You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி வன்முறை: அசோக் நகர் மசூதி மாடத்தில் காவிக்கொடி ஏற்றியது யார்? - நேரடி ஆய்வு
- எழுதியவர், ஃபைஸல் முகமது அலி
- பதவி, டெல்லி அசோக் நகரில் இருந்து..
டெல்லி அசோக் நகரில் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் காணப்படும் மசூதிக்கு முன்னால் டஜன் கணக்கான மக்கள் கூடியுள்ளனர். இந்த மசூதியின் முன் பகுதி எரிந்து போயிருக்கிறது.
புதன்கிழமை காலை, அசோக் நகரின் தெரு எண் 5 க்கு அருகிலுள்ள பெரிய மசூதிக்கு வெளியே இளைஞர்களுடன் பிபிசி பேச முயன்றபோது, அவர்களது பதிலில் சீற்றம் தெளிவாகத் தெரிந்தது
அவர்களுடனே நாங்களும் மசூதிக்குள் சென்றோம். தரையின் உள்ளே, பாதி எரிந்த நிலையில் தரைவிரிப்புகள் காணப்பட்டன. தொப்பிகள் அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன.
இமாம்கள் நிற்கும் இடம் முற்றிலும் கருகிவிட்டது.
இதே மசூதியில் தான் செவ்வாய்க்கிழமையன்று கூட்டமாக வந்த சிலர் தாக்குதல் நடத்திவிட்டு, இங்குள்ள மாடத்தின் மீது மூவர்ணக் கொடியையும், காவிக் கொடியையும் ஏற்றியதாக கூறப்பட்டது.
அந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின. அதன்பிறகு வெளியிடப்பட்ட டெல்லி காவல்துறையின் அறிக்கையில், அசோக் நகரில் இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதன் உண்மைத் தன்மையை அறிவதற்காக பிபிசி கள ஆய்வு மேற்கொண்டது.
நாங்கள் இங்கு வந்தபோது, மசூதியின் மாடத்தில் மூவர்ணக் கொடியும் காவிநிறக் கொடியும் இருப்பதைக் கண்டோம்.
செவ்வாய்க்கிழமையன்று இப்பகுதிக்குள் நுழைந்த கும்பல் இதுபோன்ற வெறிச்செயல்களைச் செய்ததாக மசூதிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மக்கள் தெரிவித்தனர்.
'வெளியில் இருந்து வந்த கும்பல்'
இரவு நேரத்தில் மசூதிக்கு வந்த காவல்துறையினர் இமாமை அழைத்துச் சென்றதாக, மசூதிக்குள் இருந்த ஆபித் சித்திகி என்பவர் தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தை உறுதிப்படுத்த முடியவில்லை. மசூதியின் இமாமுடன் எங்களால் பேச முடியவில்லை.
நாங்கள் இங்கு வந்தபோது, மசூதிக்கு அருகிலேயே ஒரு போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது, அது சிறிது நேரத்தில் அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டது.
மசூதிக்கு ஏற்பட்ட சேதத்தால் கவலையடைந்துள்ள ரியாஸ் சித்திகி, "இப்படிச் செய்வதால் யாருக்கு என்ன கிடைக்கப் போகிறது?" என்று கேள்வி எழுப்புகிறார்.
இந்த பகுதியில் வசிக்கும் இந்துக்களிடமும் பேசினோம். இந்த மசூதி பல ஆண்டுகளாக இங்கு உள்ளது என்று இந்த மக்கள் கூறினர். இந்த மசூதியை சேதப்படுத்தியவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
வெளியில் இருந்து வந்தவர்களை தாங்கள் தடுக்க முயன்றிருந்தால், தங்களையும் அவர்கள் கொன்றிருக்கலாம் என்று அந்தப் பகுதியில் வசிக்கும் இந்துக்கள் அச்சத்தை வெளிப்படுத்தினார்கள்.
பிபிசியின் கொள்கைகளின்படி, இந்த சம்பவத்தின் தீவிரத்தன்மை மற்றும் சூழ்நிலையின் உணர்வு ரீதியிலான நிலையைக் கருத்தில் கொண்டு, சம்பவ இடத்தில் இருந்த சிலருடைய கருத்துக்களையும், அங்குள்ள நிலவரத்தையும் நாங்கள் வெளியிடவில்லை. ஏனெனில் அவை உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியதாக இருக்கலாம்.
பிற செய்திகள்:
- இரும்புக் கம்பிகளுடன் சென்ற இளைஞர்களும், ஜெய் ஸ்ரீராம் கோஷமும்: பிபிசி செய்தியாளரின் அனுபவம்
- அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிப்பட்டது இப்படிதான்: நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
- டெல்லி வன்முறை: ஏன் துரிதமாக செயல்படவில்லை? - காவல்துறையிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி
- வன்முறையால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு டெல்லி: பலி எண்ணிக்கை 20 ஆனது - விரிவான தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: