ஆப்கானிஸ்தான்: பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்ததா?

ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, (சித்தரிப்பு படம்)

கிழக்கு ஆப்கானிஸ்தானில் நொறுங்கி விழுந்ததாக கூறப்படும் பயணிகள் விமானம் தொடர்பான விசாரணையில் அமெரிக்க ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு தென் மேற்கே உள்ள கஜ்னி மாகாணத்தின் டே யாக் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ஆரியானா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்ததாக அந்த மாகாணத்தை சேர்ந்த அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்திருந்தார்.

News image

தொழில்நுட்ப கோளாறு தொடர்பான காரணங்களால் இந்த விமானம் தீப்பிடித்து, நொறுங்கி விழுந்ததாக அரசு செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.

இந்த பயணிகள் விமானம் ஆரியானா விமான சேவை நிறுவனத்தை சேர்ந்தது என்று தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் இதனை மறுத்துள்ளது.

''எங்களது நிறுவனத்தை சேர்ந்த விமானங்கள் திட்டமிடப்பட்ட இடங்களை சென்றடைந்துவிட்டன. அதனால் தற்போது நொறுங்கி விழுந்த விமானம் ஆரியானா விமான சேவை நிறுவனத்தை சேர்ந்தது அல்ல'' என்று அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் விமானப் போக்குவரத்து ஆணையமும் இப்படி எந்த ஒரு விமான விபத்தும் நடைபெற்றுள்ளதாக தங்களுக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளதால் இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

தாலிபான் கட்டுப்பாட்டு பகுதி

ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்ததா?

விமான விபத்து நடைபெற்றதாக கூறப்படும் கஜ்னி மாகாணத்தின் டே யாக் மாவட்டம் தாலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க விமானப்படையின் குறியீட்டுடன் கூடிய விமானம் ஒன்றின் புகைப்படத்தை தாலிபான் அமைப்பு தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானம் என்று கூறி இணையத்தில் பரவி வரும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து பார்க்கும்போது, இது பாம்பார்டியர் இ-11ஏ ஜெட் ரக விமானம் என்றும் இதை ஆப்கானிஸ்தானில் உளவு பணியை மேற்கொள்வதற்காக அமெரிக்க விமானப்படை பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர், "இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தெரியும். தற்போதுள்ள சூழ்நிலையில், இது அமெரிக்காவுக்கு சொந்தமானதா என்பதை எங்களால் உறுதிசெய்ய முடியவில்லை" என்று கூறியுள்ளதாக மிலிட்டரி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: