You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒற்றை சிகரெட் துண்டால் 35 ஆண்டுகளுக்கு பின்னர் கைதான கொலைக் குற்றவாளி மற்றும் பிற செய்திகள்
அமெரிக்காவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிகரெட் துண்டு ஒன்றை வைத்து சந்தேக நபரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
1985ஆம் ஆண்டு ஆண்டு நடந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது டோனியா மெக்கின்லே என்ற பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொல்லப்பட்டார். அப்போது டோனியாவின் மகனுக்கு ஒரு வயதுகூட ஆகவில்லை.
இந்த சம்பவம் நடந்து 35 ஆண்டுகளாகியும் இது தொடர்பான வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், டோனியா கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே கண்டறியப்பட்ட மரபணுக்களை புளோரிடா மாகாண காவல்துறையினர் பொதுவளத்தில் (Open Source) உள்ள மரபுவழி தரவு தளத்துடன் ஒப்பிட்டு பார்த்தனர்.
அப்போது, சம்பவ இடத்தில் கண்டறியப்பட்ட மரபணுவும் தற்போது 57 வயதாகும் டேனியல் வெல்ஸ் என்பவரின் மரபணுவும் ஒத்து காணப்பட்டதை அடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், டேனியல் தூக்கி எறிந்த சிகரெட் துண்டுகளை ஆய்வு செய்த காவல்துறையினர் மீண்டுமொருமுறை அவரது மரபணு ஒத்துப்போவதை உறுதி செய்ததை அடுத்து அவர் மீது கொலை மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை கைது செய்துள்ளனர்.
"என் அம்மா வல்லுறவு செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தாலும், அவருக்கு தண்டனை வழங்கப்படும் வரை எனக்கு நிறைவு ஏற்படாது" என்று 35 வயதாகும் டோனியாவின் மகன் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர் பகுதியில் கொரோனா தொற்று
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நான்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.
கொரோனா வைரஸ்: முடங்குகிறது டெல்லி, ஆந்திரா, தெலங்கானா
மார்ச் 22 தேதி இரவு 9 மணியில் இருந்து மார்ச் 31ம் தேதி இரவு 12 மணிவரை டெல்லியில் 144 தடை உத்தரவு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான சூழலில் டெல்லி மெட்ரோ சேவையை மார்ச் 31ஆம் தெதி வரை முடக்குவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் கூறி உள்ளது.
கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஏன் பரிசோதனைகள் குறைவாக இருக்கின்றன?
`எல்லா நாடுகளுக்கும் நாங்கள் ஒரு சாதாரண தகவலை தெரிவிக்க விரும்புகிறோம் - பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள், பரிசோதியுங்கள்'' என்று உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரெயெசஸ் இந்த வாரத் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
170 நாடுகளில் 13 ஆயிரம் பேருக்கும் மேல் உயிர்ப்பலி வாங்கிய, 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களைத் தாக்கிய கொரோனா வைரஸ் பற்றி அவர் குறிப்பிட்டார்.
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சிப் பதவி பறிப்பு
விருதுநகர் மாவட்டத்தின் அதிமுக செயலாளர் பதவியிலிருந்து பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நீக்கப்பட்டுள்ளார் எனக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சிப்பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கப்பட்டுள்ளதால், அவர் அமைச்சர் பதவியில் தற்போதுவரை தொடருகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: