You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: தீர்வு எப்போது? தொடரும் பாதிப்புகள், ஏக்கத்தில் உலகம் - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை
உலகின் எந்த திசையும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பவில்லை. இதுவரை இப்படி ஒரு சூழலை எதிர்கொள்ளாததால், இதனை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான முன் அனுபவம் நம்மிடம் இல்லை என்று கூறி உள்ளது உலக சுகாதார நிறுவனம்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ், "கொரோனா ஒரு தனித்துவம் வாய்ந்த வைரஸ். ஆனால், உரிய நடவடிக்கைகள் மூலம் அதனை வெல்ல முடியும்," என்றும் கூறி உள்ளார்.
உலகெங்கும் 3000க்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ள நிலையில், அந்த வைரஸை வீழ்த்துவோம் என தெரிவித்துள்ளார் டெட்ரோஸ்.
நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாகி வரும் நிலையில், டெட்ரோஸ் கொரோனாவை வீழ்த்துவோம் என நம்பிக்கை அளிக்கும்படி பேசி உள்ளார்.
நாம் செயல்படுவதன் மூலம் மட்டுமே கொரோனாவை வீழ்த்த முடியும் என்றும் கூறி உள்ளார் அவர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் மூன்று பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சரி... கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொடர்பாக சர்வதேச அளவில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.
- சீனாவை தாண்டிய மற்ற நாடுகளில் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் திங்கள்கிழமை ஏற்பட்ட உயிரிழப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை ஒரேநாளில் 34-இல் இருந்து 52-ஆக உயர்ந்துள்ளது.
- சீனாவை தாண்டி உலகின் மற்ற நாடுகளில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 8800 பேரில், 81 சதவீதம் பேர் இரான், தென் கொரியா, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
- உலக அளவில் 70 நாடுகளில் 90,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் 90 சதவீதம் பேர் சீனாவில் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக இந்த வைரஸ் முதலில் பாதிப்பை நிகழ்த்திய ஹுபே மாகாணத்தில் தான் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
- இதேபோல் இரானில் மேலும் 12 பேர் உயிரிழக்க, அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.
- இரானின் அதிஉயர்தலைவரான அயத்துல்லா காமேனிக்கு மூத்த ஆலோசகராக உயர் பதவியில் இருந்த மொஹம்மத் மிர்மொஹமத்தியும் இறந்தவர்களில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்நிலையில் திங்கள்கிழமையன்று அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரதுறை அதிகாரிகள், அமெரிக்காவில் மேலும் நான்கு பேர் இந்த வைரஸால் இறந்துள்ளதாக தெரிவித்ததையடுத்து, அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.
- ஐஸ்லாந்து, போர்த்துக்கல், ஜோர்டான், துனீசியா, அர்மேனியா, லாத்வியா மற்றும் செனிகல் ஆகிய நாடுகளில் திங்கள்கிழமையன்று முதல்முறையாக கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது.
- பிரான்ஸில் நேற்று (திங்கள்கிழமை) ஒரேநாளில் மேலும் 61 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 191-ஆகி உயர்ந்துள்ளது. பிரான்ஸில் மூன்று பேர் இந்த வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர்.
- இதேபோல் பிரிட்டனில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ''வரும் நாட்கள் மற்றும் வாரங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறும்'' என்று சுகாதாரம் தொடர்பான முக்கிய அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
- கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்து காணப்படும் சீனாவில் கைவிடப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான இலங்கை தூதரகத்தின் பதில் கொன்ஷல் ஜெனரல் பிரபாஷினி பொன்னம்பெரும பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: