மலேசிய பிரதமராகப் பதவியேற்ற மொகிதின் யாசின்: மகாதீரை சந்திக்க மறுத்த மாமன்னர்

மலேசியாவின் எட்டாவது பிரதமராக மொகிதின் யாசின் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மலேசிய மாமன்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

73 வயதான மொகிதின் யாசின், தனது பதவிப் பிரமாணத்தை மாமன்னர் முன்னிலையில் வாசித்த பின்னர் இரகசியக் காப்பு ஆவணத்திலும் கையெழுத்திட்டார்.

இந்த பதவியேற்பு நிகழ்வு மலேசிய நேரப்படி, காலை 10.30 மணிக்குத் துவங்கி அடுத்த 15 நிமிடங்களில் முடிவடைந்தது. இந்நிகழ்வில் அம்னோ, மலேசிய இந்திய காங்கிரஸ், மலேசிய சீன சங்கம், பாஸ் உட்பட மொகிதின் யாசினுக்கு ஆதரவு அளித்த பல்வேறு கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதையடுத்து தமது தலைமையிலான அமைச்சரவை குறித்த அறிவிப்பை புதிய பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

துரோகம் இழைத்துவிட்டார் மொகிதின் யாசின்: மகாதீர் குற்றச்சாட்டு

இதற்கிடையே, மலேசியாவின் புதிய பிரதமராக மொகிதின் யாசின் பதவியேற்ற அதே வேளையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத்.

அப்போது மொகிதின் யாசின் தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக அவர் சாடினார்.

பிரதமர் பதவியை அடைவதற்காக மொகிதின் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்ததாகவும், தற்போது அதில் வெற்றி கண்டுள்ளதாகவும் மகாதீர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

புதிய பிரதமர் பொறுப்பேற்றுள்ள நிலையில், இனிமேலும் மலேசிய மாமன்னர் தம்மைச் சந்திக்க விரும்பவில்லை என்றார் மகாதீர். அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறீர்கள்? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாடாளுமன்றத்தின் அவசர அமர்வைக் கூட்டும்படி மாமன்னரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றார்.

"நாடாளுமன்றத்தில் யாருக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று பார்ப்போம். தற்போதைக்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி எதிர்க்கட்சியாக செயல்படும்," என்று மகாதீர் தெரிவித்தார்.

பல்வேறு அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததற்காக வருந்துகிறீர்களா? என்று ஒரு செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, தமக்கு வேறு வழி தெரியவில்லை என்றார் மகாதீர்.

"தோற்றவர்கள் ஆட்சியமைக்கு விந்தை அரங்கேறியுள்ளது"

"பெர்சாத்து கட்சி அம்னோவுடன் கூட்டணி அமைக்க முயன்றது. எனவே வேறு வழி இல்லை. அந்தக் கூட்டணி அமைந்தால் நான் யாருக்கு எதிராகப் போராடினேனோ அவர்களை ஏற்றுக் கொள்வதாக அர்த்தமாகிவிடும். அதற்கு நான் தயாராக இல்லை. ஆனால் மொகிதின் தயாராக இருந்தார்.

"மொகிதினுக்கு பெரும்பான்மை இல்லை. பொதுவாக தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் தான் ஆட்சிமைப்பார்கள். ஆனால் இங்கு விந்தையாக தேர்தலில் தோற்றவர்கள் ஆட்சியமைக்க, வெற்றியாளர்கள் எதிர்க்கட்சியாகி உள்ளனர்.

"பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவு இல்லாத ஒருவர் பிரதமராகப் பதவியேற்பதை மலேசிய மக்கள் பார்க்கப் போகிறார்கள். மொகிதினை பிரதமராக நியமித்ததை அடுத்து மாமன்னர் இனிமேலும் என்னைச் சந்திக்கப் போவதில்லை. எனவே மொகிதினுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பதை மாமன்னரிடம் தெரிவிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்காது. என்னால் அரண்மனையை தொடர்புகொள்ள முடியவில்லை. இது தான் தற்போதைய நிலை," என்றார் மகாதீர்.

மொகிதினின் பதவியேற்பு நிகழ்வில் பக்காத்தான் ஹராப்பான் உறுப்பினர்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இடைக்கால பிரதமராக தமது பொறுப்பு முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

114 எம்பிக்களின் ஆதரவு உள்ளது என்கிறார் மகாதீர்

"எங்களுக்கு (பக்காத்தான் ஹராப்பான்) பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவு உள்ளது. 114 எம்பிக்கள் எங்கள் வசம் உள்ளனர். ஆனால் நாங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறோம்.

"பெர்சாத்து கட்சியின் 36 எம்பிக்களும் தம்மை முழுமையாக ஆதரிப்பதாக மொகிதின் தெரிவித்துள்ளார். ஆனால் நான், எனது மகன் முக்ரிஸ் உட்பட 6 எம்பிக்கள் அவரை ஆதரிக்கவில்லை.

"மொகிதினுக்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை. ஆனால் எங்களுக்கு உள்ளது. பெரும்பான்மை ஆதரவு இல்லாத ஒருவர் பிரதமர் ஆவதை நாம் பார்க்கிறோம்.

"இதற்கு முன்பும் தேர்தலில் வெற்றி பெற்ற ஒருவர் மாநில முதல்வராக முன்னிறுத்தப்பட்ட போது, அவரை அரசர் ஏற்க மறுத்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதே சமயம் ஒருவருக்கு பெரும்பான்மை இருப்பதாக மாமன்னர் நினைத்தால் அவர் பிரதமராக முடியும். எனினும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் அவரால் பதவியில் நீடிக்க முடியாது," என்று செய்தியாளர்கள் கூட்டத்தில் மகாதீர் மேலும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வுக்குள் சில திருப்பங்கள் நிகழ அதிக வாய்ப்புண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: