செளதி அரேபியா: மெக்கா மதினா செல்ல திட்டமிடுகிறீர்களா? - இந்தக் கட்டுரையைப் படித்துவிடுங்கள் மற்றும் பிற செய்திகள்

'மெக்கா மதினா செல்ல திட்டமிடுகிறீர்களா?'

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக செளதி அரேபியா விசா வழங்குவதில் சில வரையறைகளை வகுத்துள்ளது. அதன்படி அந்நாட்டில் உள்ள புனித தளங்களான மெக்கா மதினாவை வழிப்பட வருபவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் விசா வழங்கப்படமாட்டாது என அந்நாடு அறிவித்துள்ளது. எத்தனை காலம் இந்த தடை தொடரும், எப்போது தடை நீக்கப்படும் என்பதை அந்நாடு இன்னும் தெளிவாக விளக்கவில்லை. ஜூலையில் ஹஜ் யாத்திரை தொடங்கும் நிலையில் அப்போது வரை இந்த தடை நீடிக்குமா? அல்லது இடையில் விலக்கிக் கொள்ளப்படுமா என்பது குறித்து அந்நாடு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கன்னையா குமார் மீதான தேச துரோக வழக்கு

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கன்னையா குமார், உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஒன்பது பேர் மீதான தேச துரோக வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து மேல் நடவடிக்கை எடுக்க டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு டெல்லி மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

'போலீசார்தான் போராடியவர்களை தூண்டி விட்டனர்'

கடந்த ஞாயிறு மாலை வடகிழக்கு டெல்லியில் தொடங்கிய மதக் கலவரத்தில் உயிரிழந்துள்ளவர்கள் எண்ணிக்கை தற்போதுவரை 42 ஆகியுள்ளது என்கிறது ஏ.என்.ஐ செய்தி முகமை. அவர்களில் ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் இந்திய உளவுத்துறை ஊழியர் ஆகியோரும் அடக்கம். கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான விஜய் பார்க் எனும் இடத்துக்கு பிபிசி சென்றது.

அன்வார், மொகிதின் இடையே நேரடி போட்டி

மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமர் வேட்பாளரை முன்மொழிய வேண்டும் என மலேசிய மாமன்னர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் அறிவிப்பு

நடப்பு 2019-2020ஆம் நிதியாண்டுக்கான மூன்றாவது காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 4.7% வளர்ச்சி கண்டுள்ளது என இந்திய அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டின் வளர்ச்சி விகிதமான 4.7 சதவிகிதம், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டின் வளர்ச்சி விகிதம் என்று முன்னர் அறிவிக்கப்பட்ட 4.5 சதவிகிதத்தை விடவும் அதிகம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :