You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பூரில் தயாரான ஆடைகள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடுகளத்தில்
உலகின் மிகவும் பிரபலமான கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்குத் தமிழகத்திலிருந்து விளையாட்டு வீரர்கள் செல்லவில்லை என்றபோதும், தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆடைகள் போட்டி நடைபெறும் மைதானத்தில் நிறைந்து காணப்படுகின்றன.
இப்போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கும், நடுவர்களுக்கும், பால் கிட்ஸ் (Ball Kids) எனப்படும் உதவியாளர்களுக்கும், திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆடைகள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் நெகிழிபாட்டில்களை மறுசுழற்சி செய்து, அதில் இருந்து கிடைக்கும் நூலிழைகளைக் கொண்டு (Polyethylene Terephthalate - PET Bottles) தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றுவருகிறது.
திருப்பூர் மாவட்டம், பின்னலாடைத் தொழிலில் சர்வதேச ஆர்டர்கள் பெறுவதில் 3-வது இடத்தில் உள்ளது என்றும் இந்தியாவின் பின்னலாடை தயாரிப்புகளில் சுமார் 50 சதவிகிதம் இங்குதான் தயாரிக்கப்படுகிறது என்றும் திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகள் கூறுகின்றன.
இந்தியாவின் பின்னலாடைத் தலைநகர் என்று அழைக்கப்படும் திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
''இந்த ஆண்டிற்கான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் அமைப்பாளர்களுக்கான மேல்சட்டை, பாவாடை மற்றும் கால்சட்டைகள் (T-shirts, Skirts, shorts & jackets) தயாரித்து அனுப்புவதற்கான ஒப்பந்தம் எங்களுக்குக் கிடைத்ததைப் பெருமைக்குரிய ஒன்றாகக் கருதுகிறோம். குறிப்பாக, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆடைகளை உருவாக்குவதில் நாங்கள் முனைப்புக் காட்டி வருகிறோம். தொழிற்சாலைக்குத் தேவையான 40 சதவிகித மின்சாரத்தைக் காற்றாலை மற்றும் சூரிய ஒளித் தகடுகளின் மூலம் தயாரிக்கிறோம். அந்த வகையில் ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் அமைப்பாளர்களுக்கான ஆடைகளும், நெகிழி பாட்டில்களை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர் (Polyester) நூலிழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை.
''சுற்றுச்சூழலுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் நெகிழி பாட்டில்களை, சூரத் நகரத்தைச் சேர்ந்த நிறுவனம் உலக மறுசுழற்சி தரத்தின் அடிப்படையில் ஆடைகளுக்கான நூலிழைகளாக மாற்றி எங்களுக்கு அனுப்புகின்றது. அதை நாங்கள் ஆடைகளாக வடிவமைத்து ஏற்றுமதி செய்கிறோம்,'' என என்.சி. ஜான் & சன்ஸ் பின்னலாடை நிறுவனத்தின் செயல் அதிகாரி அலெக்சாண்டர் ஜாப் நெரோத் பிபிசி தமிழின் மு. ஹரிஹரனிடம் கூறினார்.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி ஆடைகள் தயாரிப்பதற்கான முறைகள் பயன்படுத்தப்படும் துணியைப் பொறுத்து வேறுபடும். சுமார் 40 ஆயிரம் நெகிழி பாட்டில்களை, சுத்தமாகக் கழுவி, இயந்திர முறையில் துண்டுகளாக வெட்டி, மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட நூல்களைக்கொண்டு, ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் அமைப்பாளர்களுக்கான 25 ஆயிரம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டதாக இவர் தெரிவிக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: