அமெரிக்க படையினருக்கு இரான் நடத்திய தாக்குதலால் மூளை பாதிப்பு மற்றும் பிற செய்திகள்

இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் இரான் நடத்திய தாக்குதலில் 34 அமெரிக்க படையினருக்கு, அதிர்ச்சியால் மூளைக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.

17 பேர் இன்னும் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமை அலுவலகமான பெண்டகனின் செய்தித்தொடர்பாளர் கூறினார்.

இரான் ராணுவ ஜெனரல் காசெம் சுலேமானீ கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது கடந்த ஜனவரி 8ஆம் தேதி இரான் தாக்குதல் நடத்தியது.

இதில் அமெரிக்கர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்பதால் இரான் மீது பதில் தாக்குதல் நடத்தப் போவதில்லை என்று அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால், இரான் நடத்திய தாக்குதலால் 11 அமெரிக்க வீரர்கள் அதிர்ச்சியால் ஏற்பட்ட மூளை பாதிப்புகள் (Tramatic Brain Injury) காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க வந்த டிரம்பிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "அந்த அமெரிக்கர்களுக்கு தலைவலி போன்ற சிறு பிரச்சனைகள் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால், தீவிர பிரச்சனைகள் என்று ஏதுமில்லை. நான் இதற்கு முன் பார்த்த காயங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமில்லை," என்று தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறையின் செய்தித்தொடர்பாளர் ஜோனாதன் ஹாஃப்மேன், "தாக்குதலில் பாதிக்கப்பட்ட எட்டு ராணுவ வீரர்கள் மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். ஒன்பது பேர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்," என்றார்.

மேலும் 16 பேர் இராக்கிலும், ஒருவருக்கு குவைத்திலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 17 பேர் மீண்டும் பணிக்கு திரும்பி விட்டதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்திய சர்க்கரை இறக்குமதியை திடீரென அதிகரித்த மலேசியா

ஆக்கிரமிப்பு என்ற ஒற்றைச் சொல் இந்தியா - மலேசியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மறைமுக வர்த்தகப் போரை துவக்கி வைத்திருப்பதாகவே கருத வேண்டியுள்ளது.

'காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளது இந்தியா' என்று மலேசியப் பிரதமர் மகாதீர் தெரிவித்த கருத்தையடுத்து, சுத்திகரிக்கப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய இந்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் மலேசியாவுக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்படும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து வாங்கும் கச்சா சர்க்கரையின் அளவை திடீரென அதிகரித்துள்ளது மலேசியா. இது சர்வதேச வர்த்தக தளத்தில் பல்வேறு தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

திருப்பூரில் தயாரான ஆடைகள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடுகளத்தில்

உலகின் மிகவும் பிரபலமான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்குத் தமிழகத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் செல்லவில்லை என்றபோதும், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆடைகள் போட்டி நடைபெறும் மைதானத்தில் நிறைந்து காணப்படுகின்றன.

இப்போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கும், நடுவர்களுக்கும், பால் கிட்ஸ் (Ball Kids) எனப்படும் உதவியாளர்களுக்கும், திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த ஆடைகள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எரியப்படும் நெகிழிபாட்டில்களை மறுசுழற்சி செய்து, அதில் இருந்து கிடைக்கும் நூலிழைகளைக் கொண்டு (Polyethylene Terephthalate - PET Bottles) தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

வைரஸ் என்றால் என்ன? அவை எவ்வாறு பரவும்?

வைரஸ். இந்த சொல்லை சமீப நாட்களாக அடிக்கடி கேட்டிருப்பீர்கள். வைரஸ் என்பது மிகச்சிறிய புரதங்கள் மற்றும் மரபணு பொருட்களை கொண்டதாகும். உலகில் நூற்றுக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. வைரஸ் தொற்றால்தான் காய்ச்சல், சளி போன்றவையும் ஏற்படுகிறது.

சில வகையான வைரஸ்கள் நேரடியாக ஒரு மனிதரிடம் மற்றொரு மனிதருக்கு பரவும். HIV போன்ற வைரஸ், இதனால் பாதிக்கப்பட்ட நபரருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வதன் மூலம் பரவும்.

21ஆம் நூற்றாண்டில் ஒரு சில வைரஸ் தாக்குதலால் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மிகுந்த கவனம் பெற்றது இபோலா, ஜிகா, நிபா, சார்ஸ் போன்ற வைரஸ்கள்

கனடாவில் தமிழக மாணவி மீது கத்தி, துப்பாக்கியால் தாக்குதல்

கனடாவில் மேற்கல்வி படித்து வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

23 வயதான ரேச்சல் ஆல்பர்ட் எனும் அந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

டொரொண்டோ நகர மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேச்சலை பார்ப்பதற்காக, கனடாவுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அவரது தந்தை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: