இந்தியாவுக்கு வழிகாட்டிய ஜெயலலிதாவின் கனவு: தொட்டில் குழந்தை திட்டத்தின் இன்றைய நிலை என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விஷ்ணுப்ரியா ராஜசேகர்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலையை ஒழிக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம்தான் தொட்டில் குழந்தை திட்டம்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று ’பெண்கள் பாதுகாப்பு தினமாக’ தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சரி ஜெயலலிதாவின் கனவுதிட்டமான இத்திட்டத்தின் இன்றைய நிலை என்பதை விரிவாக பேசுகிறது இந்தக் கட்டுரை.
நோக்கம் நிறைவேறியதா?
இந்த தொட்டில் குழந்தை திட்டத்தின் விளைவாக 2001ஆம் ஆண்டில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தை என்று இருந்த குழந்தை பாலின விகிதம் 2011ஆம் ஆண்டில் 943ஆக உயர்ந்துள்ளது என்கிறது அரசு தகவல்.
ஆனால் இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது ஆனால் தற்போது அந்த திட்டம் செயல்பட்டு வருகிறதா என்பது சந்தேகமாகவே உள்ளது என்கிறார்கள் குழந்தைகள் நல ஆர்வலர்கள்.

பட மூலாதாரம், Getty Images
"சேலம் மாவட்டத்தில் 2001-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி குழந்தை பாலின விகிதம் (1000 ஆண் குழந்தைகளுக்கு) 851 ஆக இருந்தது. அது 2011-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது 917 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், மதுரை மாவட்டத்தில் 926-ல் இருந்து 939 ஆகவும், தேனி மாவட்டத்தில் 891-ல் இருந்து 937 ஆகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் 930-ல் இருந்து 942 ஆகவும், தருமபுரி மாவட்டத்தில் 826-ல் இருந்து 911 ஆகவும் அதிகரித்துள்ளது," இது மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு சொன்ன தகவல்.
கடந்த வருடம், குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக பணியாற்றி வரும் சமக்கல்வி இயக்கம் என்னும் அமைப்பு தமிழகத்தின் பத்து மாவட்டங்களில் நடத்திய ஆய்வில், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் மிக குறைந்த குழந்தை பாலின விகிதம் இருப்பதாக தெரியவந்தது.
அந்த ஆய்வில், திருவண்ணாமலை மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் முறையே குழந்தை பாலின விகிதம் 888 மற்றும் 884ஆக உள்ளது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த இருமாவட்டங்களுமே தொட்டில் குழந்தை நடைமுறையில் உள்ள மாவட்டங்களாகும்.
அதிகரித்ததா குழந்தை பாலின விகிதம்?

பட மூலாதாரம், Getty Images
"இந்த திட்டம் தொடக்கத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. ஆனால் சமீப காலங்களில் எத்தனை குழந்தைகள் தொட்டிலில் வந்தது எத்தனை குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டன என்பதற்கான எண்ணிக்கையில் பொருத்தம் இல்லை," என்கிறார் தமிழ்நாடு குழந்தை உரிமை கண்காணிப்பகத்தின் ஆண்ட்ரூ.
மாநிலத்தின் குழந்தை பாலின விகிதம் என்பது குறைவாகவே உள்ளது. தொட்டில் குழந்தை திட்டம் என்பது பெண் சிசுக்கொலைகளை தடுத்துள்ளது ஆனால் கருக்கொலைகளை தடுக்கவில்லை என்றே நாம் கூறலாம் என்கிறார் அவர்.
பெண்கள் பாதுகாப்பு மட்டுமல்ல இந்த திட்டத்தினால் சிசுக்கொலைகள் தடுக்கப்பட்டாலும், கருக்கொலைகள் அதிகரித்துள்ளது என்கிறார்கள் ஆர்வலர்கள்.
"தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் நிறைய குழந்தைகள் காப்பாற்றப்பட்டிருப்பதால் சிசுக்கொலை குறைந்துள்ளது என்று நாம் கூறலாம் ஆனால் பெண் குழந்தைகள் கருவில் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது," என்றே நாம் கூற வேண்டும் என்கிறார் ஆண்ட்ரு.
"2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் (Adult Sex Ratio) என்று இருந்தது. ஆனால் குழந்தை பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970ஆக (Child Sex Ratio) மட்டுமே உள்ளது.
தொட்டில் குழந்தை திட்டத்தால் குழந்தைகள் கொல்லப்பட்டது தடுக்கப்பட்டுள்ளது என்பதை பெரியர்வர்களுக்கான பாலின விகிதம் காட்டுகிறது; ஆனால் அதுவே 1000 ஆண்களுக்கு 970ஆக இருக்கும் குழந்தை பாலின விகிதம் 2005 -2011க்கான காலங்களில் அதிக கருக்கொலைகள் நடந்துள்ளது என்பதன் தாக்கமே என்கிறார்," ஆண்ட்ரூ.
தொடரும் கருக்கொலைகள்

பட மூலாதாரம், Getty Images
இந்த தொட்டில் குழந்தை திட்டம் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினாலும், நடைமுறையில் பெண்கள் பாதுகாப்பு என்பது பல அம்சங்களை கொண்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
"தற்போது இந்த திட்டம் இருக்கிறது ஆனால் இல்லை என்பதே இன்றைய நிலை," என்கிறார் குழந்தைகள்நல ஆர்வலர் தேவநேயன்.
"பெண்கள் பூப் போன்றவர்கள் என்ற கற்பிதங்கள் உடைக்கப்பட வேண்டும். இதை எல்லாம் குறித்து பேசாமல் தொட்டில் குழந்தை மட்டும் பயன்படாது."
"மாநிலத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் இன்றும் கருக்கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. தொட்டில் குழந்தை திட்டம் மட்டுமே பெண் பாதுகாப்பை உறுதி செய்துவிடாது. பாலின சமத்துவம், பாலின புரிதல், ஆகியவற்றை குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும் அதுமட்டுமே பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்," என்கிறார் தேவநேயன்.
அதிகரிக்கிறதா சட்டவிரோத முறைகள்?
"தற்போது தொட்டில் குழந்தை திட்டத்தில் வரும் குழந்தைகள் குறைந்துள்ளது என்பதை இரு விதமாக பார்க்க வேண்டும் ஒன்று, இந்த திட்டத்தை பயன்படுத்தும் நடைமுறை சாத்தியம் குறைந்துள்ளது; மற்றொன்று சட்டவிரோத தத்தெடுப்புகள் அதிகரித்துள்ளன என்பதை காட்டுகிறது, என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
"இன்றும் கூட குழந்தைகளை குப்பை தொட்டிகளில் போடும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன; எனவே இந்த திட்டத்துக்கான விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்று கூறலாம்; மேலும் குழந்தையை தங்களின் அடையாளம் தெரியாமல் போட விரும்புவர்களால் அது முடிவதில்லை என்பதாலும் தொட்டிலில் குழந்தைகள் வருவது குறைந்துள்ளது," என்கிறார் ஆண்ட்ரூ.
கர்ப்ப காலத்தில் பதிவை சரியாக பின்பற்றினால், முறைகேடற்ற தத்தெடுப்பு, எடை குறைவு குழந்தைகள், ரத்த சோகை குழந்தை ஆகியவற்றை கண்டறிந்துவிடலாம். ஆனால் கர்ப்பகால பராமரிப்பு மற்றும் தொட்டில் குழந்தை திட்டத்திற்கான தொடர்பு குறித்து இங்கு யாரும் யோசிப்பதில்லை. இதை கலைய வேண்டும் என்கிறார் தேவநேயன்.
’பயன் தந்த திட்டம்’
இந்த திட்டம் குறிப்பாக பெண் குழந்தைகளின் மீது கவனம் செலுத்தி வருகிறது குறிப்பாக 2001ஆம் ஆண்டில் பெண் கல்வி விகிதம் 64.55% இருந்த நிலையில் 2011ஆம் ஆண்டில் 73.44% ஆக உயர்ந்துள்ளது என்கிறது சமூக நல வளர்ச்சித் துறையின் வலைதளம்.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட 90களின் சமயங்களில் மதுரையில் பத்திரிகையாளராக இருந்த இளங்கோவன் , "தொட்டிலில் போடப்பட்ட குழந்தை கல்லூரி செல்லும் வரையும் கூட கண்காணிக்கப்பட்டது," என்கிறார்
"இந்த திட்டம் மூலம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும்கூட குழந்தைகள் தத்து கொடுக்கப்பட்டுள்ளன,"
சேலம் பகுதியில் அதிகம் சிசுக்கொலை நடப்பதால்தான் அந்த பகுதியில் முதன்முதலாக தொட்டில் குழந்தை திட்டம் தொடங்கப்பட்டது. அதன் நோக்கம் நன்றாகவே நிறைவேறியது என்கிறார் பத்திரிகையாளர் இளங்கோவன்.
ஒருங்கிணைந்த செயல்பாடு தேவை

பட மூலாதாரம், Getty Images
"தொட்டில் குழந்தை திட்டம் போன்ற திட்டங்கள் வந்தாலும் சரி, பெண்கள் பாதுகாப்பு தினம் என்று அழைக்கப்பட்டாலும் சரி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் என்று குறைகிறதோ அன்றே இம்மாதிரியான திட்டங்கள் முழுமையான வெற்றியை அடைந்தது என்றே கூறலாம்," என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கிராம அளவில் குழந்தைகளை பாதுகாக்கும் குழுக்கள் வலுப்படுத்தப்பட்டால், குழந்தை பாதுகாப்புகள் தொடர்பான பெரிய அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வாகிவிடும், அதேபோல் நகரங்களில், ’அருகாமை குழந்தை பாதுகாப்பு குழுக்கள்’ ஆதாவது ஒவ்வொரு அடுக்குமாடி வீடுகளிலும் குழந்தை பாதுகாப்பு குழுக்கள் இருக்க வேண்டும் என்கிறார் தேவநேயன்.
"கலாசார மாற்றத்திற்கான அம்சங்கள் கல்வியில் சேர்க்கப்பட வேண்டும்,"என்பதும் பெண் பாதுகாப்பான அடித்தளமே என்றும் அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
- உங்கள் வாகனத்திற்கு இன்னும் 'ஃபாஸ்ட்டேக்' வாங்கவில்லையா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்
- சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார் ஜெயலலிதா?- 68 சுவாரஸ்ய தகவல்கள்
- "இது எங்கள் காடு, எங்கள் நிலம்" - அமேசான் ஆதிக்குடி பெண்களின் போராட்டம்
- மலேசிய அரசியல்: ‘கூட்டாளிகள் துரோகம் இழைத்துவிட்டனர்‘ -அன்வார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













