தஞ்சாவூர் ‘மெர்சல்’: உதவி ஆட்சியர் வாங்கிய வித்தியாச வரதட்சணை - விரிவான தகவல்கள்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை: உதவி ஆட்சியர் வாங்கிய வித்தியாச வரதட்சணை

எனது கிராமத்துக்கு மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று நூதன வரதட்சணை கேட்டு சென்னை மருத்துவரை மணந்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டம் ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த உதவி ஆட்சியர் மா.சிவகுருபிரபாகரன்.

பேராவூரணி அடுத்த ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சிவகுருபிரபாகரன்(32). ஐ.ஐ.டி-யில் எம்.டெக் முடித்த சிவகுருபிரபாகரனுக்கு, ஐஏஎஸ் ஆவது இலக்காக இருந்ததால் பிற துறைகளில் கிடைத்த வேலைவாய்ப்புகளைத் தட்டிக் கழித்து வந்தார். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 2018-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 101-வது இடத்தையும், தமிழக அளவில் 3-வது இடத்தையும் பிடித்த சிவகுருபிரபாகரன், தற்போது திருநெல்வேலி மாவட்ட பயிற்சி உதவி ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.

மேலும், டாக்டர் ஏ.பி.ஜே கிராம வளர்ச்சிக் குழுவை உருவாக்கி அதன் மூலம் மருத்துவ முகாம் நடத்துவது, ஏரியைத் தூர் வாருவது போன்ற நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறார்.

இந்நிலையில், சிவகுருபிரபாகரனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்க்கத் தொடங்கிய தன் பெற்றோரிடம், "100 பவுன் நகை, கார் போன்ற வரதட்சணை தரும் பெண் வேண்டாம். பெண் டாக்டராக இருக்க வேண்டும், நமது கிராமத்துக்கு வரும்போது ஊர் மக்களுக்காக இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு சம்மதம் என்று சொல்லும் பெண் கிடைத்தால் சொல்லுங்கள்" எனக் கூறியுள்ளார்.

அதன்படி, சிவகுருபிரபாகரனின் கோரிக்கையை சென்னை நந்தனம் கல்லூரியில் கணித விரிவுரையாளராக பணியாற்றும் திருமலைசாமியின் மகள் மருத்துவர் கிருஷ்ணபாரதி ஏற்றுக் கொண்டு, திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தார். இதை யடுத்து, சிவகுருபிரபாகரன்- கிருஷ்ணபாரதி திருமணம் அண்மையில் பேராவூரணியில் நடைபெற்றது.

இதுகுறித்து சிவகுருபிரபாகரன் கூறியதாவது: நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது கிராம வளர்ச்சிக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறேன். அதேபோன்று, என் மனைவியையும் சேவையில் ஆர்வம் கொண்டவராக, மருத்துவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். அதன்படி, என்னுடைய விருப்பத்தை ஏற்றுக்கொண்ட கிருஷ்ண பாரதியை மணந்துகொண்டேன் என்றார்.

தினமணி: ஆதிச்சநல்லூரில் அகழ்வைப்பகம் லெமூரியா கண்டம் குறித்து ஆய்வு

லெமூரியா கண்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார், தமிழக தமிழ் வளா்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் மா.பா. பாண்டியராஜன்.

நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் பெயா்ப் பலகைகளை 50 சதவீதம் தமிழில் வைக்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் ரூ. 50 அபராதம் விதிக்கவும் சட்டத்தில் உள்ளது. தற்போது இந்த அபராதத்தொகையை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ளஅனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழில் பெயா்ப் பலகை வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூா் அகழாய்வுப் பணிகள் குறித்த முழு அறிக்கையை மத்திய அரசு இந்திய தொல்லியல் ஆய்வக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது. இதை ஆய்வுசெய்து அவா்கள் அறிக்கை வெளியிடுவா். ஆதிச்சநல்லூரில் விரைவில் அகழ் வைப்பகம் அமைக்க அடிக்கல் நாட்டப்படும். அப்போது இது தொடா்பான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு இப்பணிகளை மிக விரைவில் மேற்கொள்ள தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.

லெமூரியா கண்டம் குறித்து அகழாய்வு உலகம் முழுவதும் நடத்தப்பட வேண்டும். இதை மத்திய அரசு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், கடல்சாா் தொல்லியல் துறையை உயிர்ப்பிக்க தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பான அறிவிப்பு இந்தப் பேரவைக் கூட்டத்தொடரில் வெளிவர வாய்ப்புள்ளது என்றார் அவா்.

முன்னதாக, அமைச்சரை தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம், ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீ. நாத், மாவட்ட ஆவின் தலைவா் எஸ்.ஏ. அசோகன் ஆகியோர் வரவேற்றனா்.

தினத்தந்தி: திருட வந்த இடத்தில் போதையில் தூங்கிய கொள்ளையன்

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் திருட வந்த இடத்தில் போதையில் படுத்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், ராஜூவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். கடந்த வாரம் இவரது வீட்டின் கீழ் பகுதியில் உள்ள இவரது மளிகை கடை உள்பட 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரத்தை மர்மநபர் திருடிச்சென்று விட்டார். இதுபற்றி மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்புறம் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கடையின் படிக்கட்டில் வாலிபர் ஒருவர் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த மதுரவாயல் போலீசார், அந்த வாலிபரை எழுப்பி விசாரித்தனர். போதையில் இருந்த அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அவரது மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்களும் அவரிடம் இல்லை. இதனால் அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச்சேர்ந்த சதீஷ் என்ற கிளி சதீஷ்(வயது 23) என்பதும், கடந்த வாரம் முத்துக்குமாரின் மளிகை கடை உள்பட 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரத்தை திருடியதும், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் அந்த கடையில் கொள்ளையடிக்க வந்தபோது, போதை தலைக்கேறியதால் திருட முடியாமல் அந்த கடையின் வாசலிலேயே படுத்து தூங்கியதும் தெரிந்தது.

சதீசை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: ஒருவர் பலி - கொரோனா காரணமா?

கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் இருந்த 36 வயது நபர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். மலேசியாவிலிருந்து கொச்சி விமான நிலையம் வந்து சேர்ந்த அந்த நபருக்கு மூச்சு திணறல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன. எனவே அவரை விமான நிலையத்திலிருந்து நேரடியாக எர்ணாகுளத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதற்கு நிமோனியா தொற்று தான் காரணம் என்று முதற்கட்ட பரிசோதனையில் கூறப்படுகிறது.

இது உயிரிழப்புக்கு கோவிட் 19 தான் காரணம் என்று எந்த பரிசோதனை முடிவுகளும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் மலேசியாவிலேயே இந்த நபர் ஒரு வாரக் காலமாக கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறுகையில், ''அவர் விமான நிலையம் வந்தபோதே மிகவும் சோர்ந்து காணப்பட்டார். எனவே கோவிட் 19 வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்ய அவரின் இரத்த மாதிரியை புனேவிற்கு அனுப்பியுள்ளோம். புனேவின் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம். உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வது குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி முடிவு செய்வார்'' என்றார் சுகாதார துறை அமைச்சர்.

உயிரிழந்த நபருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகளில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தால், அவருடன் விமானத்தில் பயணித்த மற்ற 42 பயணிகளையும் கண்டுபிடித்து அவர்களுக்கும் முழு பரிசோதனை செய்யப்படும் என மருத்துவர் அமர் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: