You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு தனியறை தயார்
சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க எட்டு படுக்கைகள் கொண்ட தனியறை தயார் நிலையில் உள்ளது என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் வுகான் மாகாணத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. தற்போதுவரை சீனாவில் இந்த வைரஸ் தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர், 830 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத்தொடங்கினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், அந்த வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கவும் நாடுமுழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளின் தலைமை மருத்துவமனையான ராஜீவ்காந்தி மருத்துவமனையில், இந்த வைரஸை எதிர்கொள்வதற்காக சோதனை மையம், தனி வார்டு தயார் நிலையில் உள்ளது என டீன் ஜெயந்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''கொரோனா வைரஸ் பற்றிய தகவல் கிடைத்ததும், சீனாவிலிருந்து வரும் பயணிகளைச் சோதித்து தமிழகத்திற்குள் அனுப்புவது என அரசு முடிவுசெய்தது. தற்போது விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் முதல்கட்ட பரிசோதனை மையங்கள் இயங்குகின்றன. ஒருவேளை, நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், உடனடி சிகிச்சை தரவேண்டும் என்பதற்காக மருத்துவர்களுக்கு தினமும் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம்,'' என்கிறார் ஜெயந்தி.
கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் குறித்து கேட்டபோது, ''இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. ஒருவேளை, காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் நீடிப்பதாக நோயாளிகள் வந்தால், முதலில் அவர்கள் சமீபத்தில் சீனாவுக்குச் சென்றவர்களா என அவர்களின் பயண விவரங்களை கேட்டறிவோம். பயணம் செய்தவராக இருந்து, தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், வைரஸ் தொற்று இருக்கிறதா என சோதனை செய்த பிறகு, சிகிச்சை அளிப்போம்,'' என்றார்.
பிற வைரஸ் காய்ச்சல் போலவே தும்மல் மூலமாகவும், சளி மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவும் என்று கூறிய அவர், ''கைகளில் சுத்தம் அவசியம். தும்மல் வந்தால், சளி, எச்சில் தெறிக்காமல் கைகளால் மூடிக்கொள்ள வேண்டும். கைகளை உடனடியாக கழுவவேண்டும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படுவது எளிது என்பதால், அவர்கள் நெரிசலான இடங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்,'' என்கிறார்.
காய்ச்சல் வந்தவுடன் பீதியடைய வேண்டாம் என கூறும் மருத்துவர் ஜெயந்தி, ''மூன்று நாட்களுக்கு மேலும் காய்ச்சல் நீடித்தால், உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது சிறந்தது. மூன்று நாட்களை தாண்டியும் உடல்வலி, சளி, காய்ச்சல் நீடித்தால், தாமதிக்காமல் சிகிச்சைக்கு வருவது நல்லது. வீட்டில் தொடர்ந்து சாதாரண காய்ச்சலுக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: