You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Coronavirus News: அமெரிக்காவில் மரண கணக்கை தொடங்கியது கொரோனா - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை
அமெரிக்காவில் மரண கணக்கை தொடங்கி உள்ளது கொரோனா வைரஸ். வாஷிங்டனை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இறந்துள்ளார். கொரோனாவால் மேலும் பலர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எந்த விதமான சூழலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறி உள்ளார்.
இரான் செல்ல பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள அமெரிக்கா, கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி நாட்டு மக்களை வலியுறுத்தி உள்ளது.
சரி, கொரோனா வைரஸ் தொடர்பாகச் சர்வதேச அளவில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.
- கொரோனா வைரஸினால் இதுவரை 2,900 பேர் பலியாகி உள்ளனர். 85,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சீனாவுக்கு வெளியே தென் கொரியாவில்தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியா கொரோனாவை எதிர்க்கொள்ள ராணுவத்தை முடுக்கிவிட்டுள்ளது.
- ஐரோப்பாவில் இத்தாலியில்தான் மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 650 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. 17 பேர் அங்கு மரணம் அடைந்துள்ளனர். அங்கு நடப்பதாக இருந்த ஒரு கால்பந்து போட்டியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
- இரானில் 593 பேருக்கு கொரோனா இருப்பதை அரசு உறுதி செய்துள்ளது. அரசு கணக்கின்படி 43 பேர் அங்கு கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ஆனால், பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத் துறை அதிகாரி, இதுவரை 210 பேர் பலியாகி உள்ளதாக பிபிசியிடம் கூறினார். ஆனால், இதனை மறுக்கும் இரான் சுகாதார அமைச்சகம், தாங்கள் வெளிப்படையாக இருப்பதாகவும், பிபிசி பொய் தகவல்களைப் பரப்புவதாகவும் கூறி உள்ளது.
- கொரோனா காரணமாக சீனா உற்பத்தி துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது என்னவிதமான பாதிப்பு சீன உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டதோ, அதைவிட மோசமான பாதிப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் உற்பத்தி துறையில் சீனா மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- கொரோனோ சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தையும் செலுத்தி இருக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக சீனாவில் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாசு அளவானது வியத்தகு அளவில் குறைந்துள்ளது. நாசா வெளியிட்டுள்ள படத்தில் சீனாவில் இந்தாண்டு நைட்ரஜன் டை ஆக்ஸைட் அளவு பெரியளவில் குறைந்துள்ளது தெரிகிறது.
- 5000 பேருக்கு மேல் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துள்ளது பிரான்ஸ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: