coronavirus news: சீனாவுடன் தொடர்பே இல்லாத நாடுகளுக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது? - உலக சுகாதார அமைப்பு கவலை

கவலையில் உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம், EPA

சீனாவுடன் எந்த தொடர்பும் இல்லாது இருக்கும் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

இரானில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் இரண்டு பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதனோம் கிப்ரயெசூஸ், வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

News image

"இரானில் பல நகரங்களில்" ஏற்கனவே வைரஸ் தொற்று பாதிப்பு பரவி இருக்கலாம் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இதுவரை இரானில் கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ், சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்ற விஷயம்தான் கவலையளிக்கிறது என்றார்.

"கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்படவருன் நேரடி தொடர்பு இல்லை. சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி சில நாடுகளுக்கு இத்தொற்று பரவுகிறது என்பது புரியவில்லை. முக்கியமாக இரானில் தற்போது அதிகமாகும் உயிரிழப்புகள் மற்றும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக இருக்கிறது," என்று டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

கவலையில் உலக சுகாதார அமைப்பு

பட மூலாதாரம், AFP

சீனாவில் மட்டும் இதுவரை கொரோனாவால் 2,239 உயிரிழந்துள்ளனர். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்னர்.

கொரோனா: தற்போதைய நிலை என்ன?

  • இரானில் கொரோனாவால் 4 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை அங்கு 18 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், எகிப்து போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • கனடாவில் இதுவரை வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட 9 பேரில், ஒருவர் இரானில் இருந்து திரும்பியவர் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
  • இரான் மற்றும் லெபனான் ஆகிய இரு நாடுகளும், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனைக்கான வசதிளை வைத்திருக்கின்றன. மேலும் உதவிக்காக உலக சுகாதார அமைப்பை இந்த நாடுகள் நாடியுள்ளன.
Presentational grey line

பயம் இருக்கிறது; ஊருக்கு வர விருப்பமில்லை- Singapore Tamil worker | corona virus | malaysia |

Presentational grey line
  • ஆனால், வைரஸ் தொற்றை கண்டறிய வசதி இல்லாமல், வலுவில்லாத சுகாதார அமைப்பை கொண்டுள்ள நாடுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கவலையுற்றுள்ளது.
  • சீனாவிற்கு வெளியே 26 நாடுகளில் இதுவரை 1,152 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போல சீனாவிற்கு வெளியே இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • வெளிக்கிழமையன்று இத்தாலியில் கொரோனா வைரஸால் நிகழ்ந்த முதல் மரணம் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டில் 16 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • தென் கொரியாவில் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 204 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: