You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சுலேமானீ கொலை: ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலம், அமெரிக்காவுக்கு எதிராக முழக்கம்
அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் புரட்சிகர ராணுவத்தின் தளபதி காசெம் சுலேமானீக்கு அஞ்சலி செலுத்த இரானில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் துக்கத்தில், தங்கள் மார்பை அடித்துக்கொண்டு '' அமெரிக்காவிற்கு மரணம் '' என முழக்கமிட்டனர்.
மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரான் செல்வாக்கு மிகுந்த பிராந்தியமாக உருவெடுத்தற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் இரண்டாவது அதிகாரமிக்க நபராகவும் சுலேமானீ விளங்கினார்.
அவரது படுகொலை இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
சுலேமானீயுடன் நெருங்கிய நட்பு கொண்ட இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா காமெனி, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு கடுமையான பதிலடி இருக்கும் என எச்சரித்துள்ளார். ஈரான் அமெரிக்காவிற்கு எதிரான இணைய தாக்குதல்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை அன்று சுலேமானீ கொல்லப்பட்டதை அறிவித்த அதிபர் டிரம்ப், ''இது மிகவும் ஆபத்தான செயல் என்பதால் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்களான புஷ் மற்றும் ஒபாமாவால் தவிர்க்கப்பட்டது'' என்றார். மேலும் இரானின் முக்கியமான 52 தளங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராகவுள்ளது என்றும் சனிக்கிழமை அன்று தெரிவித்தது.
இரு நாடுகளுக்கிடையே போர் ஏற்படுமோ என்ற கவலை தொடர்ச்சியான பல ட்விட்டர் பதிவுகள் மூலம் எழுகிறது. இரான் அமெரிக்க தளத்தில் உள்ள துருப்புகள் மீது இலக்கு வைத்தால், மிகவும் கடுமையான மற்றும் விரைவாக இராக் மீது தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
சுலேமானீ மீது நடத்தப்பட்ட தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும், எனவே இரானின் கலாசார தளங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அது போர்குற்றமாகும் என இரானின் வெளியுறவு துறை அமைச்சர் முஹம்மத் ஜாவேத் ஜாரிஃப், அதிபர் டிரம்பின் ட்வீட்டர் பதிவுக்கு பதிலளித்தார்.
இரானில் என்ன நடக்கிறது ?
விடியலுக்கு முன்பே சுலேமானீயின் உடல் ஆஹ்வஸ் நகரத்திற்கு கொண்டுவரப்பட்டது. அந்த நகரத்திற்கு ஆயிரக்கணக்கான மக்கள் கருப்பு ஆடை அணிந்தபடி துக்கம் அனுசரிக்க வந்து காத்திருந்தனர். சுலேமானீயின் உடல் ஆஹ்வஸ் நகரத்திற்கு விமானம் மூலம் புறப்படும் முன்பு இரானிய கொடி போர்த்தப்பட்டு இராணுவ மரியாதை செலுத்தப்பட்ட காட்சிகளை இரானின் மாநில செய்தி மையம் ஒன்று வெளியிட்டது.
1980களில் இரான்-இராக் போரின்போதும் , இரானின் அதிஉயர் தலைவருடன் சுலேமானீக்கு இருந்த நட்பும், அவரை மக்கள் மத்தியில் சிறந்த ராணுவ தளபதியாக புகழ் பெற்றுத் தந்தது. எனவே இரானின் தேசிய கொடியை ஏந்தியபடியும் அவற்றின் புகைப்படங்களை ஏந்தியும் மக்கள் கூட்டம் கூட்டமாக அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்தனர்.
இரான் தலைநகர் டெஹ்ரானில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் '' அமெரிக்காவிற்கு மரணம் '' என சில நிமிடங்களுக்கு முழக்கமிட்டதாக ஐ.எஸ்.என்.ஏ செய்தி முகமை கூறுகிறது. '' டிரம்ப், இது தான் இரானின் குரல் , கேட்டுக்கொள் '' என்று சபாநாயகர் அலி லறிஜனி குறிப்பிட்டு, அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிட்டுள்ளார்.
ட்ரோன் தாக்குதலின்போது சுலேமானீயுடன் சேர்ந்து இரான் நாட்டை சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். சுலேமானீயின் உடலோடு ஐந்து பேரின் உடலும் இரானுக்கு கொண்டுவரப்பட்டது.
அமெரிக்கா கூடுதலாக 3000 துருப்புகளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மேலும் அமெரிக்க குடிமக்களை இராக்கில் இருந்து வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெஹ்ரான் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்ட சுலேமானீயின் உடலுக்கு, இரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு, நகரம் முழுவதும் இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ளது. பிறகு செவ்வாய்கிழமை அன்று இறுதி சடங்குகளுக்காக கோம் என்ற புனித தலத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இரான் முழுவதும் சுலேமானீயின் மரணத்திற்கு துக்கம் அனுசரிக்கப்பட்டாலும், சிறியா மற்றும் இராக்கின் நகரவீதிகளில் சுலேமானீயின் மரணத்தை மக்கள் கொண்டாடுகின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: