You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: 25 மருத்துவமனைகள், 2200 படுக்கைகள் - முழு மூச்சில் தயாராகும் செளதி அரேபியா
சௌதி அரேபியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை சௌதி அரசு உறுதி செய்துள்ளது.
இரானிலிருந்து பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழைந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.
அந்நாடு முன்பே கொரொனா தம் நாட்டிற்குள் நுழையாமல் இருக்கப் பல முயற்சிகளை எடுத்திருந்தது. ஹஜ் பயண விசாவையும்கூட ரத்து செய்திருந்தது.
இரானிலிருந்து பஹ்ரைன் வழியாக
பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழையும்போது, அந்த நபர் சமீபத்தில் இரானுக்குச் சென்றுவந்ததை மறைத்ததாகச் சௌதியின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
''முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொற்றுநோய் தடுப்பு குழுவை நாங்கள் அனுப்பி அந்த நபரை சோதனை செய்தோம். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வகத்தில் சோதனை செய்தபோது அந்த நபருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. அந்த நபரை தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது',' என சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
சௌதியைச் சேர்ந்த அந்த நபரோடு தொடர்பிலிருந்த மற்றவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம் என சௌதி தெரிவித்துள்ளது.
ஹஜ் பயண விசா
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக செளதி அரேபியா விசா வழங்குவதில் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி அந்நாட்டில் உள்ள புனித தளங்களான மெக்கா மதினாவை வழிப்பட வருபவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் விசா வழங்கப்படமாட்டாது என அந்நாடு அறிவித்துள்ளது. எத்தனை காலம் இந்த தடை தொடரும், எப்போது தடை நீக்கப்படும் என்பதை அந்நாடு இன்னும் தெளிவாக விளக்கவில்லை.
ஜூலையில் ஹஜ் யாத்திரை தொடங்கும் நிலையில் அப்போது வரை இந்த தடை நீடிக்குமா? அல்லது இடையில் விலக்கிக் கொள்ளப்படுமா என்பது குறித்து அந்நாடு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
25 மருத்துவமனைகள், 2200 படுக்கைகள்
முன்னதாக சுமார் 298 பேருக்கு கொரோனா தொற்று இருக்குமா என சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தது சௌதி, இதில் அவர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என்பது தெரியவந்ததாகவும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை சமாளிக்க 25 மருத்துவமனைகளைத் தயார் செய்துள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த 2200 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் சௌதி அறிவித்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், இராக், ஜப்பான்,கொரியா, இரான், இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து சுற்றுலா விசா விண்ணப்பிப்பவர்களுக்குத் தற்காலிக நடவடிக்கையாகச் சுற்றுலா விசா வழங்கப்படாது என சௌதி தெரிவித்துள்ளது.
சீனா மற்றும் இரான் நாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் 14 நாட்களுக்குப் பின்னரே சௌதிக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: