மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் உள்ளபோது எப்படி மாநில அரசுகள் வாங்குவதைத் தடுக்க முடியும் எனவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு அரசு வாங்கியிருந்ததாகச் சொல்லும் ரேபிட் டெட்ஸ் கிட்கள் குறித்த தேதியில் மாநிலத்திற்கு வராமல் போன சம்பவம் இந்தக் கேள்வியை மேலும் வலுப்படுத்தியது.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி புதன்கிழமையன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, வியாழக்கிழமை இரவுக்குள் கொரோனாவைச் சோதனை செய்வதற்கான 50,000 துரித சோதனை தொகுப்புகள் வந்துவிடுமெனவும் ஏப்ரல் பத்தாம் தேதிவாக்கில் அதனை வைத்து சோதனைகளைத் துவங்கிவிட முடியுமென நம்புவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதற்குப் பிறகு, அது தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலையில் ஏப்ரல் பத்தாம் தேதியன்று தலைமைச் செயலர் கே. சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் "கொரோனாவுக்கான உபகரணங்களை மத்திய அரசுதான் வாங்கி, மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் நேற்று வந்திருக்க வேண்டிய ரேபிட் சோதனை கிட் இன்னும் வரவில்லையா?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

"'ரேபிட் டெஸ்ட் கிட்' நேற்று வந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசும் இதனை வாங்குவதற்கான ஆணையை பிறப்பித்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் வாங்கி நமக்குத் தர வேண்டும். ஆகவே ஓரிரு நாட்களில் வந்துவிடும்" என்று தெரிவித்தார்.

ஆனால், மத்திய அரசை நம்பியிராமல் தமிழ்நாடு தானாகவே மருத்துவ உபகரணங்களை வாங்க ஆரம்பித்துவிட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கடுத்த செய்தியாளர் சந்திப்பில் மீண்டும் செய்தியாளர்கள் இதே கேள்வியை எழுப்பியபோது, நமக்கு வர வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட் அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டது. நமக்கு இதற்குப் பிறகு வரும் எனத் தெரிவித்தார். இதையடுத்து, மருத்துவ உபகரணங்களை வாங்குவதில் மாநில அரசுகளுக்கு உள்ள சுதந்திரம் குறித்து மீண்டும் கேள்வி எழுந்தது.

தமிழக சுகாதாரத்துறை வட்டாரங்களில் மத்திய அரசின் இந்தச் சுற்றறிக்கை குறித்து கேட்டபோது, அந்தச் சுற்றறிக்கையை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று தெரிவிக்கின்றனர். "அப்படி மத்திய அரசே வாங்கி அளிப்பதாக இருந்தால், இதுவரை ஏதாவது உபகரணங்கள் மத்திய அரசிடமிருந்து வந்திருக்கிறதா? இல்லையே. மத்திய அரசிடமிருந்து உபகரணங்கள் வருவதற்காக யாரையும் சோதனை செய்யாமல் காத்திருக்க முடியுமா? அல்லது முகக் கவசங்கள் இல்லாமல் இருக்க முடியுமா? அதனால், நமக்குத் தேவையானவற்றை நாமே ஆர்டர் செய்து வாங்கிவருகிறோம்" என்று தெரிவிக்கின்றனர்.

தலைமைச் செயலர் கே. சண்முகமும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தினார். "இந்நோய் சீனாவில் பரவ ஆரம்பித்தவுடனேயே மருத்துவ உபகரணங்களை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலம் இதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டுவிட்டன. பிபிஇயைப் பொறுத்தவரை நாம் மத்திய அரசை நம்பி இல்லை. முகக் கவசம், வென்டிலேட்டர்களையும் நாம் அப்படித்தான் கொள்முதல் செய்துவருகிறோம். மத்திய அரசிடமும் கேட்டிருக்கிறோம். அதேபோலத்தான் சோதனை கிட்களையும் வாங்க ஆர்டர் செய்திருக்கிறோம். மத்திய அரசும் வாங்கும் ஆணைகளை அளித்திருப்பதால், முதலில் அவர்களுக்கு அளித்துவிட்டு பிறகு நமக்குக் கொடுப்பார்கள்" என்று தெரிவித்தார் அவர்.

முகக் கவசங்கள், என் - 95 முகக் கவசங்கள், பிபிஇ போன்றவை இந்தியாவிற்குள்ளேயே ஆர்டர் செய்து தொடர்ச்சியாகப் பெறப்பட்டுவருவதாகவும் வென்டிலேட்டர்களை தமிழ்நாட்டிற்குள்ளேயே உற்பத்தி செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் பல்வேறு செய்தியாளர் சந்திப்புகளில் முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலர் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.

வியாழக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி பேசும்போது, மாநில அரசு தனியாகவே சோதனைத் தொகுப்புகளை வாங்கிவருவதாகத் தெரிவித்தார். "டெஸ்ட் கிட்களைப் பொறுத்தவரை ஐசிஎம்ஆர் அளித்த 20 ஆயிரம் கிட்களை வழங்கியுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் 1,35,000 கிட்களை வாங்கியுள்ளது. டாடா நிறுவனம் 40,000 கிட்களை வாங்கியுள்ளது. ஆகவே மொத்தம் ஒரு லட்சத்து 95,000 கிட்கள் நம்மிடம் உள்ளன. மேலும் 2571 வென்டிலேட்டர்கள் வாங்கவும் துரித சோதனை கிட் 5,00,000 வாங்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றும் முதலமைச்சர் கூறினார்.

மருத்துவ உபகரணங்களையும் சோதனைத் தொகுப்புகளையும் மாநிலங்கள் தாங்களாக வாங்கக்கூடாது என்று கூறியிருந்தாலும் அவற்றைப் போதுமான அளவில் அனுப்புவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதாலேயே மாநில அரசு இந்த உபகரணங்களை தாமே வாங்க ஆரம்பித்துள்ளது.

தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் பல மாநிலங்களிலும் தற்போது இதுதான் நடந்துவருகிறது. மகாராஷ்டிர மாநிலத்திலும் முகக் கவசம், என் 95 முகக் கவசம், பிபிஇ, வென்டிலேட்டர்கள் ஆகியவற்றை தங்களுக்குப் போதுமான அளவில் தர வேண்டுமென இந்தச் சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி மத்திய அரசிடம் கோரியிருந்தாலும், அம்மாநிலமும் தாமாவே உபகரணங்களை வாங்க ஆரம்பித்துள்ளது.

பிபிசி மராத்தி சேவையிடம் பேசிய அம்மாநில மருத்துவக் கல்வியின் கூடுதல் இயக்குனர், "பிபிஇ ஆடைகளை வாங்க ஐந்து நிறுவனங்களிடமும் என் - 95 முகக் கவசங்களை வாங்க 4 நிறுவனங்களிடமும் ஒப்பந்தம் செய்துள்ளோம். விரைவில் அவை வந்துவிடும் " எனத் தெரிவித்தார்.

மத்திய அரசின் சர்ச்சைக்குரிய ஆணை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே, "மத்திய அரசு புதிதாக இந்த ஆணையை வெளியிட்டுள்ளது. வென்டிலேட்டர்கள், பிபிஇ கிட்கள், என் - 95 முகக் கவசங்கள் ஆகியவற்றை தாங்களே வழங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர்களிடமும் கேட்டிருக்கிறோம்" என்று மட்டும் தெரிவித்தார்.

அசாம் மாநிலமும் நேரடியாக பிபிஇ கவச ஆடைகளை சீனாவில் ஆர்டர் செய்தது. கடந்த புதன்கிழமை சீனாவின் குவாங்சு நகரிலிருந்து அசாமின் குவாஹட்டி விமான நிலையத்தில் வந்து இறங்கின. அந்த பிபிஇ கிட்கள் வந்து இறங்கிய விமானத்தின் முன்பாக நின்று படம் எடுத்து டிவிட்டர் வெளியிட்ட அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "எல்லோரும் இறக்குமதி செய்யுங்கள்" என்று கூறியிருந்தார்.

அசாமில் முதல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டபோது, அங்கு 9 பிபிஇ கவச ஆடைகளே இருந்தன. ஆனால், தற்போது அங்கு ஒன்றரை லட்சம் கவச ஆடைகள் இருக்கின்றன. அசாம்தான் சீனாவிலிருந்து நேரடியாக இப்படி இறக்குமதி செய்த முதல் மாநிலம்.

சீனாவிலிருந்துதான் பெருமளவு உபகரணங்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், அவற்றின் தரம் குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. இதையடுத்து, சான்றளிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களிடமிருந்து மட்டுமே உபகரணங்களை வாங்கும்படி தாங்கள் வலியுறுத்துவதாக இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: