You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் உயரும் பலி எண்ணிக்கை, 311,988 பேர் பாதிப்பு - Coronavirus World Latest Update
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா தொடர்பாக உலகம் முழுவதிலிருந்தும் தகவல்களைத் திரட்டி உடனுக்குடன் தங்கள் இணையத்தில் வெளியிட்டு வருகிறது.
மதிய நிலவரத்தின்படி உலகம் முழுவதிலும் 307,297 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த எண்ணிக்கை 311,988 என்பதாக இப்போது உயர்ந்துவிட்டது.
அதுபோல 13,049 என்று இருந்த பலி எண்ணிக்கை, இப்போது 13,407 ஆக உயர்ந்துவிட்டது.
இத்தாலியில் மட்டும் பலி எண்ணிக்கை 4,825 ஆக உள்ளது.
இதுவரை சீனாவில் 3,144 பேரும், இரானில் 1,556 பேரும், ஸ்பெயினில் 1,720 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச அளவில் அண்மையில் நடந்த சில தகவல்களை பார்ப்போம்
- கொரோனா வைரஸ் காரணமாக ஸ்பெயினில் கடந்த ஒரு நாளில் மட்டும் 400க்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் இத்தாலிக்கு அடுத்ததாக மிக மோசமாக ஸ்பெயின் பாதிக்கப்பட்டுள்ளது.
- கொரோனாவை எதிர்கொள்ளத் தற்காலிக மருத்துவமனையை ஸ்பெயின் அதன் தலைநகர் மேட்ரிட்டில் ஏற்படுத்துகிறது. இந்த மருத்துவமனையில் 5,500 படுக்கை வசதிகள் இருக்கும்.
- கொரோனாவை எதிர்கொள்ள அமெரிக்கா அளிப்பதாகக் கூறிய உதவிகளை இரான் மறுத்துள்ளது. இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி தனது தொலைக்காட்சி உரையில், "அமெரிக்காவைத் தனது தீய எதிரி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மேலும் அவர், "நீங்கள்தான் இந்த வைரஸை உருவாக்கியவர்கள் என குற்றஞ்சாட்டப்படுகிறது. அது உண்மையா எனத் தெரியாது. ஆனால், இரானுக்கு நீங்கள் உதவ விரும்புவது எங்களுக்கு விநோதமாக இருக்கிறது, சந்தேகத்தையும் எழுப்புகிறது," எனக் கூறி உள்ளார்.
- இரானியர்களின் மரபணு தகவல்களை பல்வேறு விதங்களில் திரட்டி இரானியர்களை குறிவைத்தே இந்த வைரஸ் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
- தென் கொரியாவில் அரசின் கோரிக்கையைப் பொருட்படுத்தாமல், தேவாலயங்கள் வழக்கம் போல இயங்கின.
- வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை நடக்கும் வழிபாடுகளை நிறுத்தி வைக்கும்படியும் அல்லது இணையம் மூலமாக மத சேவைகளைத் தொடரும் படியும் அழைப்பு விடுத்திருந்தது தென் கொரிய அரசு. ஆனால், அதனைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல இயங்கின .
- தேவாலயங்களுக்கு வரும் மக்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையில் நின்று வழிபாடு செய்தனர்.
- தென் கொரியாவில் மட்டும் 8,897 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 98 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
- இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 81ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சகம் தெரிவிக்கின்றது.
- தமிழர்கள் அதிகளவில் வாழும் யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
- சுவிஸர்லாந்திலிருந்து வருகை தந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவருடன் சந்திப்பு நடத்திய ஒருவருக்கே இந்த தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், நாளை மார்ச் 24 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
- மலேசியாவில் கொரோனா தொற்றால் 10 பேர் பலியாகி உள்ளனர். இன்று அதாவது மார்ச் 22 ஆம் தேதி புதிதாக 123 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோணையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
- ஆஸ்திரேலியாவில் வழிபாட்டுத் தலங்கள் முதல் மதுபான விடுதிகள் வரை மூடப்படும் என அந்நாடு அறிவித்துள்ளது. அதே நேரம் பொருளாதாரத்தைக் காக்கச் சலுகைகளை அறிவித்துள்ளது அந்நாடு. 1315 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் பலியாகி உள்ளனர்.
- தனது பெற்றோர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கும்படி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரி உள்ளார். உங்களது நேசத்துக்குரியவர்களுக்காக இதனை நீங்கள் செய்தே ஆக வேண்டும். அவர்களை தொலைப்பேசியில் அழையுங்கள், ஸ்கைப் மூலமாகப் பேசுங்கள். ஆனால், நேரில் பார்ப்பதைத் தவிருங்கள் எனக் கோரி உள்ளார். பிரிட்டனில் மட்டும் கொரோனா தொற்று காரணமாக 233 பேர் பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் மக்கள் ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அதன் புகைப்படங்களை காண
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில், 80 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று ஏற்பட்ட சீனாவில் இதுவரை 3,261 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வரும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,825 ஆகியுள்ளது என்கிறது ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிவரம்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையில், முந்தைய 24 மணி நேரத்தில் உலகில் 32 ஆயிரம் பேருக்கு இந்த நோய் இருப்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் 1344 பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஐரோப்பிய நேரப்படி மார்ச் 20ம் தேதி நள்ளிரவு இந்த அறிக்கை வெளியானது.
இந்த நோய்த் தொற்று சீனாவில் தொடங்கிய நாளில் இருந்து ஒரே நாளில் இவ்வளவு பேர் இறந்ததில்லை என்பதால் இந்தப் புள்ளிவிவரங்கள் அச்சத்தில் உறையவைப்பனவாக இருக்கின்றன.
இந்நிலையில், இத்தாலியை தொடர்ந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், ஸ்பெயினில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,326ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து நேற்று (சனிக்கிழமை) இரவு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சஞ்செஸ், "இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் நாட்களை நாம் எதிர்கொண்டுள்ளோம்" என்று எச்சரித்தார்.
ஸ்பெயினில் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் நாடு முழுவதும் சுமார் 46 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, அத்தியாவசிய வேலைகள், உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்.
மற்ற உலக நாடுகளின் நிலை என்ன?
கொரோனா வைரஸ் பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்ட சீனா, மெல்ல மெல்ல அதன் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதை போன்ற சூழ்நிலை தென்படும் நிலையில், கொரோனா வைரஸின் தாக்கம் மற்ற உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இதையொட்டி, உள்ளூரில் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப, அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு மக்கள் கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமென்று மக்களை உலகத் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பிரிட்டனில் கொரோனா வைரஸின் அதிவேக பரவலை பொது மக்கள் கட்டுப்படுத்தாவிட்டால் நிலைமை மோசமாகி விடும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸுக்கு எதிரான தேசிய அளவிலான கூட்டு தடுப்பு நடவடிக்கையில் மக்கள் பங்கேற்க வேண்டுமென்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக விலகல்தான் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் ஒரே வழி என்று கூறப்பட்டு வரும் நிலையில், அதை மீறி செயல்படும் மக்களை பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் "அபாயகரமானவர்கள்" மற்றும் "பொறுப்பற்றவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸால் இதுவரை பிரான்சில் 12,500 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 562 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஆஸ்திரேலியாவில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்; ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இதே நிலை தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் விரைவில் நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்படலாம் என்று அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸுக்கு எதிராக போராடுவதற்கு இந்தியாவுக்கு உள்ள திறனை பரிசோதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்திருந்த 14 மணி நேர மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 341 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :