டெல்லி கலவரத்தை நேரில் பார்த்தவர் - 'போலீசார்தான் போராடியவர்களை தூண்டி விட்டனர்' #Ground_Report

    • எழுதியவர், ஃபைசல் முகமது அலி
    • பதவி, பிபிசி இந்தி

கடந்த ஞாயிறு மாலை வடகிழக்கு டெல்லியில் தொடங்கிய மதக் கலவரத்தில் உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை தற்போதுவரை 42 ஆகியுள்ளது என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை.

அவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் இந்திய உளவுத்துறை ஊழியர் ஆகியோரும் அடக்கம்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான விஜய் பார்க் எனும் இடத்துக்கு பிபிசி சென்றது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் மனோஜ் ஷர்மா மற்றும் ஜமாலுதீன் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென்று டெல்லியில் உள்ள விஜய் பார்க் பகுதிக்கு வரும் பிரதான சாலையில் வந்த போராட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர் என்றும் அருகில் இருந்த கடையை தாக்க முற்பட்டனர் என்றும் கூறுகின்றனர்.

ஷர்மா மற்றும் சைஃபிக்கு அங்கிருந்து ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் சிறிது நேரம் கழித்து அருகில் வசிப்பவர்களை ஒன்று திரட்டி வன்முறையில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டினர்.

அதற்குள் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர்.

அங்கே வன்முறை நடந்ததற்கு ஆதாரமாக அந்த சாலையில் உடைந்த ஜன்னல்கள், எரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் போன்றவை தென்பட்டன.

பிபிசி அந்த பகுதிக்கு சென்றபோது துப்புரவு பணியாளர்கள் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பவம் நடந்த பகுதியை சேர்ந்த அப்துல் ஹமித், போலீஸார்தான் கற்களை வீசிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தூண்டிவிட்டு அவர்கள் மீது தடியடி நடத்தியதாக கூறுகிறார்.

மேலும், அந்த பகுதியை சேர்ந்த மக்கள், வன்முறையின்போது துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டது என்றும், அதில் பிகாரை சேர்ந்த முபாரக் என்பவர் உயிரிழந்ததாகவும் கூறுகின்றனர்.

கலவரத்தில் உடைக்கப்பட்ட சைஃபியின் வீடு

முதல் நாள் கலவரத்தில் ஈடுபட்டவர்களால் அந்த பகுதியின் மையப்பகுதியில் நுழைய முடியவில்லை. ஆனால் அடுத்த நாள் அவர்கள் நுழைவதற்கு முற்பட்டனர் என ஜமாலுதீன் சைஃபி கூறுகிறார்.

எனவே, இரண்டாவது நாள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தயார் நிலையில் இருந்தனர். பிரதான சாலையை அடைத்துவிட்டனர். மேலும் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாலையில் உட்கார்ந்திருந்தனர் என அவர் கூறினார்.

இந்த கலவரத்தில் ஜமாலுதீன் சைஃபியின் வீடு உடைக்கப்பட்டது. மோஜ்பூர் பகுதியில் உள்ள விஜய் பார்க் டெல்லி வன்முறையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்று.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதிக்கு அருகில் உள்ள நான்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன.

விஜய் பார்க் பகுதியில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் வீடுகள் அருகருகே இருப்பதைக் காணலாம். இந்தியாவின் பிற நகரங்களை போன்றே இங்கும் குடியிருப்புகளுக்கு மத்தியில் அருகருகே கோயிலும், மசூதியும் அமைந்துள்ளன. எனவே இங்கே கலவரங்கள் ஏற்பட்டால் அதன் விளைவு மிகுதியாக இருக்கும்.

இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து 20 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்கள். அவர்கள் வீடுவீடாக சென்று மக்களை எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம் என்றும் கூறி வருவதாக விஜய் பார்க் பகுதியிலுள்ள இந்து கோயிலின் அறங்காவலரும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியுமான பவன் குமார் ஷர்மா கூறுகிறார்.

திங்களன்று மீண்டும் இந்த பகுதியில் வன்முறையாளர்கள் நுழைய முற்பட்ட பிறகு, இங்கு பல்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட அமைதி பேரணி நடந்தது.

இயல்பு நிலைக்கு திரும்பிய பகுதி

அமைதி குழுவின் உறுப்பினரான ஜுல்ஃபிகார் அஹமத் கூறுகையில், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு முழுவதும் வெளியில் தெருவில் அமர்ந்திருந்தனர். இந்துக்கள் அதிகம் உள்ள பகுதியில் இந்துக்களும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இஸ்லாமியர்களும் பாதுகாப்புக்காக அமர்ந்திருந்தனர் என்றார்.

இந்த வன்முறைக்கு பிறகு சிறிது நாட்கள் கழித்து விஜய் பார்க்கில் இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளதை பார்க்க முடிகிறது.

அந்த பகுதியில் காய்கறி விற்கும் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் இரண்டு நாட்களுக்கு பிறகு அங்கே வந்து காய்கறி விற்கிறார். தான் வசிக்கும் பகுதியிலும் கலவரம் நடந்ததாக அவர் கூறுகிறார்.

மேலும், இப்பகுதியில் இருக்கும் பிரியாணி கடைகள் வழக்கம்போல இயங்கி வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: