You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாதீர்: நாடு திரும்பும் மலேசியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்
மலேசியாவில் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கொரோனா கிருமி பாதிப்பு உள்ள பகுதிகளில் இருந்து நாடு திரும்பும் மலேசியர்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவில் உள்ள 78 மலேசியக் குடிமக்களைத் திரும்ப அழைத்துக் கொள்வது தொடர்பாக, சீன அரசுத் தரப்புடன் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு நாடு திரும்பும் 78 பேரும் கிருமித் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியான பிறகே வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
78 மலேசியக் குடிமக்களைச் சீனாவிலிருந்து அழைத்து வருவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும், கொரோனா கிருமிப் பரவல் குறித்து அக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் பிரதமர் மகாதீர் தெரிவித்தார்.
அண்மையில் சீனாவின் வுஹான் நகரில் தங்கியிருந்த ஜப்பானியர்களை அந்நாட்டு அரசு தனி விமானம் மூலம் திரும்ப அழைத்துக் கொண்டது. மொத்தம் 206 ஜப்பான் குடிமக்கள் நாடு திரும்பினர்.
இந்நிலையில் சீனாவிலிருந்து நாடு திரும்பும் மலேசியர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவ ரீதியில் கண்காணிக்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில்தான் தங்க வைக்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.
கிருமித் தொற்று பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து திரும்புவோர் புலாவ் ஜெரிஜாக் 'லெப்ரசி காலனி' (leprosy colony) எனக் குறிப்பிடப்படும் இடத்தில் தங்க வைக்கப்படுவார்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அதற்கு அவசியமில்லை என்றும், சந்தேக நபர்கள் மருத்துவமனைகளில்தான் தங்க வைக்கப்படுவர் என்றும் கூறினார்.
இந்தக் காலனியானது முன்பு உயர்பாதுகாப்புடன் கூடிய சிறைச்சாலையாக விளங்கியது; கடந்த 1993இல் மூடப்பட்டது.
சீனாவுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்பும் மலேசியா
இந்நிலையில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் வுஹான் பகுதிக்கு உணவு, முகக்கவச உறை, கையுறைகள் ஆகியவற்றை அனுப்பி உதவிக்கரம் நீட்ட மலேசியா விரும்புகிறது என்றும் மகாதீர் தெரிவித்தார்.
"வுஹான் பகுதியில் உணவுப் பொருட்களின் கையிருப்பு குறைந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு உதவ விரும்புகிறோம். வுஹானில் தங்கியுள்ள மலேசியர்களை விமானம் மூலம் திரும்ப அழைத்துக் கொள்ள அனுமதி கிடைத்தால் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்கத் தயாராக உள்ளோம். மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளது," என்றார் மகாதீர்.
சீனாவில் தனிமைப்படுத்தப்பட்ட மலிண்டோ விமானம்; 31 விமானப் பயணிகள்
இதற்கிடையே மலேசியாவில் இருந்து சீனாவின் டியான்ஜின் நகருக்குச் சென்ற விமானத்தில் பயணம் மேற்கொண்ட 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 16 பேர் மலேசியர்கள்.
கடந்த 25ஆம் தேதி மலிண்டோ நிறுவனத்தின் விமானம் மலேசியாவின் சபா மாநிலத்தில் இருந்து சீனாவின் டியான்ஜின் நகருக்குச் சென்றது.
விமானம் அங்கு தரையிறங்கியதும் அதில் பயணம் மேற்கொண்ட 31 பயணிகளும் விமானப் பணியாளர்களும் உடனடியாக அருகில் உள்ள தங்கு விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். விமானத்தில் வந்த 3 பயணிகளுக்குக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனை மூலம் கடந்த 26ஆம் தேதி ஒரு பயணிக்குக் கொரோனா கிருமித் தொற்று இருப்பது உறுதியானது. 71 வயதான அந்த ஆடவர் சீனாவின் வுஹான் நகரிலிருந்து மலேசியாவுக்குக் கடந்த 19ஆம் தேதி பயணம் செய்துள்ளார். இதேபோல் 29ஆம் தேதி காலை இன்னொரு பயணிக்குக் கிருமித் தொற்று இருப்பதும் உறுதியாகி உள்ளது. இவரும் வுஹான் பகுதியைச் சேர்ந்தவர்.
இருவருக்கு கிருமித் தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அந்தத் தஙுகு விடுதி மூடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இருவரும் டியான்ஜின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே கடந்த 24ஆம் தேதியன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனாவுக்குச் சென்ற விமானத்தின் பணியாளர்கள் 6 பேர் அங்கு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
பொய்த் தகவல் பரப்பிய பல்கலை மாணவர் உட்பட 4 பேர் கைது
இதற்கிடையே கொரோனா கிருமி குறித்துப் பொய்யான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் 4 பேர் கைதாகியுள்ளனர். இவர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இக்குற்றத்தைச் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இவர்களில் 26 வயதான பல்கலைக்கழக மாணவர், 2 மருந்தக உதவியாளர்கள் (மருந்தாளுநர்கள்) அடங்குவர். அவர்களிடமிருந்து 4 திறன்பேசிகள், 5 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் பொய்யான தகவல் பரப்பிய மேலும் 3 பேர் தேடப்பட்டு வருவதாகவும் மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமூக வலைத்தளப் பதிவுகளைத் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் காவல்துறை மேலும் தெரிவித்துள்ளது.
"கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக பொய்யான தகவல்களைப் பரப்பக்கூடாது. மலேசியாவில் சுதந்திரம் உள்ளது. ஆனால், தவறான நோக்கத்துடன் பொய்த் தகவல்கள் பரப்புவதைப் பொறுத்துக்கொள்ள இயலாது," என பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
தைப்பூச விழா: உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலை பின்பற்றும் மலேசியா
மலேசியாவில் இந்தாண்டு தைப்பூசத் திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென மலேசியத் துணைப் பிரதமர் வான் அசீசா தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியாவில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு பிப்ரவரி 8ஆம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இச்சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவிலில் திரள்வார்கள். கடந்தாண்டு 16 லட்சம் பேர் தைப்பூச விழாவில் கலந்து கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய துணைப் பிரதமர் வான் அசீசா கொரோனா கிருமி பாதிப்பு இருக்கும் சூழ்நிலையில் லட்சக்கணக்கானோர் ஓரிடத்தில் கூடுவது தொடர்பில் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தல்கள்படி செயல்பட இருப்பதாகத் தெரிவித்தார்.
"உலகச் சுகாதார அமைப்பு இத்தகைய ஒன்றுகூடல்கள் கூடாது என அறிவுறுத்தும் பட்சத்தில் அதுகுறித்து மலேசிய அரசு அறிவிப்பு வெளியிடும்," என்றார் வான் அசீசா.
தீவிர கிருமித் தொற்று போன்ற பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சமயங்களில் ஒலிம்பிக் போட்டிகள், ஹஜ் புனிதப் பயணம் ஆகியவற்றின்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது உலகச் சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலாக உள்ளது.
இந்நிலையில், மலேசியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் பார்க்க விரும்பும் இடங்களில் அவர்களை அனுமதிக்க வேண்டாம் என அரசு உத்தரவிடவில்லை என பிரதமர் மகாதீர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா மையங்களும், பள்ளிவாசல்களும் மூடப்பட்டது எனில் அது பொறுப்பற்ற நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தலைநகர் கோலாலம்பூர், புத்ரா ஜெயாவில் மூன்று பள்ளிவாசல்கள் மூடப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் மலேசியாவுக்கு முன்பே வந்து சேர்ந்த சுற்றுலா பயணிகள், சுற்றுலாவுக்குரிய இடங்களில் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
"சீனாவில் உள்ள மலேசியர்கள் நலமாக உள்ளனர்"
இதற்கிடையே, சீனாவின் வுஹான் பகுதியில் தங்கியுள்ள மலேசியர்கள் யாருக்கும் கொரோனா கிருமித்தொற்று இல்லை என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
அங்குள்ள மலேசியர்களை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேசியதாக சீனாவுக்கான மலேசிய தூதர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் பிற பகுதிகளிலும் உள்ள மலேசியர்களை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்ட அவர், சீனாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலேசிய தூதரக அலுவலகங்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், மலேசியாவின் அண்டை நாடுகளான சிங்கப்பூரில் 10 பேரும், தாய்லாந்தில் 14 பேரும், வியட்நாமில் 2 பேரும் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: