கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி: நாய், பூனை கறிக்கு தடை விதித்த சீன நகரம்

சீனா

பட மூலாதாரம், Getty Images

ஷென்ஸென் சீனாவில் பூனை மற்றும் நாய் இறைச்சி வாங்கவும் விற்கவும் தடை செய்த முதல் நகரமாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதை வன விலங்குகளின் இறைச்சியை உண்பதுடன் தொடர்புபடுத்தபட்ட பிறகு சீன அதிகாரிகள் வன விலங்குகளின் இறைச்சியை விற்பதற்கு தடை விதித்தனர்.

ஷென்ஸென் நகரம், வன விலங்குகளோடு நாய் மற்றும் பூனை இறைச்சியையும் விற்கக் கூடாது என தடை விதித்துள்ளது. இந்த தடை மே 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

ஒரு வருடத்தில் ஆசியாவில் இறைச்சிக்காக 3 கோடி நாய்கள் கொல்லப்படுகின்றன என விலங்குகள் நல அமைப்புகளில் ஒன்றான ஹ்யூமன் சொசைட்டி இண்டர்நேஷனல் (ஹெச்எஸ்ஐ) கூறியுள்ளது.

சீனாவிலும் நாய் இறைச்சி சாப்பிடுவது பொதுவான வழக்கம் அல்ல. சீனர்கள் பலர் இதை தன் வாழ்நாளில் செய்திருக்க மாட்டார்கள்.

சீனாவில் உள்ள ஓர் இறைச்சி சந்தை. (கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீனாவில் உள்ள ஓர் இறைச்சி சந்தை. (கோப்புப்படம்)

"மற்ற விலங்குகளைக் காட்டிலும் நாய் மற்றும் பூனை செல்லப்பிராணிகளாக மனிதர்களோடு நெருங்கிய உறவை கொண்டுள்ளன."

"இவற்றின் இறைச்சியைத் தடை செய்வது ஒரு வழக்கமான நடவடிக்கையாக வளர்ந்த நாடுகள், ஹாங்காங் மற்றும் தைவானில் பார்க்கப்படுகிறது," என ஷென்ஸென் நகர நிர்வாகம் கூறியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

மக்கள் நாகரிக வளர்ச்சியை இந்த தடை காட்டுவதாகவும் ஷென்ஸென் நிர்வாகம் கூறியுள்ளது.

விலங்குகள் நல அமைப்பு வரவேற்பு

விலங்குகள் நல அமைப்பான ஹெச்எஸ்ஐ இந்த நடவடிக்கையை பாராட்டியுள்ளது.

ஆண்டுக்கு 1 கோடி நாய்களும் 40 லட்சம் பூனைகளும் சீனாவில் கொல்லப்பட்டு இறைச்சி விற்பனை வணிகம் நடக்கிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்ற நடவடிக்கை இது என ஹெச்எஸ்ஐயின் சீன கொள்கை நிபுணர் டாக்டர் பீட்டர் லீ கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு கரடியின் பித்தநீர்

இதே சமயத்தில் சீன அரசு கரடியின் பித்தநீரை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சைக்காக பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஓர் உயிருள்ள கரடியிலிருந்து எடுக்கப்படும் பித்த நீர் காலம்காலமாக சீனாவின் பாரம்பரிய மருந்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதில் உள்ள அர்சோடியோக்ஸிகாலிக் அமிலம் (ursodeoxycholic acid) பித்தப்பையில் இருக்கும் அடைப்பை நீக்கி குடல் நோயை சரி செய்ய பயன்படுத்தப்படுகிறது.

இது கொரோனா வைரஸுக்கு ஏற்ற தீர்வு என்று இதுவரை கூறப்படவில்லை. மேலும் இதை எடுக்கும் முறை விலங்குக்கு மிகவும் வலி தரக்கூடியதாக இருக்கும்.

ஓர் உயிர்க்கொல்லி வைரஸின் தீர்வாக அதுவும் குறிப்பாக அந்த வைரஸ் வன விலங்கு மூலமாக பரவியிருப்பது போல் இருக்கும் சூழலில் கரடியின் பித்த நீர் போன்ற வன விலங்கின் உடலில் இருந்து கிடைக்கும் பொருளை நாம் நம்பியிருக்கக்கூடாது என அனிமல் ஏசியா ஃபவுண்டேஷனின் செய்தித்தொடர்பாளர் ப்ரைன் டாலி ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் நிலவரம்

ஏப்ரல் 3ஆம் தேதி மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 53,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

சீனாவில் மட்டும் 82 ஆயிரம் பேருக்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கபட்டனர். அவர்களில் சுமார் 3,400 பேர் உயிரிழந்துள்ளனர். 76,000க்கும் மேலானோர் குணமடைந்துள்ளனர்.

ஆனால் இப்போதுவரை இந்த வைரஸ் எப்படி உருவானது எங்கிருந்து வந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்று தெரியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: