மலேசியா: மகாதீரின் ராஜினாமாவை ஏற்றார் மாமன்னர் - அடுத்த பிரதமர் யார்?

மகாதீர்

பட மூலாதாரம், MANAN VATSYAYANA/getty images

    • எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து

மலேசியப் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ள நிலையில், அவரது ராஜிநாமாவை மலேசிய மாமன்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து நாட்டின் இடைக்கால பிரதமராக நீடிக்கும்படி அவர் மகாதீரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மாமன்னர் அடுத்து ஆட்சியமைக்குமாறு யாரை அழைக்கப் போகிறார்? எனும் கேள்வி எழுந்துள்ளது.

மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ளன. ஆட்சியமைக்க 112 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 102 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால் எதிர்க்கட்சிகளைக் கொண்ட தேசிய முன்னணி (பாரிசான் நேஷனல்) கூட்டணியைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் 129 எம்பிக்கள் இருப்பதாகவும், இது குறித்து மாமன்னரைச் சந்தித்து விவரிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகாதீர்

பட மூலாதாரம், Getty Images

எனினும் தேசிய முன்னணியில் இடம்பெறாத எதிர்க்கட்சிகளையும் சேர்த்தால் தான் இந்த எண்ணிக்கை வருகிறது. எனவே தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட கூட்டணிகளின் அடிப்படையில் பார்க்கும் போது, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு தான் அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களின் ஆதரவு உள்ளது.

எனவே அந்த அடிப்படையில் மாமன்னர், அடுத்து ஆட்சி அமைக்குமாறு அன்வார் இப்ராஹிமுக்கு அழைப்பு விடுக்கவே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மலேசிய பிரதமர் மகாதீர் மொஹம்மத், பதவிவிலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். இதன் மூலம் மலேசிய அரசியல் திடீர் பரபரப்படைந்துள்ளது.

News image

அவர் தமது ராஜிநாமா கடிதத்தை மலேசிய மாமன்னருக்கு அனுப்பி உள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று மதியம் தெரிவித்தது. மலேசிய நேரப்படி மதியம் 1 மணியளவில் அளிக்கப்பட்ட ராஜிநாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்ட மாமன்னர், அதுகுறித்து என்ன முடிவெடுத்துள்ளார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நாட்டின் அடுத்த பிரதமர் எனக் கருதப்படும் அன்வார் இப்ராகிம் தரப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகாதீர் அதிருப்தியில் இருப்பதாக அண்மையில் தகவல் பரவியது.

இதனால் அன்வாரைப் புறக்கணித்து, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மகாதீர் புதிய ஆட்சி அமைப்பார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அன்வார்

பட மூலாதாரம், Hindustan Times/getty Images

அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிகேஆர் கட்சியின் துணைத் தலைவரும் மத்திய அமைச்சருமான அஸ்மின் அலி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மகாதீருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து மகாதீருக்கு நாடாளுமன்றத்தில் 132 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டது.

எனவே அன்வாரைப் புறக்கணித்து புதிய ஆட்சி அமைக்க பிரதமர் மகாதீர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஆருடங்கள் நிலவின.

இந்நிலையில், நேற்று இரவு வரை மவுனம் காத்த பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், தன் வீட்டில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூட்டாளிகளே தமக்கு துரோகம் இழைத்துவிட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும் புதிய ஆட்சி உடனடியாக அமையக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

மகாதீரை சந்தித்துப் பேசிய அன்வார்

மகாதீரை சந்தித்துப் பேசிய அன்வார்

பட மூலாதாரம், MOHD RASFAN/getty Images

இந்நிலையில் திடீர்த் திருப்பமாக திங்கள்கிழமை காலை அன்வார் இப்ராகிம், தமது மனைவியும் துணைப் பிரதமருமான வான் அஸிஸா, மற்றும் நிதியமைச்சர் குவான் எங், பாதுகாப்பு அமைச்சர் மாட் சாபு ஆகியோருடன் சென்று பிரதமர் மகாதீரை சந்தித்துப் பேசினார்.

மகாதீரின் கோலாலம்பூர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், பிரதமருடனான சந்திப்பு திருப்தி அளித்ததாகக் குறிப்பிட்டார். ஆனால் பேச்சுவார்த்தை விவரங்களை அவர் விவரிக்கவில்லை.

இந்தச் சந்திப்பு உணர்ச்சிகரமாக இருந்ததாக நிதியமைச்சர் குவாங் எங் கூறினார்.

வேறு எந்த கூடுதல் விவரமும் அளிக்க இயலாது என்று தெரிவித்த அவர், அடுத்து மாமன்னரை சந்திக்க இருப்பதை மட்டும் உறுதி செய்தார்.

அடுத்து என்ன நடக்கும்?

மலேசியா

பட மூலாதாரம், Rawf8/getty Images

பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் விலகியுள்ளதை அடுத்த, மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மகாதீர் விலகியதையடுத்து, அன்வார் இப்ராகிம் தலைமையில் ஆட்சியமைக்க வழியுண்டா? என்று அவர் பிகேஆர் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

மகாதீர் சார்ந்துள்ள பெர்சாத்து கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 26 எம்பிக்கள் உள்ளனர். பிகேஆர் கட்சியில் இருந்து 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஆதரவை இழந்துவிட்டதால், இயல்பாகவே அன்வார் தலைமையிலான நடப்பு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.

எனினும் வேறு ஏதேனும் திருப்பங்கள் நிகழுமா? என்பது தெரியவில்லை. மலேசிய மக்கள் தங்களுடைய அடுத்த பிரதமர் யார் என்பதை அறிய காத்திருக்கின்றனர்.

ஒருவேளை நடப்பு அரசியல் குழப்பங்களை மனதிற்கொண்டு மலேசிய மாமன்னர் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :