கொரோனா வைரஸ்: "விழுப்புரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்தவர் உயிரிழப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருக்குக் கொரோனா நோய் இருந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

விழுப்புரத்தை ஒட்டியுள்ள பணம்பட்டு பகுதியைச் சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி காரணமாக அவதிப்பட்டுவந்தார். இதனால், அவர் சில நாட்களுக்கு முன்பாக தனியார் மருத்துமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது.

உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அவர் நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைபெற்றுவந்தார். அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கொரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டுதல் படி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் அடக்கத்தின்போது பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பாக விழுப்புரம் மாவட்டத்தில், இந்நோய்த் தொற்றினால் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 63 வயது முதியவர் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனிடையே, கொரோனா நிவாரணப் பொருள்களை வழங்க அனுமதி தேவையில்லை; ஆனால், சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என தி.மு.க. தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார். இந்த நிலையில், தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவே நிவாரண உதவிகளைச் செய்யவேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.

இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு நீதிபதிகள் சுப்பைய்யா, பொங்கியப்பன் அமர்வு முன்பாக புதன்கிழமையன்று விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பாக தமிழக அரசின் சார்பில், தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணனும் தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் வில்சனும் வாதாடினர். ஒரு தன்னார்வலர் உணவோ, நிவாரணப் பொருட்களோ வழங்கினால் அங்கு பெருமளவில் மக்கள் கூடுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அது ஆபத்தாக முடியுமென அரசுத் தரப்பின் சார்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துத்தான் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் எல்லா மக்களுக்கும் அரசால் நிவாரண உதவிகளை வழங்க முடியாது என்றும் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அனுமதி வாங்க வேண்டும் என்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென்றும் தி.மு.க. சார்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு, இந்த வழக்கில் வியாழக்கிழமையன்று தீர்ப்பு வழங்கப்படுமெனக் கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, நிவாரணப் பொருட்களை வழங்க அனுமதி வாங்கத் தேவையில்லை என்றும் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்; நிவாரணம் வழங்கச் செல்லும் வாகனத்தில் தன்னார்வலர்கள் ஓட்டுனர் தவிர்த்து மூன்று பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. தரப்பு வழக்கறிஞர் வில்சன், "அனுமதி வாங்க வேண்டும் என்று கூறினால், தி.மு.கவிற்கு அனுமதி அளிக்க மாட்டார்கள். ஏற்கனவே தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினோம்" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: