You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: அரசு நிவாரணத்தில் பொறிக்கப்படும் டிரம்பின் பெயர் மற்றும் பிற செய்திகள்
கொரோனா வைரஸால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள லட்சக்கணக்கான அமெரிக்கர்களுக்கு அனுப்பப்படவுள்ள காசோலையில், அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பின் பெயர் பொறிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மைய அரசினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தில் அமெரிக்க அதிபர் ஒருவரின் பெயர் பொறிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
இந்த புதிய செயல்பாட்டின் காரணமாக மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற குற்றச்சாட்டுக்கு கருவூல அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இரண்டு ட்ரில்லியன் டாலர்கள் நிவாரண தொகுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மாதம் மட்டும் அமெரிக்காவில் சுமார் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.
கோவிட்-19 நோய்த் தொற்றை கேரளா வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?
கேரளாவில் உள்ள அந்த கிராமத்துக்கு வந்த பேருந்தில் இறங்கிய அந்த இரு இளம்வயதினரை அங்கிருந்த நடுத்தர வயதினர் மூவர் சந்தித்தனர்.
அவர்களில் வயதில் மூத்தவராக இருந்தவர், அந்த இளம் வயது ஆண் மற்றும் பெண்ணிடம், அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கையலம்பும் அறைக்கு செல்லுமாறு சைகையால் சுட்டிக்காட்டினார்.
விரிவாக படிக்க: கொரோனா வைரஸ் தொற்றை கேரளா வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?
கொரோனா 40 நாள் ஊரடங்கின் விளைவுகள் எப்படி இருக்கும்?
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு மே 3ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுமென பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த நீட்டிப்பு எவ்விதமான விளைவுகளை பொருளாதாரத்திலும் சமூகத்திலும் ஏற்படுத்தக்கூடும் என்பது குறித்து பிபிசியிடம் பேசினார் பேராசிரியர் டாக்டர் ஜெ. ஜெயரஞ்சன்.
இந்தியா - மலேசியாவை இணைத்த கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மலேசிய அரசு தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவில் இருந்து ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை இறக்குமதி செய்கிறது மலேசியா.
ஒரு மில்லியன் (பத்து லட்சம்) மாத்திரைகளை அனுப்புமாறு இந்திய அரசிடம் மலேசியா கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விரிவாக படிக்க: மலேசியாவுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் அனுப்பும் இந்தியா - இரு நாடுகளை இணைத்த கொரோனா வைரஸ்
ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்து செயல்படுகிறதா சென்னை மாநகராட்சி?
சென்னை மாநகராட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்து செயல்படக்கூடாது என செவ்வாய்க்கிழமை மாலை முதல் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. என்ன காரணம்?
ஏப்ரல் 12ஆம் தேதியன்று ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் ஆர்.எஸ்.எஸால் நடத்தப்படும் பாரதி சேவா சங்கம் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டிருந்தது.