You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மரணம் மற்றும் பிற செய்திகள்
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 73 வயதான கிரேஸ் பியூஸ்கோ என்ற மூதாட்டி மற்றும் அவரது ஆறு பிள்ளைகளும் மிகப் பெரிய குடும்ப உறுப்பினர்கள் ஒன்றுக்கூடல் நிகழ்வுக்கு சென்று வந்த பிறகு அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு தெரியவந்துள்ளது. இதையடுத்து உடல் நிலை பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டியும் குடும்ப உறுப்பினர்கள் மூவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த குடும்பத்தினரின் உறவினர்கள் 20 பேர் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு வருகிறது.
உலகிலேயே கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் 25,493 பேருடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது, அவர்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ்: முதல் மரணத்தை பதிவு செய்தது சிங்கப்பூர்
தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனோ வைரஸ் தொற்று, சிங்கப்பூரில் தனது மரணக்கணக்கை துவங்கியுள்ள நிலையில், மலேசியாவில் வைரஸ் தொற்றால் இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர்.
இத்தகவலை மலேசிய சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. மலேசியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,183ஆக அதிகரித்துள்ளது. இன்று, மார்ச் 21ஆம் தேதி மட்டும் புதிதாக 153 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
மதுரைக்கு அருகில் உள்ள கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடந்துவரும் அகழாய்வில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கொந்தகை கிராமத்தில் இந்த எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது.
கீழடியில் ஆறாவது கட்ட அகழாய்வுப் பணிகள் பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்டன. இந்த நிலையில், கொந்தகை பகுதியில் நடந்துவரும் அகழாய்வில் முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவை கிடைத்து வந்தன.
விரிவாக படிக்க:கீழடி ஆறாம் கட்ட அகழாய்வில் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
"கொரோனா வைரஸ் இந்தியாவில் 30 கோடி பேருக்கு பரவக்கூடும்"
மக்கள் தொகை அதிகம் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைவாகவே உள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.
இது உண்மையா? கொரோனா தொற்று பரவாமல் இந்தியாவில் தடுக்கப்படுமா? ஒருவேளை நிலைமை மோசமானால் இந்தியாவின் நிலை என்னவாக ஆகும்? - இப்படிப் பல கேள்விகளை நோய் இயக்குவியல் மையத்தின் இயக்குநர் மருத்துவர் ரமணன் லக்ஷ்மி நாராயணனிடம் கேட்டோம்.
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்திற்கு வந்த வெளிநாட்டு பயணிகள் மூன்று பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்திலிருந்து வந்த இருவர் மற்றும் நியூசிலாந்திலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது என்றும், தற்போதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ள ஆறு நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் டிவிட்டர் தளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
விரிவாக படிக்க:கொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா பாதிப்பு; புதுச்சேரியில் ஊரடங்கு அமல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: