You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி மத வன்முறையில் காவல்துறையின் பங்கை யார் விசாரிப்பது?
- எழுதியவர், பிரசாந்த் சாஹல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பிப்ரவரி 29ம் தேதி நிலவரப்படி டெல்லி வன்முறையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42ஆக உள்ளது. மேலும் காயம் அடைந்த நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
''கடந்த ஏழு தசாப்தமாக இது போன்ற இந்து-முஸ்லிம் பிரச்சனையை டெல்லி கண்டதில்லை'' என டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கையை பார்த்துவிட்டு பலர் கூறுகின்றனர்.
1984ல் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பிறகு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் சுமார் மூன்றாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த பிப்ரவரி 23ம் தேதி வடகிழக்கு டெல்லியில் கலவரம் ஆரம்பித்தது. அன்று முதல் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகளில் இந்துக்களும் முஸ்லிம்களும் தடிகள், கற்கள் மற்றும் ஆயுதங்களுடன் காணப்படுகின்றனர். பெட்ரோல் குண்டுகள் வீசப்படுவதையும் காணமுடிகிறது.
உத்தரப்பிரதேசத்தை எல்லையாகக் கொண்ட வட கிழக்கு டெல்லியில் நடந்த இந்து-முஸ்லிம் கலவரத்தில் பல பயங்கரமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில் டெல்லி காவல்துறையின் உளவுப் பிரிவு குறித்து பல கேள்விகள் எழுகின்றன.
மேலும் டெல்லி காவல் துறையின் உயர் அதிகாரிகள், வன்முறையின்போது தாங்கள் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதற்காக நீதிமன்றத்தில் மன்றாட வேண்டிய சூழல் நிலவியது.
''வன்முறையை தூண்டும் உரையின் காணொளிகள் ஆதாரமாக உள்ளபோது, முதல் தகவல் அறிக்கையை ஏன் பதிவு செய்யவில்லை?'' என டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த எஸ்.முரளிதர் டெல்லியின் சிறப்பு காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும் நகரத்தில் பதற்றம் நிலவும்போது, நடவடிக்கை மேற்கொள்ள சரியான நேரம் எப்போது வரும் என காவல்துறை ஏன் காத்திருந்தது என்ற கேள்வியும் நீதிமன்றத்தில் எழுந்தது.
இருப்பினும் டெல்லி காவல் ஆணையர் அமுல்யா பட்நாயக், "வன்முறையை சமாளிக்க போதுமான காவல்துறை அதிகாரி பணியில் அமர்த்தப்பட்திருந்தனர், வன்முறை தொடர்பான வழக்குகளில் இதுவரை 100க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன," என விளக்கம் அளித்தார்.
இது தவிர, டெல்லியின் வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள இரண்டு சிறப்பு விசாரணை குழுக்களை டெல்லி காவல் துறை நியமித்துள்ளது. இந்த இரண்டு விசாரணை குழுக்களையும் துணை ஆணையர்கள் ஜாய் டிர்கே, ராஜேஷ் தேவ் ஆகியோர் தலைமையில் செயல்படும். ராஜேஷ் தேவ் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தால் கண்டிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டெல்லி சட்டமன்ற தேர்தலின்போது ஊடகத்தில் தேவையற்ற சில தகவல்களை கூறியதால், இனி தேர்தல் பணிகளில் ராஜேஷ் தேவ் ஈடுபடக்கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
ஆனால் தற்போது டெல்லி வன்முறை தொடர்பில் இந்த சிறப்பு குழுவின் அதிகாரிகள் தங்கள் பணிகளை சரியாக மேற்கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
காவல் துறையினர் நடவடிக்கை குறித்து கேள்வி ?
டெல்லியின் பஜன்புரா சவுக், விஜய் பார்க் மற்றும் முஸ்தஃபாபாத் பகுதிகளில் நடந்த கலவரங்களின் காணொளிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்படுகின்றன.
அந்த காணொளிகளில் கும்பல்கள் பல தடிகள் மற்றும் கற்களை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் காட்சிகளில் காவல்துறையினர் அதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து டெல்லியின் முன்னாள் காவல் ஆணையர் நீரஜ் குமார் கூறுகையில் டெல்லி காவல் துறையினர் என்ன செய்வது என புரியாமல் வன்முறையின்போது அமைதி காத்தனர். இந்த வன்முறைக்கு டெல்லி காவல்துறையினரும் முழு பொறுப்பு ஏற்கவேண்டும் என்றும் நீரஜ் குமார் கூறுகிறார்.
அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ் ''டெல்லி கலவரத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், இந்த வன்முறையை தடுக்க காவல்துறையினர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்ற கேள்விகள் எழுகின்றன,'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
விசாரணை மேற்கொள்ளும் விதம்
இவ்வாறு டெல்லி வன்முறையில் காவல் துறையின் நடவடிக்கை குறித்து தொடர்ந்து எழுபப்படும் கேள்விகளுக்கு காவல் அதிகாரிகளிடம் சரியான பதில் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள மத்திய ரிசர்வ் காவல் படையின் முன்னாள் டி.ஜி.பி பிரகாஷ் சிங்கிடம் பிபிசி பேசியது.
டெல்லி காவல்துறையின் அணுகுமுறை குறித்து கேள்வி எழுப்பியபோது ''இழப்புகள் அதிகமாக இருந்தால் கேள்விகளும் அதிகம் எழுப்பப்படும். எனவே அதற்கேற்ப விசாரணை நடத்தப்படவேண்டியது மிகவும் அவசியம். இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க எந்த விதிகளும் இல்லை. அரசாங்கத்தின் விருப்பப்படி பெரிய அளவில் இந்த விசாரணையை நடத்தலாம் என்றும் பிரகாஷ் சிங் கூறுகிறார்.
மேலும் விசாரணையின் நம்பகத்தன்மைக்காக விருப்பம் இருந்தால், ஓய்வு பெற்ற அரசாங்க அதிகாரி ஒருவரை குழுவில் நியமித்து விசாரணை மேற்கொள்ளலாம்.
"டெல்லி வன்முறை சம்பவங்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமித்திருப்பது டெல்லி காவல் ஆணையரின் தனிப்பட்ட முடிவா அல்லது உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனையுடன் இந்த சிறப்பு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. உள்துறை அமைச்சகம் விரும்பினால், உயர் மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிடலாம், வெளியில் இருந்து ஓர் அதிகாரியை நியமித்தும் விசாரணை நடத்தலாம். "
இவ்வாறான சூழலில் டெல்லி காவல் துறை மட்டுமல்லாது, அரசு சாரா நிறுவனமும் தனியாக விசாரணை மேற்கொள்ளலாம். ஜனநாயக அமைப்பில் இதற்கு தடை இல்லை. பல முறை சில சமூக அமைப்புகள் அரசாங்கத்திற்கு இணையாக தங்களின் சொந்த பாணியில் விசாரணை நடத்தி, அதன் முடிவுகளையும் பொதுவில் வெளியிட்டுள்ளனர்.
சிறப்பு விசாரணை குழு குறித்து உத்தர பிரதேசத்தின் முன்னாள் காவல்துறை இயக்குநர் ப்ரஜ் லால் கூறுகையில், "டெல்லி காவல்துறை ஒழுங்கு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றே கூறவேன். இல்லையெனில் கலவரத்தின் தாக்கம் இவ்வளவு பரவலாக இருந்திருக்காது. தீ விபத்து ஏற்படும்போது, மக்கள் வீடுகளுக்குள் கும்பல்கள் நுழைந்து தாக்குகிறது என்றால், காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்த அவர்களுக்கு முழு உரிமை உண்டு," என்று கூறுகிறார்.
மேலும் சிவப்பு சட்டை அணிந்த ஒருவர் துப்பாக்கி ஏந்திய காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகியுள்ளது, இந்நிலையில் அந்த நபருக்கு தகுந்த தண்டனை விரைவில் வழங்கப்பட்டால் வன்முறை சம்பவங்களில் ஈடுப்படுவது தண்டனைக்குரிய செயல் என்பதை பலர் உணர்வார்கள்.
அரசு விசாரணை அல்லது நீதித்துறை விசாரணையைவிட, சிறப்பு விசாரணை குழு ஒன்றை நியமித்து விசாரணை மேற்கொள்வதே சிறந்த வழி என பிரஜ் லால் நம்புகிறார். எனவே விசாரணை குழு அளிக்கும் தகவலை வைத்து காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம். நிதிமன்றம் ஆதாரங்களை வைத்தே தீர்ப்பு அளிக்கும்.
காவல் துறையிடம் விசாரணை நடத்தியே கலவரத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு தண்டனை வழங்க முடியும் என்கிறார் ப்ரஜ் லால்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: